ஊனமுற்றோருக்காக போராடுவீர்களா?
மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்புக்காக நீங்கள் போராட்டம் நடத்தலாமே?
முஹம்மது, துபாய்
மாற்றுத் திறனாளிகள் எனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக உதவுவதும் அவர்களின் உணவு உடை மற்றும் தேவைகளுக்காக தக்க ஏற்பாடு செய்வதும் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊனமுற்றவர்களுக்கு பேருந்து, இரயில்களில் கட்டணச் சலுகை, தனி இருக்கைகள் ஒதுக்குதல் மாதந்தோறும் அவர்களுக்கு உதவி வழங்குதல் போன்ற திட்டங்களை நாம் வரவேற்கலாம்.
ஆனால் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக பிறரைப் பாதிக்கும் வகையிலான வேலைகள் அவர்களுக்கு வழங்குவதை நாம் ஆதரிக்க முடியாது.
அரைகுறைப் பார்வையுள்ள ஒருவரை ஆசிரியராக நியமித்து மாணவர்களின் பரீட்சை பேப்பரைத் திருத்தும் பொறுப்பை நியமித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கண்ணுக்கு பக்கத்தில் வைத்து பேப்பரைப் பார்க்கும் பல ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு காட்டும் கருணை மற்றவர்களுக்கு அநீதி இழைப்பதாக அமையக்கூடாது.
அது போல் கண் தெரியாதவர்களையும் காது கேளாதவர்களையும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். வாய் பேசுவது மட்டும் ஆசிரியர் பணிக்குப் போதுமா? மாணவர்களைக் கவனிக்க வேண்டாமா? மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்கிறார்களா என்பதை வாயை மட்டும் வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா? இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுபோல் செவிட்டுத் தன்மை உள்ளவர் அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ நியமிக்கப்பட்டால் மக்களின்/ மாணவர்களின் கருத்தை அவர் எப்படி புரிந்து கொள்வார்? மற்றவர்களைப் பாதிக்கும் இது போன்ற வேலைகளை எப்படி வழங்க முடியும்.
கால் ஊனமுற்றவர்கள், கைகள் ஊனமுற்றவர்கள் மற்றும் பார்வையற்றவர்களை போலிசிலோ இராணுவத்திலோ சேர்க்க மாட்டார்கள். இவர்களால் இப்பணியைச் செய்ய முடியாது என்பது தான் காரணம். இதே காரணம் அரசு அதிகாரிகள் பணி, ஆசிரியர் பணி போன்றவற்றுக்கும் பொருந்தும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவர்கள் கேடு செய்கிறார்கள். பலரது எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.
இவ்வாறு செய்வதை விடுத்து ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப மற்றவர்களைப் பாதிக்காத வகையில் ஏதேனும் வேலை இருந்தால் வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் மாதந்தோறும் அவர்களுக்கு எவ்வித வேலையும் இல்லாமல் ஊதியம் வழங்கலாம்.
கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் கேட்கும் போது கவனிக்கும் பல விஷயங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் போது கவனிக்காமல் முட்டாள்தனமாக சட்டத்தை உருவாக்குகின்றனர். இதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர ஒருக்காலும் ஆதரிக்க முடியாது.
22.04.2013. 15:20 PM