ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா?

கேள்வி

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்ராஹீம் நபியின் தந்தை நரகம் செல்வார் என்பது தவறு என்றும், ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தை அல்ல. வளர்ப்புத் தந்தை என்றும் மறுப்பு வெளியிட்டுள்ளார். அந்த மறுப்பை கீழே தந்துள்ளேன். இது சரியா என்பதை தெளிவபுடுத்தவும்

அப்துர்ராஜிக், இலங்கை

அஸ்ஸலாமு அலைக்கும். இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களது தந்தையை அல்லாஹ் நரகவாதி என்று அல்குர்ஆனில் குறிப்பிடுவதாக நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 

ஆனால், ஆஸர் என்பவர்  இப்றாஹீம் அலை அவர்களது வளர்ப்புத் தந்தையே தவிர பெற்ற தந்தை இல்லை.

வளர்ப்புத் தந்தை என முடிவு செய்யவும், பெற்ற தந்தை எனவும் முடிவு செய்ய quran terminolgy படிக்க வேண்டும்.

உதாரணமாக, இஸ்மாயீல் நபி, இஷ்ஹாக் நபியின் தந்தை என அல் குர்ஆன் கூறுகிறது,  இஸ்ஹாக் நபிக்கும், இஸ்மாயீல் நபிக்கும் இடையில் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் என்பது நமக்குத்தெரியும்.

அது போல அபூ ஹரைரா என்றால் பூனையின் தந்தை என பொருள் ஆகும், அதற்காக அபூ ஹரைரா ரலி பூனையை பெற்ற தகப்பன் ஆவாரா?.

அதுபோல, அபூ ஜஹில் என்றால் அறியாமையின் தந்தை என்று பொருள், அறியாமை அபூ ஜஹ்லுக்குப் பிறந்ததுது என்பீர்களா?

அதுபோல, வாலித் என்று வரும் வசனங்களில், இப்ராஹிம் நபி தம்மை பெற்ற தாய், தந்தையரை நாளை மறுமையில், நரக நெருப்பில் இருந்து பாதுக்காக்கும்படி, பிரார்த்தனை புரிவதை, அல் குர்ஆன் தடுக்கவில்லை, மாறாக அபூ என்ற பதத்தில் தடுக்கிறது, இங்கே அபூ என்பது பெற்ற  ஆசர் என்பவன் தகப்பனல்ல, மாறாக, பாதுகாவலர் என்றுதான் அர்த்தம், இது நான் கூறவில்லை, உங்களது நேசத்துக்குரிய இப்னு கஷீர், மற்றும் தபரி அறிஞரும் உறுதி செய்துள்ளார்.

மேலும், பெற்ற அப்பனைத்த தவிர பிறரை அப்பன் என அழைக்கக் கூடாது எனும் சட்டம், இறைதூதர் காலத்தில் இறங்கியது, இப்ராஹிம் நபி காலத்தில் இறங்கியதல்ல, இப்ராஹிம் நபி பற்றிய இந்தக் குறிப்பிடப் படும் வசனம்கள், இறங்கியதன் பின்பே இச்சட்டமும் இறங்கியது,  உங்களிடத்தில் quran terminology அறிவு பூச்சியம் என்பதாலே இப்றாஹீம் நபியுடைய வளர்ப்புத் தந்தையை பெற்ற தந்தைதான் என நீங்களும் உங்களும் தலைவர்களும்(  பீஜே) பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்.

என போலி சுன்னத் ஜமாஅத்தினர் எனக்கெதிராக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.  இதன் உண்மை நிலை என்ன?

இவன்

அஜ்மீர் பாரூக் .

இலங்கை

பதில்

பொது அறிவு இல்லாததால் இது போல் பிதற்றுகிறார்கள்.

தந்தை என்ற சொல்லை தந்தையல்லாதவருக்கும் வளர்ப்புத் தந்தைக்கும் சொல்லலாம் என்பது குறித்து போதிய ஞானம் இவருக்கு இல்லை.

எல்லா மொழிகளிலும் சில சொற்களுக்கு நேரடிப் பொருளும் இருக்கும். மாற்றுப் பொருளும் இருக்கும்.

இது போன்ற சொற்களுக்கு நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும். நேரடி பொருள் கொடுக்க முடியாத போது மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

மாற்றுப் பொருளைத் தேர்வு செய்யும் போது நேரடிப் பொருள் கொள்ள என்ன தடை என்பதற்கான குறிப்பு அச்சொல் இடம்பெற்ற வாக்கியத்தில் இருக்க வேண்டும். அரபியில் இதை கரீனா என்று கூறுவார்கள்.

