513. குர்பானி நாட்கள் எத்தனை?

இவ்வசனத்தில் (22:28) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஹஜ்ஜின் போது கால்நடைகளைக் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்றும், குறிப்பிட்ட நாட்கள் என்று பன்மையாகச் சொல்லப்பட்டுள்ளதால் குர்பானிக்கு உரிய நாள் ஹஜ்ஜுப் பெருநாள் மட்டுமல்ல; அதை ஒட்டிய மூன்று நாட்களும் ஆகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

மேலும் குர்பானிக்குரிய நாட்கள் துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

அந்த ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

ஆனால் அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

முதலாவது ஹதீஸ்

இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் அறிவிப்பதாக சுலைமான் பின் மூஸா என்பார் கூறுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுபைர் பின் முத்இம் அவர்களை சுலைமான் பின் மூஸா சந்தித்ததில்லை என்பதால் இது அறிவிப்பாளர் இடையே தொடர்பு அறுந்த ஹதீஸாகும்.

சுலைமான் பின் மூஸா எந்த நபித்தோழரையும் சந்தித்ததில்லை என்று புகாரி கூறியதாக திர்மிதி தெரிவிக்கிறார்.

நூல் : திர்மிதி அவர்களின் அல் இலல் அல் கபீர்

சுலைமான் பின் மூஸா ஒரு நபித்தோழரையும் சந்தித்ததில்லை என்று புகாரி கூறியதாக பைஹகி கூறுகிறார்.

நூல் : பைஹகியின் மஃரிஃபதுஸ் ஸுனனி வல் ஆஸார்

ஜுபைர் பின் முத்இம் அவர்களை சுலமான் பின் மூஸா அடையவில்லை என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

நூல் : நஸ்புர் ராயா

இதன் அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

நூல் : ஃபத்ஹுல் பாரி

இரண்டாவது ஹதீஸ்

இந்தக் கருத்தில் உள்ள மற்றொரு ஹதீஸ் தப்ரானி அவர்களின் அல்கபீர் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் சுவைத் பின் அப்துல் அஸீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

இவர் விடப்பட்டவர் (அதாவது பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர்) என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவர் நம்பகமானவர் அல்ல, பலவீனமானவர் என்று இப்னு மயீன், இப்னு சஅது, புகாரி, நஸாயீ, அபூஹாத்தம், யஃகூப் பின் சுஃப்யான், ஹாகிம், இப்னு ஹிப்பான், பஸ்ஸார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைப்பவர் என்று திர்மிதீ கூறுகிறார்.

 நூல் : இப்னு ஹஜர் அவர்களின் தஹ்தீப்

மூன்றாவது ஹதீஸ்

இதே கருத்துடைய மற்றொரு ஹதீஸை இப்னு ஹிப்பான், இப்னு அதீ, பஸ்ஸார் ஆகிய அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர். இதை அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பார் அறிவிக்கிறார்.

இந்த ஹதீஸை ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுசைன் அறிவிக்கிறார். ஆனால் இவர் அந்த நபித்தோழரைச் சந்தித்ததில்லை என்று பஸ்ஸார் கூறுகிறார்.

நான்காவது ஹதீஸ்

இதே கருத்துடைய மற்றொரு ஹதீஸை தாரகுத்னீ, பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸ் நம்பகமான அறிவிப்பாளர்களைக் கொண்டது என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

தஷ்ரீகுடைய நாட்களில் அறுத்துப் பலியிடலாம் என்ற ஹதீஸை அஹ்மத் பதிவு செய்துள்ளார். இது அறிவிப்பாளர் தொடர்பு அறுந்ததாகும். ஆனால் தாரகுத்னீ தொடர்பு அறுபடாத ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

நூல் : ஃபத்ஹுல் பாரி

அந்த ஹதீஸ் இது தான்.

