தர்கா ஸியாரத்
மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம்.
(நூல்: முஸ்லிம் 1777)
அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.
புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன் என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை என்றார். இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத் 2881
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு,திருவிழா போன்றவை இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?
மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில் பிரம்மாண்டமான கட்டிடம்
மனதை மயக்கும் நறுமணம்
கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்
ஆண்களும், பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு
ஆடல், பாடல், கச்சேரிகள்
இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.
எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?
விழுந்து கும்பிடுவது
கையேந்திப் பிரார்த்திப்பது
பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்
தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்
விபூதி, சாம்பல் கொடுத்தல்
மார்க்கம் தடை செய்த கட்டடம்
என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நூல்: முஸ்லிம் 78
அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.
மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.