அலி (ரலிக்கு) மண்ணின் தந்தை என்ற பெயர் வரக் காரணம் என்ன?

அலீ (ரலி) அவர்களுக்கும் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வார்கள் என்றும் அதன் காரணமாகவே மண்ணின் தந்தை அபூதுராப் – என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவது உண்மையா?

ஜாகிர் ஹுஸைன், ஜித்தா

பதில்

அலீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுத் துராப் – மண்ணின் தந்தை – எனப் பெயர் வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் பெயர் வைத்ததற்கான காரணத்தைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

441 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ أَيْنَ ابْنُ عَمِّكِ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ قُمْ أَبَا تُرَابٍ قُمْ أَبَا تُرَابٍ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே? என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், எனக்கும், அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், அவர் எங்கே என்று பாருங்கள் என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!! என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் : புகாரி (441)

அலீ (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படும். அப்போது அலீ (ரலி) தன் தலையில் மண்ணை இட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து தவறானது. மேற்கண்ட சம்பவம் இவ்வாறு கூறவில்லை.