சூனியத்தை நம்புதல் இணைவைத்தலே
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. எனவே அது எப்படி என்று பார்ப்போம்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணைகற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.
அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதை 36:78, 42:11, 112:4 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்
அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும்.
உதாரணமாக நமக்கு கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.
அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.
ஒரு நேரத்தில் ஒருவன் பேசுவதைத் தான் நாம் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். ஆனால் உலகில் உள்ள எழுநூறு கோடி மக்களும் ஒரு நேரத்தில் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கை வைத்தால் அவை அனைத்தையும் அதே நேரத்தில் அல்லாஹ் கேட்பான்.
சமாதிகளை வழிபடுவோர், மகான்கள் என்று தாங்கள் கருதியவர்களை அழைக்கிறார்கள். அவ்லியாவே எங்களுக்கு இதைத் தாரும் என்று பல ஊர்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள். அவரால் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவரது கோரிக்கைகளையும் அவர் அதே நேரத்தில் செவிமடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அவரை அழைக்கிறார்கள். அப்படியானால் அந்த மகான் ஒரு நேரத்தில் எத்தனை பேருடைய அழைப்பையும் கேட்க வல்லவர் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. இது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவரது அழைப்பை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அவருக்கும், நமக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருந்தால் தான் கேட்க முடியும். அதிக தூரத்தில் இருந்து கொண்டு ஒருவர் பேசுவதை நாம் கேட்க முடியாது.
ஒருவர் பேசுவதை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அந்தப் பேச்சைக் கடத்தக் கூடிய காற்று இருக்க வேண்டும். அல்லது மின் அலைகள் இருக்க வேண்டும். அவர் பேசும் ஒலி குறிப்பிட்ட டெசிபலில் இருக்க வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் நாம் கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு இது போன்ற பலவீனங்கள் இல்லை.
எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எவ்வளவு குறைந்த சப்தத்தில் அழைத்தாலும் அனைத்தையும் ஒருவர் கேட்பார் என்று நாம் நம்பும் போது, அவருடைய கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறனுக்குச் சமமாக ஆக்கப்படுவதால் இதை இணைகற்பித்தல் என்று சொல்கிறோம்.
பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அதுவும் இணைகற்பித்தலாகும்.
குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.
இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார் என்றும், எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்றும் நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக கருதியதாக ஆகும்.
இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ் அல்லாத பல குட்டித் தெய்வங்களை வணங்கி வந்தனர். அதே நேரத்தில் எல்லா ஆற்றலும், அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனாலும் அவர்களை இணைவைத்தவர்கள் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
10:31, 23:84,85, 23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25, 39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள், இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள் என்பதையும், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
தமது குட்டித் தெய்வங்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசி எங்களுக்கு உதவுவார்கள் என்பது தான் மக்காவில் இருந்த முஸ்லிமல்லாதாவர்களின் நம்பிக்கையாக இருந்தது என்பதை 10:18, 39:3 வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இறைவனின் ஆற்றல் தங்களின் குட்டித் தெய்வங்களுக்கு இல்லை என்று ஒரு புறம் நம்பிக்கொண்டு மற்றொரு புறம் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தக் குட்டித் தெய்வங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.
எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணைகற்பித்தல் ஆகும் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு சூனியத்தைப் பற்றி ஆராய்வோம்.
பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே, எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக் கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.
ஒருவனை மனநோயாளியாக ஆக்க அல்லாஹ் நினைத்தால் மனநோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மனநோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மனநோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.
அல்லாஹ் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?
சூனியக்காரன், உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.
சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.
இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.
இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராகவும் யாரும் இதைச் செய்ய முடியும்.
உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.
சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புகின்றனர்.
யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி, சிறுநீர் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து, அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.
ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.
கணவன் மனைவியைப் பிரிக்க பணம் கொடுத்தால் சூனியக்காரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டே கணவன் மனைவியைப் பிரித்து விடுவான் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர், சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.
எனவே லபீத் என்ற யூதன் மந்திர சக்தியால் நபிகள் நாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினான் என்று நம்புவது அவனுக்கு அல்லாஹ்வின் தன்மை உள்ளது என்று சொல்லாமல் சொல்வதாகும். எனவே நபிகள் நாயகத்துக்கு சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் கட்டுக் கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் இந்த நம்பிக்கை இருந்தாலும் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். சில எதிர்வாதங்களையும் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம்.
இந்த வாதத்தைப் பார்க்கும்போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.
திருக்குர்ஆன் 17:111, 25:2 ஆகிய வசனங்கள் இதைத் தெளிவாகச் சொல்கின்றன.
தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!
உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71
தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.
இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?
இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகளும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.
