முஸ்லிமல்லாத அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா?

? எதன் அடிப்படையில், உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார்.

எஸ். அப்துல் சுபான், சேலம்.

தான் கூறுவதில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அந்த நண்பர் அப்படிக் கேட்கிறாரா? அல்லது நம்மை எதிர்ப்பதற்காக விதண்டாவாதத்துக்காகக் கேட்கிறரா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்!

அந்த நண்பர் மீது காவல்துறை வழக்குப் போட்டால் காஃபிர் அரசாங்க நீதிபதியிடம் நியாயம் கேட்டு வழக்கைச் சந்திப்பாரா? அல்லது காஃபிர் அரசாங்காத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக சிறையிலேயே கிடப்பாரா?

அவரை யாராவது கடுமையாகத் தாக்கினால் அல்லது அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக புகார் கொடுக்காமல் இருந்து விடுவாரா? புகார் கொடுப்பாரா?

அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொத்தை வாங்கும் போது அதை அரசாங்க முத்திரைத் தாளில் எழுதி பத்திரப் பதிவு அலுவலகம் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அதைப் பதிவு செய்வாரா? அல்லது காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கருதி பதிவு செய்யாமல் விட்டு விடுவாரா?

அல்லது வீட்டில் திருட்டுப் போய் விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் முறையிட வேண்டும் என்று கருதி புகார் கொடுக்காமல் இருப்பாரா?

ரேஷன் அட்டை வழங்கும் போது காஃபிர் அரசாங்கம் வழங்கும் பிச்சை எனக்கு வேண்டாம் என்று கூறி ரேஷன் அட்டை வாங்காமல் இருப்பாரா?

ரூபாய் நோட்டுக்கள் வெறும் பேப்பர் தான். காஃபிர் அரசாங்கம் அதற்கு உத்தரவாதம் தருவதால்தான் அதற்கு என மதிப்பு உள்ளது. அந்த நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தால் அந்தக் காகிதம், காகிதக் கப்பல் செய்வதற்குத் தான் உதவும் என்று கருதி ரூபாய்களைப் பயன்படுத்தாமல் இருப்பாரா? பண்டமாற்று முறையில்தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வாரா?

பத்திரிகைகளுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ தகவல் தெரிவிக்க விரும்பினால் காஃபிர் அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்படும் தபால் தலையை ஒட்டி தகவல் தெரிவிப்பாரா? சவூதி அரசாங்கம் வெளியிட்ட தபால் தலைகளை ஒட்டுவாரா?

வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் காஃபிர் அரசாங்கத்தின் அனுமதியை நான் ஏன் பெற வேண்டும் என்று கருதி கள்ளத்தனமாக வெளி நாட்டுக்குச் செல்வாரா? விசா வாங்கிச் செல்வாரா?

அரிசி, பருப்பு உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை வாங்கும் போது அதற்கான வரியையும் காஃபிர் அரசாங்கத்துக்குச் செலுத்தியாக வேண்டும். எனவே, காஃபிர் அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தக் கூடாது என்பதற்காக இலை தழைகளை உண்டு வாழ்வாரா?

காஃபிர் அரசாங்கம் சலுகை விலையில் வழங்கும் கேஸ், எண்ணெய், மின்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது வாழ்நாளைக் கழிப்பாரா?

இப்படி பல்லாயிரம் பட்டியல்களை வெளியிடலாம். இதையெல்லாம் செய்யாதவராக அவர் இருந்தால் அந்த அதிசயப் படைப்பை வைத்து கண்காட்சியே நடத்தலாம்.

இதையெல்லாம் அவர் செய்வார் என்றால் அவர் கேட்கும் கேள்வி விதண்டாவாதமாகும்.

மேற்கண்ட பல்லாயிரம் செயல்களைச் செய்வதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதுவே தான் நமது உரிமைகளைக் கேட்பதற்கும் ஆதாரமாக உள்ளது என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்.

காஃபிர் ஆட்சியில் உரிமையைக் கேட்கக் கூடாது என்று சொன்ன ஒரு இயக்கம் கூட அந்த நிலையில் உறுதியாக நின்றதில்லை. எதையாவது சொல்லி ஆள் பிடிப்பதற்காக இவ்வாறு கூறுவதுண்டு. அதன் பின்னர் தங்கள் நிலைபாட்டை அறவே மாற்றிக் கொண்டு விட்டதை நாம் கண்ணாரக் கண்டு விட்டோம்.

28.02.2012. 11:51 AM