517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா?
இவ்வசனத்தில் (36:80) பச்சை மரத்தில் இருந்து தீயை உருவாக்குகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நம்மிடம் உள்ள நெருப்பு மூலம் பச்சை மரங்களை எரிப்பது பற்றியோ, அல்லது பச்சை மரங்கள் காய்ந்த பின்னர் நம்மிடம் உள்ள நெருப்பின் மூலம் எரிப்பது பற்றியோ இவ்வசனம் பேசவில்லை.
நெருப்பு தேவைப்படும் போது பச்சை மரத்தில் இருந்து அதை உருவாக்குகிறீர்கள் என்று தான் கூறப்படுகிறது.
பச்சை மரத்தில் இருந்து நெருப்பை உருவாக்க முடியுமா என்றால் முடியும்.
அனைத்து மரங்களில் இருந்தும் நெருப்பை உருவாக்க முடியாவிட்டாலும் நெருப்பை உருவாக்கும் மரங்கள் பாலைவனப் பகுதிகளில் இருந்தன. அன்றைய அரபுகள் அம்மரங்கள் மூலம் தீயை உருவாக்கியும் வந்தனர்.
மர்க் என்ற மரத்தில் இருந்து பசுமையான குச்சியையும், அஃபார் என்ற மரத்தில் இருந்து பசுமையான குச்சியையும் எடுத்து இரண்டையும் உரசினால் அதில் இருந்து தீ உருவாகும். அன்றைய அரபுகள் பயணத்தில் இவ்வாறு தான் தீயை உருவாக்கிக் கொண்டனர்.
இதை குர்துபி அவர்களும் மற்றும் பல விரிவுரையாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
மேலும் இதை இந்த வசனத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அதிலிருந்து நீங்கள் தீயை மூட்டுகிறீர்கள் என்று இவ்வசனம் கூறுவதால் அன்றைய மக்கள் இவ்வாறு செய்து வந்தனர் என்பது உறுதியாகிறது. பச்சை மரத்தில் இருந்து எப்படி தீ மூட்ட முடியுமென்று நபித்தோழர்களும் கேட்கவில்லை. எதிரிகளும் இதை விமர்சிக்கவில்லை.
இன்று கூட அமேசான் காடுகளில் அடிக்கடி தீ பற்றி எரிவதை நாம் காண்கிறோம். இது போன்ற மரங்களின் உராய்வினால் அந்தத் தீ உருவாகி இருக்கலாம்.
அன்றைய அரபுகள் அறிந்து வைத்துள்ள உண்மையை அல்லாஹ் எடுத்துக் காட்டி நெருப்பும், பசுமையும் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருந்தும் பச்சை மரத்துக்குள் நெருப்பை வைத்துள்ள தன் வல்லமையை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.