தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?

சஃபியுல்லாஹ்.

பதில் :

தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.

ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري

228 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை! அது ஒரு வித நோயாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 228

இந்த ஹதீஸில் தொடர் உதிரப் போக்குக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தீர்வு சொட்டு மூத்திரத்திற்கும் பொருந்தும். வழக்கமாகச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சிறுநீர் வெளியே வந்தாலும் அது நோய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீர் உண்மையாகவே கசிந்துள்ளதா  அல்லது கசியாமல் நமக்கு அப்படித் தோன்றுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சிறுநீர் கசியாமல் பிரமையாக இருந்தால் அதைப் பற்றி நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்ற ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்து விட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தான் மீண்டும் நாம் உளூச் செய்ய வேண்டும்.

137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ فَقَالَ لَا يَنْفَتِلْ أَوْ لَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا رواه البخاري

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்து விடுமா?)” என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல் : புகாரீ 137

எனவே உளூ முறிந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதைக் கண்டு கொள்ளாதீர்கள். சப்தம் அல்லது நாற்றத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தாலே மீண்டும் உளூச் செய்து கொள்ளுங்கள்.