இந்த அறிவிப்பாளர் தொடர் நம்பகமானவர்களைக் கொண்டது என்று இப்னு ஹஜர் கூறுவது முற்றிலும் தவறாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் நம்பகமானவர் அல்ல. இப்னு ஹஜர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் பிரபலமானவர்கள் பெயரிலும், யாரென அறியப்படாதவர்கள் பெயரிலும் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களில் இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

நூல் : அல்மஜ்ரூஹீன்

அஹ்மத் பின் ஈஸா அல்கஷ்ஷாப் என்பார் அம்ரு பின் ஸலமா வழியாக பொய்யான பல செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ கூறுகிறார்.

நூல் : அல்காமில்

மேற்கண்ட ஹதீஸும் அம்ரு பின் ஸலமா வழியாகவே அவர் அறிவிப்பதாக உள்ளது.

இறைச்சி சாப்பிடும் போது மனதுக்கு நிறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல் க‌ஷ்ஷாப் எனும் பெரும் பொய்யர் இடம் பெற்றுள்ளார்.

நூல் மஃரிபது தத்கிரா

அல்லாஹ்வின் நம்பிக்கைக்கு உரியவர்கள் நான், ஜிப்ரீல், முஆவியா ஆகிய மூவர் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் இடம் பெற்றுள்ளார். இவர் பெரும் பொய்யராவார்.

நூல் : மஃரிஃபது தத்கிரா

அஹ்மத் பின் ஈஸாவின் ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்று சுயூத்தி கூறுகிறார்.

நூல் : அல் லஆலில் மஸ்னூஆ

இப்படி இன்னும் பலர் இவரைக் கடும் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

ஐந்தாவது ஹதீஸ்

தஷ்ரீகுடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல் : பைஹகீ

இதை முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் என்றும், ஹதீஸ்களைத் திருடி தன் பெயரில் அறிவிப்பவர் என்றும் பல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இதனால் இவர் பலவீனமானவர் என்று பைஹகீ, இப்னு ஹிப்பான், ஸாஜீ உள்ளிட்ட பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்கள் இவ்வளவு தான். இவை அனைத்துமே பலவீனமாக உள்ளன.

மற்றொரு ஹதீஸ்

நான்கு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்துள்ளவர்கள் தஷ்ரீகுடைய நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

தஷ்ரீகுடைய நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

உன்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்பது இந்த நாட்களில் அறுத்துப் பலியிடலாம் என்ற கருத்தைத் தரவில்லை. இதன் கருத்து என்ன என்பது மற்றொரு ஹதீஸில் இருந்து தெளிவாகும்.

இந்த நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள்; எனவே இந்நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : அஹ்மத்

உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்பதன் பொருள் இந்த நாட்களில் நோன்பு வைக்கக் கூடாது என்பது தான். இந்த நாட்களில் அறுக்கலாம் என்பதல்ல என்று அல்லாஹ்வின் தூதரே இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

மேலும் தஷ்ரீக் என்ற சொல்லுக்கு இறைச்சியைத் துண்டுகளாக ஆக்கி காயப் போடுதல் என்பது பொருள். இந்த நாட்களில் இறைச்சியைக் காயப் போடும் பணிகள் உள்ளதால் தான் இந்த நாட்கள் தஷ்ரீக் நாட்கள் எனப்படுகின்றன.

எந்த நாட்களை உண்பதற்குரிய நாட்கள் என்று மார்க்கம் சொல்கிறதோ அன்றைய தினம் நோன்பு வைக்கலாகாது என்பது தான் பொருளாகும்.

அடுத்து 22:28 வசனத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதாக வாதிடுகின்றனர்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

திருக்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் இருந்து குர்பானி ஹஜ் பெருநாளில் மட்டுமல்ல; அதைத் தொடர்ந்த மூன்று நாட்களும் கொடுக்கலாம். அதனால் தான் குறிப்பிட்ட நாட்களில் என பன்மையாகக் கூறப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இவர்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதையும், குர்பானியை ‎இவ்வசனம் குறிக்காது என்பதையும் மிக எளிதாக நாம் புரிந்து ‎கொள்ளலாம்.‎

இவ்வசனம் ஹஜ்ஜுக்கு அழைப்பு விட்டு ஹாஜிகள் செய்யும் ‎காரியங்கள் யாவை என்பது குறித்து பேசும் வசனமாகும்.

