அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?
இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பது தான் பொருள்.
“வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது…” என்ற (89:22) வசனத்திற்குப் பொருள் கொள்ளும் போது, நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களை விசாரிப்பதற்கு இறைவன் வருவான் என்ற நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
ஆயினும் நேரடிப் பொருள் கொள்வது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தினாலோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக இருந்தாலோ அப்போது நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
நல்லடியார்களின் கையாக நான் ஆவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. நல்லடியானுக்கு உதவுவேன் என்று அல்லாஹ் கூறுவதாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
2:210, 6:158, 13:41, 16:26, 24:39, 59:2 ஆகிய வசனங்கள் நேரடிப் பொருள் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளன.
உதாரணமாக 2:210, 13:41, 16:26 ஆகிய வசனங்களில் தீயவர்களை அழிக்க இறைவன் வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களுக்கு அல்லாஹ் நேரடியாக வருவான் என்று பொருள் கொள்ளாமல் அவனது கட்டளை வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு கூட்டத்தையோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையோ அழிக்க அல்லாஹ் நாடினால் அதற்காக அவன் இறங்கி வருவதில்லை. அவ்வாறு வரவேண்டிய அவசியமும் இல்லை. ஒரேயொரு உத்தரவின் மூலம் காரியத்தை முடித்து விடுவான் என 36:28, 29 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
“மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வருவான்” என்பது, அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வாயிலாக வரும் என்று பொருள்படும். அதாவது பேரழிவை ஏற்படுத்தும் பெருமழையுடன் மேகக் கூட்டங்களை அனுப்பி அழிப்பான் என்று பொருள்.
இது போல் 13:41 வசனத்தில் பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. நமது கட்டளைப்படி பூமியைக் குறைக்கிறோம் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் கட்டடங்களின் அடித்தளத்தின் வழியாக நாம் வந்தோம். கட்டடங்கள் வீழ்ந்தன என்று பூகம்பம் குறித்து 16:26 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இது போல் 59:2 வசனத்தில் அவர்கள் நினைத்துப் பார்க்காத வகையில் அணுகினான் என்பதும் இது போன்றது தான்.
கட்டடத்துக்குக் கீழே வந்து அசைக்கிறான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. கட்டடங்கள் விழுமாறு கட்டளையிட்டான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
அது போல் 24:39 வசனத்தில் கானல் நீரைத் தேடிச் செல்பவன் அங்கே அல்லாஹ்வைக் காண்பான் என்று கூறப்பட்டுள்ளதையும் அதன் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
இவையல்லாத மற்ற வசனங்களில் அல்லாஹ்வைப் பற்றி சொல்லப்பட்ட அனைத்து வர்ணனைகளையும் அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனின் பண்புகள் பற்றி அறிய 488வது குறிப்பைப் பார்க்கவும்.