514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா?

இவ்வசனங்களில் (66:12, 21:91) பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசுவதாகக் கூறி கிறித்தவ போதகர்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவரிடம் என்று இவ்வசனங்களுக்கு நாம் மொழியாக்கம் செய்திருந்தாலும் அவரது ஃபர்ஜில் என்று தான் மூலத்தில் உள்ளது. ஃப்ர்ஜ் என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லாகும். அல்லாஹ்வின் வேதத்தில் இப்படி இருக்கலாமா? என்பது அவர்களின் கேள்வி.

ஆண் உறுப்பையோ பெண் உறுப்பையோ குறிப்பிட்டு பேசுவது தவறா? அது கேவலமானதா? பொதுவாக அப்படிக் கூற முடியாது. அந்த உறுப்பு பற்றி சொல்லும் அவசியம் எழுந்தால் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அந்தரங்க உறுப்பில் காயமோ, பிரச்சனையோ இருந்தால் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசித் தான் ஆக வேண்டும்.

ஆனால் இவ்வுறுப்புக்களைக் குறிப்பிட கொச்சையான சொற்களும் உள்ளன. நாகரிகமாகக் கருதும் சொற்களும் உள்ளன. கொச்சையான சொற்களைத் தவிர்த்து நாகரிகமான சொல்லைப் பயன்படுத்தலாம்.

ஐயா எனது மர்ம உறுப்பில், அல்லது அந்தரங்க உறுப்பில் கொப்புளம் உள்ளது; அதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் பேசினால் அதை யாரும் ஆபாசம் எனக் கருத மாட்டோம். சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது கொச்சையான சொல்லைப் பயன்படுத்தாமல் நாகரிகமான சொல்லைப் பயன்படுத்துவதை அறிவுடைய யாரும் ஆபாசமாகக் கருத மாட்டார்கள்.

இந்த வசனத்தில் சொல்ல வேண்டிய அவசியம் காரணமாக சொல்லப்பட்டுள்ளதா? நாகரிகமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விளங்கிக் கொண்டால் இந்தக் கேள்வி அபத்தமான கேள்வி என்பது தெளிவாகும்.

ஃபர்ஜ் என்பது பெண்களின் உறுப்பைக் குறிக்கும் பச்சையான சொல்லா என்றால் இல்லவே இல்லை. இது ஆண், பெண் இரு பாலரின் அந்தரங்க உறுப்பைப் பற்றிக் குறிக்கும் நாகரிகமான பொதுவான சொல்லாகும்.

இச்சொல்லை பொது மேடைகளிலும் பயன்படுத்தலாம். யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்.

ஆண்களே பெண்களே! உங்கள் அந்தரங்க உறுப்புக்களை தூய்மையான வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், சிறுநீர் கழித்த பின் அந்தரங்க உறுப்புக்களைக் கழுவிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஆபாசமா? யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதே விஷயத்தை …… போன்ற சொல்லைப் பயன்டுத்தி சொன்னால் அதை ஆபாசம் என்று நாம் கூறுவோம்.

அந்தரங்க உறுப்பு என்ற சொல் எப்படி இரு பாலரின் உறுப்பைக் குறிக்குமோ அது போன்ற சொல் தான் ஃபர்ஜ் எனும் சொல்.

உதாரணமாக புகாரி எனும் ஹதீஸ் நூலில் நபிகள் நாயகம் இச்சொல்லைப் பயன்படுத்திய ஹதீஸ்கள் உள்ளன. இவை அனைத்திலும் ஃபர்ஜ் என்ற சொல் இருக்கிறது.

பார்க்க : புகாரி 367, 6284, 5819, 5820, 5821, 582

இந்த ஹதீஸ்களில் ஒரு ஆண் தனது ஃபர்ஜை மறைக்காமல் ஒரு ஆடை அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கே ஃபர்ஜ் என்பதன் பொருள் அந்தரங்க உறுப்பு எனத் தெளிவாகிறது. பெண்ணின் உறுப்பை இச்சொல்லால் குறிப்பிடுவது போல் ஆணின் உறுப்பையும் இச்சொல்லால் குறிப்பிடலாம் என்று தெரிகிறது.

கிறித்தவ போதகர்கள் கருதுவது போல் இது ஆபாசமான சொல் அல்ல என்பது உறுதியாகிறது.

புகாரி 249, 259, 260, 266. 274, 276, 281, 288 ஆகிய ஹதீஸ்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது ஃபர்ஜை தேய்த்துக் கழுவுவார்கள் என்று அவர்களின் மனைவியரான ஆயிஷா, மைமூனா ஆகியோர் அறிவிக்கிறார்கள் என இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

குளிக்கும் போது ஆண்கள் தமது அந்தரங்க உறுப்பைத் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற சட்டத்தை சொல்லும் போது இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

பெண்கள் கூட சாதாரணமாகப் பயன்படுத்தும் நாகரிகமான சொல்லே ஃபர்ஜ் என்பது.

