தனி இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் மறுத்தது ஏன்?
கேள்வி:
கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா?
பதில் :
இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள் ஏன் மறுத்தனர் என்ற காரணம் தெரியாமல் இப்படி ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பாதிப்பு என்று வாதிட்டால் இட ஒதுக்கீட்டுக்கு முன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எவ்வளவு? இட ஒதுக்கீட்டுக்குப் பின் கிடைத்துள்ள வாய்ப்புகள் எவ்வளவு என்பதைப் புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி தங்கள் வாதத்தை நிறுவ வேண்டும்.
மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் உளறக் கூடாது.
கிறித்தவர்கள் தமக்கு வழங்கப்பட்ட கிடைத்த இட ஒதுக்கீட்டை மறுத்தனர் என்பது பற்றியாவது அறிந்து வைத்துக் கொண்டு வாதிட வேண்டும். அந்த அறிவும் இவர்களுக்கு இல்லை.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
தமிழகத்தில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
இதில் தலித்களுக்கு 18 விழுக்காடு
பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு
எம்.பி.சி எனப்படும் மிகவும் பிற்பட்ட மக்களுக்கு 20 விழுக்காடு
ஒதுக்கப்பட வேண்டும்.
அதாவது 96 சதவிகிதத்தில் மேற்கண்ட பிரிவில் உள்ளவர்களுக்கு 39 விழுக்காடு ஒதுக்கப்பட்டு விடும்.
முஸ்லிம்களும், கிறித்தவர்களும் தலித்கள் பிரிவிலும், மிகவும் பிற்பட்டோர் பிரிவிலும் வர மாட்டார்கள். எனவே இந்த 39 விழுக்காட்டில் இவர்கள் வாய்ப்பைப் பெற முடியாது.
எஞ்சிய 30 விழுக்காடு பிற்பட்டோருக்கானது.
இதில் பிற்பட்ட இந்து சாதிகளும், பிற்பட்ட கிறித்தவர்களும், பிற்பட்ட முஸ்லிம்களும் அடங்குவார்கள்.
இந்த முப்பதைத் தான் 23 விழுக்காடு பிற்பட்ட சாதிகளுக்கு என்றும், மூன்றரை விழுக்காடு முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு என்றும், மற்றொரு மூன்றரை விழுக்காடு கிறித்தவர்களில் பிற்பட்டவர்களுக்கும் என்று பிரித்து வழங்கப்பட்டது.
இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களில் பிற்பட்டவர் என்றால் முஸ்லிம்களில் உள்ள ஆறு பிரிவினர் மட்டுமே அடங்குவார்கள். முஸ்லிம்கள் யாரும் பிற்பட்ட சாதிகளில் அடங்க மாட்டார்கள். மூன்றரை விழுக்காட்டில் மட்டுமே முஸ்லிம்கள் பயன்பெறுவார்கள்.
ஆனால் கிறித்தவர்களின் நிலை இதில் இருந்து வேறுபட்டதாகும்.
இந்து மதத்தில் உள்ள செட்டியார், நாடார், வன்னியர் உள்ளிட்ட எல்லா பிரிவுகளும் கிறித்தவர்களிடமும் உள்ளது. இந்து மதத்தில் உள்ள எல்லா சாதிப் பிரிவும் கிறித்தவ சமுதாயத்திலும் உள்ளதால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அடைந்து வந்தனர்.
அதாவது கிறித்தவர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மத்த்தைக் குறிப்பிட வேண்டியதில்லை. நாடார், வன்னியர் என்பன போன்ற சாத்திப் பிரிவுகளைத் தான் குறிப்பிட வேண்டும்.
கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன்னர் 30 சதவிகிதத்தில் சுமார் 25 சதவிகித்தைப் பெற்று வந்தனர். மத அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் அவர்கள் அதிகம் பயன் பெற்றனர்.
உதாரணமாக குமரி மாவட்டத்தில் நாடார்கள் அதிகம். இவர்களில் இந்து நாடார்களும், கிறித்தவ நாடார்களும் உண்டு.
ஆனால் இந்து நாடார்களை விட கிறித்தவ நாடார்கள் தான் படிப்பதற்கு அதிக வாய்ப்பைப் பெற்றனர். காரணம் அவர்களிடம் தான் கல்விக்கூடங்கள் உள்ளன.
தம்மைக் கிறித்தவர் என்று குறிப்பிடாமல் நாடார் எனக் குறிப்பிட்டு முப்பது விழுக்காட்டில் 25 விழுக்காட்டை அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தனர். இந்து நாடார்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததால் அவர்களால் பிற்பட்ட சாதிகளுக்கான ஒதுக்கீட்டின் பயனை அடைய முடியவில்லை.
இப்போது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் நாடார், வன்னியர் எனக் கூறி கிறித்தவர்கள் அதிக இடங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். அதுவும் மூன்றரை சதம் மட்டுமே கிடைக்கும் நிலை உருவானது.
இதன் காரணமாகத் தான் அவர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்றனர். பிற்பட்ட சாதிகளுக்குரிய 25 விழுக்காட்டில் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து அனுபவிக்க இந்த தனி இட ஒதுக்கீடு அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆபத்தாக முடிந்தது. மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடு அவர்களுக்கு பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் முஸ்லிம்களின் நிலை இதற்கு நேர் முரணானது.
தனி இட ஒதுக்கீட்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் இரண்டு சதம் அளவுக்குத் தான் வாய்ப்புகளைப் பெற்றனர். மூன்றரை என்பது அதை விட அதிகம் என்பதால் இது முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த நுணுக்கமான வேறுபாடு தெரியாதவர்கள் தான் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள்.
16.06.2010. 1:31 AM