இவ்வாறு மற்றவர்களை வணங்கும்போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.
எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.
சூனியக்காரன் அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்கிறான் என்ற இந்த வாதமும் இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகளின் வாதமும் ஒரே மதிரியாகவே உள்ளன.
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டு அது இணைகற்பித்தலில் சேராது என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள இதுபோல் உளறுகிறார்கள்.
சமாதி வழிபாடு நடத்துபவர்கள் இறந்தவர்களை வணங்குகிறார்கள். நாங்கள் மகான்களை அல்லாஹ் என்றா நம்பினோம்? அவர்களுக்குச் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருக்கிறது என்றா சொன்னோம்? இல்லவே இல்லை. அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தான் அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார்கள் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இது எப்படி அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் ஆகும்? அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள் தானே தவிர அல்லாஹ் அல்ல என்று கூறி தங்களின் இணைவைப்புக் கொள்கையை நியாயப்படுத்துகிறார்கள்.
சமாதி வழிபாடு செய்வோரின் அதே வாதங்களை சூனியக்காரன் விஷயத்தில் இவர்கள் எடுத்து வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.
இது அப்பட்டமான இணைவைப்பு என்று நாம் கூறும்போது எங்கள் நம்பிக்கைக்கும், இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகளின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள்.
எங்களின் நம்பிக்கைக்கும், தர்கா வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதால் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக மாட்டோம் என்று மறுமொழி கூறுகிறார்கள்.
அது என்ன வித்தியாசம் என்று அவர்களிடம் கேட்டால் அவ்லியாக்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருப்பதாக அல்லாஹ் சொல்லவில்லை. ஆனால் சூனியக்காரனுக்கு அதிசய ஆற்றல் உள்ளதாக அல்லாஹ்வே 2:102 வசனத்தில் சொல்லி விட்டான் என்பது தான் அந்த வித்தியாசம் என்கிறார்கள்.
சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதை நாங்கள் நம்புகிறோம். அவ்லியாக்களுக்கு அப்படி அற்புத சக்தி வழங்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அற்புத சக்தி உள்ளதாக நம்புகிறார்கள். இரண்டையும் எப்படி ஒப்பிடலாம் என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் வித்தியாசம்.
தன்னைப் போல் செயல்படும் ஆற்றலை அல்லாஹ் அவ்லியாக்களுக்கும் கொடுக்க மாட்டான். நபிமார்களுக்கும் கொடுக்க மாட்டான். சூனியக்காரனுக்கும் கொடுக்க மாட்டான் என்ற பொதுவான அடிப்படைக்கு முரணாக இந்த வாதத்தை வைக்கிறார்கள்.
சூனியக்காரர்களுக்கு சக்தி உள்ளது போல் மேலோட்டமாக தோன்றக் கூடிய வசனம் இருப்பது போல் அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி உள்ளது என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றக் கூடிய பல ஆதாரங்கள் தர்கா வழிபாட்டுக்காரர்களிடமும் உள்ளது.
அதை அடிப்படையாகக் கொண்டு அவ்லியாக்களுக்கு அல்லாஹ் அற்புத சக்தியை வழங்கியுள்ளதற்கு ஆதாரம் இருப்பதால்தான் நாங்கள் நம்புகிறோம் என்று தர்கா வழிபாட்டுக்காரர்களும் கூறுகிறார்கள்.
அந்த ஆதாரங்கள் சூனியக்காரனுக்கு முட்டுக் கொடுக்க இவர்கள் காட்டும் ஆதாரத்தைவிட வலுவாகவும் உள்ளன.
உதாரணமாக,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரீ 6502
அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.
அவ்லியாக்களின் கைகள் அல்லாஹ்வின் கைகள் என்றும், அவ்லியாக்களின் கால்கள் அல்லாஹ்வின் கால்கள் என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளதால் அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று தர்கா வழிபாட்டுக் கூட்டம் வாதிடுகிறது.
சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டும் ஆதாரத்தை விட இது வலிமையாக இருக்கிறது.
அவ்லியாக்களுக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் தந்துள்ளான் என்று அல்லாஹ்வே கூறியதால் தான் நாங்கள் இவ்வாறு நம்புகிறோம் என்று கூறுகிறார்களே இதை சூனியத்தை நம்புவோர் ஏற்றுக் கொள்கிறார்களா?
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக திருக்குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.
ஆதமுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் பெரியார்கள் காலில் விழலாம் என்று தர்காவாதிகள் வாதிடுகின்றனர். தங்களின் இந்த வாதத்தை நியாயப்படுத்த 2:34, 17:61, 7:11, 18:50, 20:116 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஒட்டுமொத்த திருக்குர்ஆனின் போதனைக்கு முரணில்லாமல் தான் இந்த வசனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை 11வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் 72:26,27, 81:24 வசனங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்கள். ஒட்டுமொத்த திருக்குர்ஆன் போதனைக்கு முரணாக இவ்வசனத்தை விளங்கக் கூடாது என்பதை 104 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களை மறந்து விட்டு அதற்கு முரணாக 2:102 வசனத்துக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும், சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதத்துக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.
