சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா?

சமாதிகளைக் கட்டக் கூடாது; உயர்த்தக் கூடாது; பூசக்கூடாது என்று தெளிவான தடை இருந்தும் எப்படியாவது சமாதி கட்டுவதற்கு ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சித்து பின்வரும் ஹதீஸைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ‏مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ

அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவரை நோவினை செய்யாதீர் என்று என்னிடம் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 20934

கப்ரின் மேல் சாயக்கூடாது என்று நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ள முடியும். தரைமட்டமாக இருந்தால் அதில் சாய்ந்து கொள்ள முடியாது. கப்ரில் சாய வேண்டாம் என்று தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாயும் அளவுக்கு கப்ர் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறுகின்றனர்.

இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தி ஹாகிம் 6502, ஷரஹ் மஆனில் ஆஸார் 2944 இன்னும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153

எனவே இதை ஆதாரமாகக் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு போதும் நிறுவ முடியாது.

மேலும் வலுவான ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற அளவுக்கு தரம் இறங்குகிறது.