இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

கேள்வி:

இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்’ என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?

– அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ.

பதில்:

ஏக இறைவனைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் எந்த மொழியிலும் நாம் பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் தத்தமது மொழியில் தான் கடவுளைக் குறிப்பிட்டனரே தவிர அல்லாஹ் என்று அரபு மொழியில் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருக்கவும் முடியாது.

கடவுள் கூறினார் என்று நான் பேசும்போது அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனைத் தான் நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அது போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு பயன்படுத்தலாம்.

ஏராளமான கடவுள்கள் இருப்பதாக நம்புகின்ற மக்களிடம் பேசும் போது அல்லாஹ் என்று கூறினால் தான் ஏக இறைவனைக் குறிப்பிடுவதாக அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் சொன்னார் எனக் கூறினால் எந்தக் கடவுள்? ராமரா? கிருஷ்னரா? சிவனா? விஷ்ணுவா? முருகனா? விநாயகரா? இயேசுவா? மேரியா? என்றெல்லாம் குழப்பம் அடைவார்கள். எனவே பல கடவுள் நம்பிக்கையுடைய மக்களிடம் பேசும்போது அல்லாஹ் என்று கூறுவது தான் பொருத்தமானது.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)