2:102 வசனம் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா என்பதை 495 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
தர்காவிற்குச் செல்பவர்கள் கூட இறந்தவரை நல்ல மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ் இவருக்கு அற்புத ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான் என்று சொல்கின்றனர். ஆனால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புபவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கு அல்லாஹ் இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளான் என்று சொல்கின்றனர். இது தர்காவாதிகளின் நம்பிக்கையை விட கேடுகெட்ட நம்பிக்கையாகும்.
எனவே இவர்கள் செய்யும் இந்த அர்த்தமற்ற வாதங்கள் சூனியத்தை நம்புதல் இணைவைத்தல் அல்ல என்று நிறுவுவதற்குச் சிறிதும் உதவாது.
சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணைவைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும்போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.
சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்தச் சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியாது என்பதை 183 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
இவர்கள் மனமறிந்து பொய் சொல்கிறார்கள் என்பது இந்த வாதத்தின் மூலம் தெரிகிறது.
சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டினார்கள்?
யூதன் ஒருவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து அவர்களை முடக்கிப் போட்டான் என்ற செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
சீப்பு, உதிர்ந்த முடி, பேரீச்சம்பாளை ஆகிய பொருட்களில் லபீத் எனும் யூதன் சூனியம் வைத்து தர்வான் எனும் கிணற்றில் புதைத்து வைத்ததாகவும், அந்தக் கிணற்று நீரை இறைத்து அப்பொருட்களை அப்புறப்படுத்திய பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
யூதன் ஜின்களை ஏவிவிட்டு அந்த ஜின்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தாக்கியதால் தான் அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று அந்த ஹதீஸில் இருந்தால் தான் இவர்கள் இவ்வாறு வாதிட முடியும்.
இவர்களே நம்பாத ஒரு காரணத்தைப் புதிதாக கற்பனை செய்து சொல்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.
முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவன் சூனியம் வைத்தால் அவன் ஜின்களைப் பற்றி அறிந்துள்ளதால் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்தான் என்று வாதம் செய்ய கொஞ்சமாவது இடமிருக்கும்.
இந்துக்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் இன்னும் பல மதத்தினரும் சூனியம் செய்வதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் இருந்து கொண்டே சூனியத்தை ஆதரிப்பவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். ஜின்களையே அறியாத இவர்கள் எப்படி ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்வார்கள்? இவர்களுக்கு இந்த வாதம் பொருந்தாதே?
முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவன் சூனியம் செய்வதைத் தான் நாங்கள் நம்புகிறோம். ஜின்களை நம்பாத பிற மதத்தவர்களுக்கு ஜின்களைப் பற்றி நம்பிக்கை இல்லாததால் அவர்களால் சூனியம் செய்ய முடியாது என்பது தான் எங்கள் நம்பிக்கை என்று சொல்லப் போகிறார்களா?
அப்படிச் சொல்வார்களானால் யூதன் சூனியம் வைத்தான் என்ற ஹதீஸை இவர்களே மறுத்தவர்களாகி விடுவார்கள்.
இவர்கள் தமது வாதத்தில் பொய்யர்கள் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
ஜின்களை வசப்படுத்தி அவர்களை ஏவி விட்டு அதன் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று வாதிடுவோர் இவ்வாறு கூறும் திருக்குர்ஆன் வசனத்தையோ, ஏற்கத்தக்க நபிமொழியையோ எடுத்துக் காட்டுவதில்லை.
சூனியக்காரன் மனிதனைப் போல் செயல்படாமல் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்தைத் தருவதால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைகற்பித்தல் என்று நாம் சொல்கிறோம். இதை மறுப்பதற்கு மேலும் சில எதிர்வாதங்களையும் சூனியத்தை நம்புவோர் கூறுகின்றனர்.
நபிமார்கள் அற்புதங்கள் செய்ததாக நீங்களும் நம்புகிறீர்கள். நாங்களும் நம்புகிறோம். நபிமார்கள் செய்த எந்த அற்புதமும் மனிதனின் செயலைப் போல் இருக்கவில்லை. அல்லாஹ்வின் செயலைப் போல் தான் உள்ளது. நபிமார்கள் செய்த அற்புதங்களை நம்பும்போது நபிமார்கள் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்து வருவதால் அற்புதங்களை நம்புவதும் இணைகற்பித்தல் என்று சொல்வீர்களா? என்பதுதான் அந்த வாதம்.
