மதப்பிரச்சாரம் செய்யும் தனியார் பள்ளிகளை எதிர் கொள்வது எப்படி?
நான் 7 ஆம் வகுப்பு படிக்கிறேன். முதலில் கிருஸ்துவப் பள்ளியில் படித்தேன். அங்கே பைபிள் சொல்லித் தருகிறார்கள் என்று வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். இப்போது வேறு ஒரு ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். காலை பிரேயரில் கோவிலில் சொல்லும் மந்திரத்தைச் சொல்லித் தருகிறார்கள். அது எனக்கு மணப்பாடம் ஆகிவிடுகிறது. இதனால் என்னை என் அம்மா திட்டுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும்?
ஏ.பிலால் முகமது, சிதம்பரம்
தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிற மதத்தினர் நடத்தும் கல்விக்கூடங்களைத் தேர்வு செய்கிறோம். தரமான கல்வி முக்கியம் தான். அதை விட நமது மறுமை வாழ்க்கை முக்கியமானது. மார்க்கத்தை விட்டுவிடாமல் தரமான கல்வி கிடைக்கும் என்றால் நாம் அதைத் தேர்வு செய்யலாம். மார்க்கத்தை விட்டுக் கொடுத்து இன்னொரு மதத்தின் நம்பிக்கையை மனதில் ஏற்றினால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்றால், அரசுப் பள்ளிகளைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். அங்கே மதப்பிரச்சாரம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அதை எதிர்த்து நிற்க முடியும்.
அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டு தனியாக டியூஷன் வகுப்புக்கு ஏற்பாடு செய்து கல்வித் தரத்தை நாம் உயர்த்திக் கொள்ளலாம். மேலும் தற்போது சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளதால் தனியார் பள்ளியிலும், அரசுப் பள்ளியிலும் ஒரே பாட நூல் என்பதால் கொஞ்சம் முயற்சித்தால் தரமான கல்வி கொடுக்க முடியும்.
புதிதாக நாம் பள்ளிக்கூடம் தொடங்குவதும் அதை நட்டமில்லாமல் நடத்துவதும் இப்போது சாத்தியக் குறைவாகி வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம்முடைய கிளைகளும் உள்ளூர் ஜமாஅத்துகளும் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க முடியும்.
ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் இலவச டியூஷன் சென்டர்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் நம் குழந்தைகளின் மார்க்க நம்பிக்கை கேள்விக் குறியாவதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அனைத்துக்கும் எளிதான ஒரே தீர்வாக இது அமையும்.
துவக்கத்தில் மக்களிடம் சற்று தயக்கம் இருந்தாலும் மிக விரைவில் நமது செயல்பாடு மூலம் அதை மாற்றி விடலாம்., ஆரம்பத்தில் பொருளாதாரச் சுமை ஏற்பட்டாலும் இதன் நன்மையைக் காணும் மக்கள் இதற்காக வாரி வழங்குவார்கள்.
14.02.2012. 21:28 PM