நேரடிப் பொருள் கொள்ள காரணம் சொல்லத் தேவை இல்லை. ஏனெனில் அந்தப் பொருளைக் கொடுக்கத்தான் அச்சொல் உருவாக்கப்பட்டது.

உதாரணமாக யானை என்ற சொல் ஒரு விலங்கைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் இடம் பெறும் எல்லா இடங்களிலும் அந்த விலங்கு என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

கண் முன்னே குண்டாக ஒருவன் வரும் போது அவனை யானை என்று சொல்வோம். இந்த இடத்தில் யானை என்ற விலங்கு என்று பொருள் கொள்ளத் தடை உள்ளது. ஒரு மனிதனைப் பார்த்து விட்டு அதைச் சொல்வதால் யானை என்ற நேரடிப் பொருளில் சொல்லவில்லை. குண்டானவன் என்ற பொருளில் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் குண்டானவன் என்று பொருள் செய்ததால் யானை என்று சொலப்படும் எல்லா இடத்திலும் குண்டானவன் என்று பொருள் செய்வேன் என்பது வடிகட்டிய மடமையாகும்.

தந்தை என்ற சொல்லுக்கும் நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.

ஒருவரது தந்தை இன்னார் என்று தெரிந்திருக்கும் போது மற்றவரை தந்தை எனக் கூறினால் அந்த இடத்தில் தந்தை எனப் பொருள் கொள்ள முடியாத நிலை உள்ளது

யூசுப் நபியின் தந்தை யாகூப் என்பது தெரிந்த உண்மையாகும். யூசூப் நபியின் தந்தை இப்ராஹீம் என்றோ இஸ்ஹாக் என்றோ இஸ்மாயீல் என்றோ கூறினால் அங்கே தந்தை என்று பொருள் கொள்ளாமல் முன்னோர் என்ற பொருளைக் கொடுக்க வேண்டும்.

பூனையின் தந்தை என்று ஒருவரைக் கூறினால் மனிதன் பூனைக்கு தந்தையாக இருக்க முடியாது என்ற காரணத்துக்காக மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

அறிவின் தந்தை, மடமையின் தந்தை, ஒழுக்கத்தின் தந்தை என்று கூறப்பட்டால் இந்தப் பண்புகளுக்கு தந்தை இருக்க முடியாது; ஒழுக்கத்தின் முன்னோடி என்பது போன்ற மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

இப்ராஹீமின் தந்தை ஆஸர் என்றால் நேரடிப் பொருள் கொள்ள என்ன தடை?  இப்ராஹீமுக்கு இன்னார் தான் தந்தை என்று நபிகள் வேறு யரையேனும் சொன்னார்கள் என்று ஆதாரம் இருந்தால் அப்போது தான் வேறு அர்த்தம் கொடுக்க வேண்டும்.

இப்ராஹீம் நபியின் ஒரிஜினல் தந்தை இன்னார் என ஆதாரம் காட்டாமல் நேரடிப் பொருளை மாற்றுவது அறியாமையாகும்.

இந்த ஆக்கம் எழுதியவரின் கடவுச் சீட்டில் மூஸாவின் மகன் என்று குறிப்பிடப்பட்டால் மூஸா தந்தை இல்லை. பெரிய தந்தை தான் மூஸா என்று யாரேனும் சொல்வார்களா?

முஹம்மது நபியின் தந்தை அப்துல்லாஹ் என்று சொல்லும் போது அப்துல்லா தந்தை இல்லை; சித்தப்பா தான் என்று சொல்லலாமா?

எல்லா வரலாறையும் இப்படிக் கூறி கேலிக் கூத்தாக்க முடியும்.

ஆயிஷாவின் கொள்ளுப்பாட்டன் தான் அபூபக்ர் என்று சொல்வார்களா?

யூசுஃப் நபியின் தந்தை யாகூப் என்று 12:4, 12:8, 12:9, 12:11, 12:16, 12:17, 12:59, 12:61, 12:63, 12:65, 12:68, 12:78, 12:80, 12:81, 12:94, 12,97 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.  யாகூப், யூசுப் நபியின் சித்தப்பா என்று சொல்வார்களா?