இதை யாரும் ‎மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது.‎

ஹஜ்ஜுடைய காரியங்களைப் பேசும் வனங்களில் குர்பானியைக் ‎குறித்துப் பேசுவதாக இருந்தால் ஹஜ்ஜின் கடமைகளில் குர்பானியும் ‎அடங்கி இருக்க வேண்டும்.

ஆனால் ஹஜ், உம்ராவைச் சேர்த்து ‎செய்யும் போது தான் அறுத்துப் பலியிடுதல் கடமை. அது குர்பானி அல்ல

ஹஜ் மட்டும் ‎ஒருவர் செய்தால் குர்பானி கடமை இல்லை. ‎

இது அனைத்து பிரிவினரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்ட ஹஜ்ஜின் ‎சட்டமாகும்.‎

‎ஹஜ்ஜையும், உம்ராவையும் ‎தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட ‎வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் ‎‎(ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து ‎முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் ‎யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை ‎அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து ‎கொள்ளுங்கள்! ‎

திருக்குர்ஆன் 2:196

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்குப் பலியிடுதல் ‎எனும் பரிகாரம் உண்டு. அது இயலாவிட்டால் பரிகாரமாக மூன்று ‎நாட்கள் ஹஜ்ஜிலும், ஏழு நாட்கள் ஊர் சென்ற பின்பும் நோன்பு நோற்க ‎வேண்டும். இவ்வாறு பத்து நோன்புகள் இதற்கான பரிகாரமாகும்.‎

ஹஜ் மட்டும் செய்பவருக்கு குர்பானி கிடையாது என்பது ‎இவ்வசனத்தில் இருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.‎

குர்பானியைப் பற்றித் தான் ‎இவ்வசனம் பேசுகிறது என்று வாதம் செய்பவர்கள் ஹஜ்ஜுக்கு குர்பானி ‎அவசியம் என்று சொல்ல வேண்டும். அப்படி அவர்களால் சொல்ல ‎முடியாது.‎

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்தல் என்பது தான் இதன் பொருளாகும். ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் தவாஃப், தல்பியா, திக்ரு, தக்பீர் என அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறோம்.

வேறு விதமாகச் சொல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதற்கு இரு வகையாக பொருள் கொள்ள வாசகம் இடம் தருகிறது.

குறிப்பிட்ட நாட்களில் பிராணிகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றும் வாசக அமைப்பின்படி பொருள் கொள்ளலாம்.

பிராணிகளை நமக்கு உணவாக ஆக்கியதற்கு நன்றியாக அல்லாஹ்வின் பெயர் கூறி அவனைப் போற்றிப் புகழுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இதற்கும் வாசக அமைப்பு இடம் தருகிறது.

முதல் வகையான கருத்தை நாம் ஏற்றால் ஹஜ்ஜின் கடமைகளில் அல்லது அதன் சுன்னத்களில் குர்பானியும் அடங்கும் என்ற முடிவு கிடைக்கும்.

ஆனால் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ்ஜுக்கும், குர்பானிக்கும் சம்மந்தம் இல்லை என்பதில் ஒட்டு மொத்த உம்மத்தும் ஒரே கருத்தில் உள்ளார்கள்.

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்கு மட்டும் தான் குர்பானி உண்டு; அது கூட இயன்றால் தான் கொடுக்க வேண்டும். இயலாவிட்டால் பத்து நோன்பு நோற்கலாம். எனவே இது கூட குர்பானியில் வராது. குர்பானி கொடுக்க முடியாதவர் அதற்குப் பதிலாக நோன்பு நோற்கலாம் என்று சட்டமில்லை.

இந்தப் பலியிடுதல் ஹஜ் உம்ராவைச் சேர்த்துச் செய்வதற்கு உரிய பரிகாரமாகும்.

எனவே ஹஜ்ஜுக்கு மக்களை அழைக்கும் வசனத்தில் கூறப்பட்ட குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதற்கு குர்பானி கொடுத்தல் என்ற அர்த்தம் கொள்ள முடியாது. அப்படி அர்த்தம் கொள்வார்களானால் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் எனக் கூற வேண்டும். அப்படி அவர்களே கூறுவதில்லை.

