ஹஜ் கமிட்டி கொள்ளை இப்போதுதான் தெரிந்ததா

அரசாங்கத்தின் மூலம் ஹஜ் செய்வது தான் நல்லது என்று எழுதிய நீங்கள் தற்போது அரசாங்கமும் கொள்ளை அடிப்பதாக எழுதியுள்ளீர்கள். இரண்டில் எது உண்மை? ஹஜ் கமிட்டி மூலம் அரசாங்கம் கொள்ளை அடிப்பது இப்போது தான் உங்களுக்குத் தெரிந்ததா?

– அன்வர்தீன், அரூர்

பதில் :

இரண்டுமே உண்மை தான்.

ஒரு பொருளின் அடக்க விலை நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு வியாபாரி அந்தப் பொருளை 200 ரூபாய்க்கு விற்கிறார்.

இன்னொரு வியாபாரி 500 ரூபாய்க்கு விற்கிறார்.

110 அல்லது 125 என்ற அளவுக்கு யாரும் விற்பதாகத் தெரியவில்லை.

இப்போது நாம் என்ன சொல்வோம்? 200 ரூபாய்க்கு விற்கும் கடையில் வாங்குவது லாபமானது என்று நாம் கூறுவோம்.

500 ரூபாய்க்கு விற்கும் பெரும் கொள்ளையை விட 200 ரூபாய்க்கு விற்கும் சிறு கொள்ளை பரவாயில்லை என்று நாம் கூறுவோம்.

ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரிய கொள்ளையை விட சிறு கொள்ளை பரவாயில்லை. ஆனால் 200 ரூபாயை விட குறைவாக அவர்கள் விற்க முடியும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினால் அது தவறு என்று கூறுவீர்களா?

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தால் நாம் அதிகப்படியாக 60 ஆயிரம் கொடுக்கிறோம். ஆனால் தனியாரிடம் நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து ஹஜ் செய்தால் அதிகப்படியாக மூன்றரை லட்சம் கொடுக்கிறோம். இந்தப் பெரும் கொள்ளைக்கு அரசாங்கம் அடிக்கும் சிறு கொள்ளை எவ்வளவோ பரவாயில்லை.

எனவே நாம் எழுதியதில் நீங்கள் குறை காண நியாயம் இல்லை. இது இப்போது தான் தெரியுமா என்று கேட்கிறீர்கள்.

இது முன்னரே நமக்குத் தெரிந்தது தான்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் ஹஜ் மானியம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது மானியம் என்று சொல்வது பொய்; அவ்வாறு சொல்வது பெரிய பித்தலாட்டம் என்பதை நாம் முன்னரே விளக்கி வந்துள்ளோம். 

இப்போது இரு வழிகள் தான் உள்ளன. ஒன்று சாதாரண கொள்ளை. மற்றொன்று படு கொள்ளை. எனவே படு கொள்ளை அடிக்க துணை போகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

உணர்வு 16:39

07.06.2012. 6:17 AM