இது அறிவீனமான வாதமாகும்.
நபிமார்கள் செய்த அற்புதங்கள் மனிதனின் செயலைப் போன்றவை அல்ல என்பது உண்மை. எந்த மனிதனாலும் அதுபோல் செய்ய முடியாது என்பதும் உண்மை. ஆனால் நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையில் அவர்கள் செய்தவை அல்ல.
மனிதர்களாக இருந்த நபிமார்களை இறைவனே தனது தூதர்களாக அனுப்பினான் என்று மக்கள் நம்புவதற்கான சான்றுகளாகச் சில அற்புதங்களை அவர்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தினான். அதற்கும் நபிமார்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே எந்த அற்புதத்தையும் நாங்கள் செய்ய முடியும் என்று நபிமார்கள் வாயாலேயே அல்லாஹ் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான். இதைப் பல வசனங்களில் தெளிவுபட அல்லாஹ் கூறி இருக்கிறான்.
நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.
13:38, 17:90-93, 40:78, 14:11 ஆகிய வசனங்கள் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்று தெளிவுபடக் கூறுகின்றன.
அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.
எல்லா நபிமார்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்? நாங்கள் மனிதர்கள் தான். அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் மட்டும் அல்லாஹ் எங்கள் மூலம் அவன் விரும்புகின்ற அற்புத்தை நிகழ்த்துவான். இதில் எங்களின் பங்கு எதுவும் இல்லை என்றே நபிமார்கள் சொன்னார்கள்.
ஆனால் சூனியக்காரர்கள் காசு கொடுத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூனியம் செய்வார்கள் என்று தான் சூனியத்தை நம்புவோர் கூறுகின்றனர்.
அற்புதங்களை நபிமார்கள் சுயமாகச் செய்யவில்லை என்பது குறித்து மேலும் அறிய 269 வது குறிப்பைக் காணவும்.
நபிமார்கள் மூலம் அல்லாஹ் செய்து காட்டிய அற்புதங்களை நம்புவதால் அது இணைகற்பித்தலில் சேரவே சேராது. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இவ்வாறு இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்று அல்லாஹ்வின் அனுமதியோடுதான் சூனியக்காரர்கள் சூனியம் செய்கிறார்களா? இது தான் சூனியத்தை நம்புவோரின் கொள்கையா?
எனவே நபிமார்களின் அற்புதங்களுடன் சூனியத்தையும் ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.
மேலும் மூஸா நபி காலத்தில் ஸாமிரி என்பவன் செய்த அற்புதத்தை எடுத்துக் காட்டி இவனது செயலும் இறைவனின் செயலைப் போல் அமைந்துள்ளதே? இது இணைகற்பித்தல் ஆகாதா என்று கேட்கின்றனர்.
இது இணைகற்பித்தலாகாது. ஏனெனில் ஸாமிரி உண்மையில் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை
(இது குறித்து 19*வது குறிப்பிலும் 269வது குறிப்பிலும் தெளிவாக விளக்கியுள்ளோம்.)
சூனியக்காரனுக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்களே அது இப்படிப்பட்டதல்ல.
சூனியக்காரன் அவனே திட்டமிடுகிறான்.
அவன் திட்டமிடும் நேரங்களில் எல்லாம் மந்திரம் செய்கிறான்.
எத்தனை தடவை வேண்டுமானாலும் இவ்வாறு செய்கிறான்.
இது அப்பட்டமான இணைவைத்தல் அல்லாமல் வேறு என்ன?
தஜ்ஜால் செய்யப்போகும் செயல்களை எடுத்துக் காட்டி தஜ்ஜாலின் செயலும் அல்லாஹ்வின் செயலைப் போல் உள்ளதே அதை நம்புவதும் இணைவைத்தலா என்று கேட்கின்றனர்.
தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.
அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.
தஜ்ஜால் என்பவன் சில அதிசயங்களைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என வாதிடுவான் என்றாலும் இது சூனியக்காரனுக்குச் சக்தி உள்ளதாக நம்புவது போன்றதல்ல.
இந்தக் கேள்விக்கான விளக்கமும் 269வது குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இப்லீஸும், அவனது வழித்தோன்றல்களான ஷைத்தான்களும் மனித உள்ளங்களில் ஊடுறுவி தீய எண்ணங்களைப் போடும் அளவுக்கு ஆற்றல் பெற்றுள்ளனர். அப்படியானால் இப்லீஸும் அல்லாஹ்வைப் போல் செயல்படவல்லவன் என்று ஆகாதா? ஷைத்தானின் ஆற்றலை மறுக்கிறீர்களா எனவும் கேட்கின்றனர்.
இக்கேள்விக்கான விடையும் 269வது குறிப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.