இந்தப் பொருள் மேலே நாம் எடுத்துக் காட்டிய 2:136 வசனத்துக்கு முரணாக உள்ளதால் இந்த வசனத்திற்கு குர்பானி எனப் பொருள் கொள்ள முடியாது.

அப்படியானால் நாம் இரண்டாவதாகச் சொன்ன பொருள் தான் கொடுக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும்.

இப்படி அல்லாஹ்வை ஒரு நாள் மட்டும் புகழக் கூடாது. ஹஜ்ஜின் கிரியைகள் நடக்கும் எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். இதற்காகவே குறிப்பிட்ட நாட்களில் என்று பன்மையாக கூறப்பட்டுள்ளது.

அறியப்பட்ட நாட்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளதால் குர்பானிக்கு பல நாட்கள் எனவும் வாதம் வைக்கின்றனர்.

நாட்கள் என்று பன்மையாக இதில் சொல்லப்பட்டுள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களைத் தான் குறிக்கிறது என்று வாதிடுவோர் அறியப்பட்ட நாட்கள் நான்கு தான் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. அறியப்பட்ட நாட்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்த நாட்கள் என்பது இதன் கருத்தாகும்.

அறிந்து வைத்திருந்த அக்காலத்து நபித்தோழர்கள் இது தஷ்ரீகுடைய நான்கு நாட்கள் தான் என்று விளக்கம் சொல்லவில்லை.

இதற்கு மாற்றமாகத்தான் கூறியுள்ளனர்.

அறியப்பட்ட நாட்கள் என்பது 9,10,11,12,13 ஆகிய நாட்கள் என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார்.

குர்பானியுடன் இப்னு அப்பாஸ் இதைச் சம்மந்தப்படுத்தவில்லை. ஏனெனில் ஒன்பதாம் நாள் குர்பானி கொடுக்க முடியாது.

ஹஸன் கதாதா ஆகியோர் அறியப்பட்ட நாட்கள் என்பது   துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர். அதிகமான அறிஞர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர்.

இவர்களும் அறியப்பட்ட நாட்கள் என்பதை குர்பானியுடன் சம்மந்தப்படுத்தவில்லை. ஏனெனில் முதல் ஒன்பது நாட்கள் குர்பானி கொடுக்க முடியாது. மேலும் இவர்கள் தஷ்ரீகுடைய நாட்களையும் அறியப்பட்ட நாட்களில் சேர்க்கவில்லை

துல்ஹஜ் பத்து நாட்களுக்கு சிறப்பு உள்ள ஹதீஸை எடுத்துக் காட்டி அறியப்பட்ட நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்று இப்னு அப்பாஸ், அபூ மூஸல் அஷ்அரி, முஜாஹித், கதாதா, அதா, ஸயீத் பின் ஜுபைர், ஹஸன், ளஹ்ஹாக், அதாவுல் குராசானி, இப்ராஹீம் நகயீ, ஷாஃபி, அஹ்மத் பின் ஹம்பல் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

நூல் : இப்னு கஸீர்

இவர்களும் அறியப்பட்ட நாட்கள் என்பதை குர்பானியுடன் சம்மந்தப்படுதவில்லை. ஏனெனில் முதல் ஒன்பது நாட்கள் குர்பானி கொடுக்க முடியாது. இவர்களும் தஷ்ரீகுடைய நாட்களை அறியப்பட்ட நாட்களில் சேர்க்கவில்லை

ஏழாம் நாள், எட்டாம் நாள், ஒன்பதாம் நாள் ஆகியவை தான் அறியப்பட்ட நாட்கள் என்று இப்னு அப்பாஸ் மற்றொரு அறிவிப்பில் கூறுகிறார்

இப்படி பலவாறாகச் சொல்லி இருப்பதில் இருந்து அறியப்பட்ட நாட்கள் என்பது அறுக்கும் நாட்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இவர்கள் கருதவில்லை என்று தெரிகிறது.