ஆண்கள் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் பெண்களும் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் என்று சொன்னால் அது ஆபாசமான சொல் அல்ல. இது போல் ஆண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும்; பெண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும் என்று சர்வதாரணமாகச் சொல்லலாம்.

எனவே ஃபர்ஜ் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதில் கடுகளவும் ஆபாசம் இல்லை.

சொல்ல வேண்டிய இடத்தில் இது சொல்லப்பட்டுள்ளதா என்றால் அப்படித் தான் சொல்லப்பட்டுள்ளது. .

ஒரு பெண்ணுக்கு குழந்தை தரிக்க வேண்டுமானால் கர்ப்பப் பைக்குள் ஆணின் உயிரணு செல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. மர்யம் எனும் மேரிக்கு ஆணின் விந்து இல்லாமல் குழந்தையை இறைவன் கொடுக்க முடிவு செய்கிறான். முழு வடிவம் பெற்ற குழந்தையை வயிற்றுக்குள் அனுப்பவில்லை. எல்லாக் குழந்தைகளையும் போல் கருவில் உருவாகி படிப்படியாக வளரும் வகையில் தான் குழந்தையைக் கொடுத்தான்.

உயிரணுவோ, அல்லது குழந்தையை உருவாக்கும் வேறு அணுவோ பெண்ணின் கருவறைக்குச் செல்லாமல் குழந்தை உருவாக முடியாது. கருவறைக்கு உள்ளே அந்தரங்க உறுப்பு வழியாகத் தான் செல்ல முடியும். வாய்க்குள் உயிரணுவைச் செலுத்தினால் அது கருவறைக்குப் போகாது.

இறைவன் நினைத்தால் இந்த வழிமுறை இல்லாமலும் குழந்தையைக் கொடுக்க முடியும். ஆனால் அப்படி இறைவன் நினைக்கவில்லை. அதனால் தான் ஜிப்ரீல் எனும் தேவதூதரை அல்லாஹ் அனுப்பி அந்த உயிரணுவை ஊதி கருவறைக்கு உயிரணு செல்வதன் மூலம் அந்தக் குழந்தையை அல்லாஹ் வழங்குகிறான்.

மனிதன் ஊதினான் என்றால் ஆடையைக் களைந்து ஊதினான் என்று பொருள் கொள்ள முடியும். உள்ளங்களிலும் ஊடுறுவும் தன்மை பெற்ற வானவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆடையைக் களையாமல் அருகில் நின்று ஊதினால் கூட உள்ளே செலுத்த வேண்டிய உயிரணு உள்ளே சென்று விடும்.

குழந்தை எப்படி பெண்ணின் கருவ்றைக்குள் செல்கிறது என்று அறிவியல் பாடம் நடத்தும் போது அதைப் பற்றி பேசினால் அது ஆபாசம் ஆகாது. இன்றைக்கு கணவனின் விந்தை மட்டும் எடுத்து அதில் இருந்து உயிரணுவை மட்டும் பிரித்து பெண்ணுக்குள் செலுத்துகிறார்கள். அந்தரங்க உறுப்பு வழியாகவே செலுத்துகிறார்கள். இப்படி சொல்வது ஆபாசமா? உண்மை விளக்கமா?

இது குறித்து கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லை.

மேலும் மற்ற சமுதாய மக்கள் இதைப் பற்றிக் கேட்டால் கூட அதில் நியாயம் உள்ளது. கிறித்தவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. அவர்கள் நம்பிக்கை கொண்ட பைபிளிலும் இது போல் தான் சொல்லப்பட்டுள்ளது.

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

மத்தேயு 1

20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

மத்தேயு 1

ஒரு பெண் இன்னாரால் கர்ப்பமானாள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவனால் செலுத்தப்பட்ட உயிரணு மூலம் குழந்தை உருவானது என்று தான் பொருள்.

பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்றால் அந்தக் குழந்தை உருவாவதற்கான உயிரணு பரிசுத்த ஆவியால் செலுத்தப்பட்டுள்ளது என்று தான் அர்த்தம். கிறித்தவ மத போதகர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா1

ஒரு பெண் மேலே பரிசுத்த ஆவி வரும். அதனால் குழந்தை உண்டாகும் என்றால் அதன் அர்த்தம் என்ன? ஏதோ உடறுறவு கொண்டார்கள் என்பது போன்ற அர்த்தம் இதில் உள்ளது. ஆனால் குர்ஆன் வானவர் ஊதினார் என்று நாகரிகமாக இதைச் சொல்கிறது.

அதே சமயம் இப்படி கேள்வி கேட்கும் கிறித்தவ போதகர்கள் தங்கள் பைபிளில் மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு பதில் சொல்ல முன்வர வேண்டும்.