மூஸா நபி, ஹில்ரு நபி சம்பவத்தில் 18:82 வசனத்தில் சிறுவனின் தந்தை என்று சொல்லப்படுகிறது. கொள்ளுப்பாட்டனைத் தான் இது குறிக்கிறது என்பார்களா?

மர்யமின் தந்தை என்று 19:28 வசனத்தில் கூறப்படுகிறது. இதன் பொருள் மர்யமின் பெரிய தந்தை என்பார்களா?

மூஸா நபியின் மாமனாரைக் குறித்து அவரது மகள் பேசும் போது 28:23, 28:25 28:26 ஆகிய வசனங்களில் தனது தந்தை என்று சொன்னதாக உள்ளது. இது தந்தையைக் குறிக்காது. பாட்டனாரைக் குறிக்கும் என்று சொல்வார்களா?

தந்தை என்ற சொல் பெற்றவரைக் குறிப்பதற்குத் தான் உருவாக்கப்பட்டது. அது தான் நேரடிப் பொருள். தந்தை என்று பொருள் கொள்ள முடியாத நிலை இருந்தால் மட்டுமே பொறுப்பாளர், சிறிய தந்தை, பாட்டனார் போன்ற பொருளைக் கொடுக்க முடியும்.

ஆஸர், இப்ராஹிம் நபியின் தந்தை என்று சொல்லக் கூடாது என்றால் அதற்கான காரணங்களையும் ஆதாரங்களையும் காட்ட வேண்டும்.

இதை விட இந்த ஆக்கம் எழுதியவர் எழுதிய இந்த வாசகத்தைப் பாருங்கள்!

உதாரணமாக, இஸ்மாயீல் நபி, இஷ்ஹாக் நபியின் தந்தை என அல் குர்ஆன் கூறுகிறது,  இஸ்ஹாக் நபிக்கும், இஸ்மாயீல் நபிக்கும் இடையில் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் என்பது நமக்குத்தெரியும்.

இப்படி இந்தக் கட்டுரையாளர் சொல்கிறார். இப்படி குர்ஆனில் சொல்லப்படவில்லை. இஸ்மாயீல் நபிக்கும் இஸ்ஹாக் நபிக்கும் நூற்றாண்டுகள் இடைவெளி கிடையாது. இருவரும் இப்ராஹீம் நபியின் புதல்வர்கள். அண்ணன் தம்பிகள் ஆவர். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இதைக் கூட அறியாமல் இந்தக் கட்டுரையாளர் வாயில் வந்தவாறு விட்டு அடித்துள்ளார்.

யூசுப் நபியின் இரு தந்தைகள் இஸ்மாயில் இஸ்ஹாக் என்று குர்ஆனில் உள்ளது. இதில் நேரடிப் பொருள் கொள்ளத் தடை உள்ளது. ஒருவருக்கு இரு தந்தை இருக்க முடியாது என்பது தான் காரணம்.

மேலும் யூசுப் நபியின் தந்தை யாகூப் என்று உறுதியாக உள்ளது. தந்தை அல்லாதவர்களை தந்தை என்று சொல்லும் போது பாட்டனார் என்ற பொருள் கொடுக்க வேண்டும்.

ஆதம் (அலை) அவர்களை நமக்குத் தந்தை என்று அல்லாஹ் கூறுகிறான். நம் ஒவ்வொருவருக்கும் தந்தை உள்ளதால் ஆதம் தந்தையாக இருக்க முடியாது. மூத்த பாட்டனார் என்று தான் பொருள் கொடுக்க முடியும்.

இப்ராஹீம் நபியை அல்லாஹ் நம் தந்தை என்கிறான். நமக்கு தந்தையாக வேறொருவர் உள்ளதால் ஆதம் நபி நமக்கு தந்தை என்று பொருள் கொள்ள முடியாது. மூத்த பாட்டனார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

ஆஸர் என்பார் இப்ரஹீம் நபியின் தந்தை என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கும் போது அல்லாஹ்வின் வசனத்தில் தவறான வியாக்யானம் கொடுத்து பாவத்தைச் சுமக்கிறார்கள்.

அடுத்து இப்னு கஸீர், தபரி ஆகியோர் இப்படி சொன்னதாகவும் இவர் கூறியுள்ளார். இவர்கள் வஹி பெற்ற நபிமார்கள் அல்ல. இவர்கள் அப்படி சொல்லி இருந்தாலும் ஆதாரமற்ற சொல்லை நாம் மதிப்பதில்லை.