எனவே இந்த வசனத்தைக் குர்பானி கொடுக்கும் நாட்களைச் சொல்லும் வசனமாகக் கருதுவது பொருத்தமற்றது என்பது இதன் மூலமும் உறுதியாகிறது. 

மேலும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ் வழங்கிய பலிப்பிராணியை அறுத்தார்கள். அதையே வழிமுறையாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

இப்ராஹீம் நபியைப் பின்பற்றியே குர்பானி கொடுப்பது வழிமுறையாக்கப்பட்டுள்ளதை இவ்வசனங்கள் கூறுகின்றன. இப்ராஹீம் நபி அவர்கள் எந்த நாளில் குர்பானி கொடுத்தார்களோ அந்த நாள் ஒரு நாளாகத் தான் இருக்க முடியும். நான்கு நாட்களாக இருக்க முடியாது.

எனவே அவர்கள் குர்பானி கொடுத்த அந்த ஒரு நாளாகிய பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும்

மேலும் பெருநாள் தினமாகிய துல்ஹஜ் பத்தாம் நாளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் என்று பெயரிட்டு உள்ளார்கள். நஹ்ர் என்றால் அறுத்துப் பலியிடுதல் என்று பொருள். அறுத்துப் பலியிடும் நாள் என்று அவர்கள் பெயர் சூட்டிய நாள் தான் அறுப்பதற்குரிய நாளாகும்.

கவ்ஸர் அத்தியாயத்தில் அறுத்துப் பலியிடுவீராக என்பதை நஹ்ர் என்ற வார்த்தையால் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தை நஹ்ருடைய நாள் அறுப்பதற்குரிய நாள் என்று குறிப்பிட்டதை புகாரி 67, 968, 1640, 1691 ஆகிய  ஹதீஸ்களில் காணலாம்,

ஹஜ் பெருநாள் தினத்தை நஹ்ருடைய நாள் அறுத்துப் பலியிடக்கூடிய நாள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

இப்ராஹீம் நபி அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தான் குர்பானி கொடுத்துள்ளார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் எனக் கூறி தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இந்த இடத்தில் எதிர்க்கேள்வி ஒன்றை முன்வைக்கிறார்கள். இப்ராஹீம் நபி குர்பானி கொடுத்த நாளில் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த பலிப் பிராணியைத் தானே கொடுக்க வேண்டும். ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தானே அவர்கள் கொடுத்திருப்பார்கள். மூன்றையும் கொடுக்கலாம் என்று கூறுவது இப்ராஹீம் நபி வழிமுறைக்கு மாற்றமில்லையா என்பது தான் அந்த எதிர்க் கேள்வி.

இப்ராஹீம் நபியைப் பின்பற்றுவதாக இருந்தால் அவர்கள் பலி கொடுத்த நாளில் பலியிட வேண்டும் என்பது போல் அவர்கள் பலி கொடுத்த பிராணியைத் தான் பலி கொடுக்க வேண்டும் என்பது சரியான வாதம் தான். ஆனால் நபியவர்கள் ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றில் எதையும் கொடுக்கலாம் என்று தெளிவாக விளக்கி விட்டதால் பிராணி மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால் நபிகள் நஹ்ருடைய நாட்கள் நான்கு என்று சொல்லவில்லையே? ஒரு நாள் என்று தானே கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஷ்ரீகுடைய நாட்களில் அறுக்கலாம் என்று கூறியதற்கு ஆதாரம் காட்டினால் அப்போது தான் இந்த வாதம் செல்லும்.

இறைச்சியை வெட்டி உப்புக் கண்டம் போடும் நாட்கள் என்பதால் தான் தஷ்ரீக் (உப்புக் கண்டம் போடும் நாட்கள்) என்று சொல்லப்பட்டது என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

எனவே துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் மட்டுமே குர்பானி கொடுப்பதற்குரிய நாளாகும். அதற்கு பிறகு வரும் மூன்று நாட்கள் உண்ணும் பருகும் நாட்களே தவிர குர்பானி கொடுக்கும் நாட்கள் அல்ல.