கொள்கை விளக்கம்

நூலின் பெயர் : கொள்கை விளக்கம்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

கொள்கை விளக்கம்

பல்வேறு மாத இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அளித்த பதில்களில் கொள்கை சம்மந்தப்பட்ட பதில்கள் கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது

  • பைஅத், முரீது (தீட்சை)
  • கால் விழலாமா?
  • எழுந்து நின்று மரியாதை செய்தல்
  • தரீக்காவின் திக்ருகள்
  • தஸ்பீஹ் மணி
  • தப்லீக் ஜமாஅத்
  • ஜின்களை வசப்படுத்த முடியுமா?
  • சகுனம் பார்த்தல்
  • கப்ரு வேதனை
  • கந்தூரி
  • 786என்பதைப் பயன்படுத்தலாமா?
  • தர்கா ஸியாரத்
  • ஒற்றைப்படையாகக் கொடுத்தல்
  • கறுப்பு நிறமும், தரித்திரமும்
  • கனவில் வரும் கட்டளை
  • ஜம்ஜம் தண்ணீர்
  • புர்தா படிக்கலாமா?
  • அரபி மொழி தான் தேவ மொழியா?

பைஅத், முரீது (தீட்சை)

மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.

ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்  என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா?  எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது  என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!  என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை  என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.

இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது

இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!  என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959

தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?

மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.

இது பற்றி இறைவன் கூறும் போது

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக,தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 28:56

என்ற வசனத்தை அருளினான்.

எத்தனையோ நபிமார்கள் தங்கள் மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!  என்று நூஹ் கூறினார்.  ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை  என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.  பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது.  அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர்  எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்; உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்  என்றார்.  நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான்.  இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்  என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11: 42-48

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!  என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 66:10)

இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?

ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது  என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.

எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.

ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்)  சிஷ்திய்யா ஷைகு வரலாறு  என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.

மஷாயிகுமார்கள் (பெரியார்கள்) தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹே இத்திஹாதீ என்று சொல்லப்படுகின்றது.

(மேற்படி நூல் பக்கம் 10)

இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ  சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்  அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால்,  உனக்கு என்ன வேண்டுமோ கேள்!  என்றார்கள். அதற்கு அம்மனிதர் உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்!  என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய் என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ  செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.

(அதே நூல் பக்கம்: 11, 12)

இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக் கதைகளுக்கும் சுப்ஹானல்லாஹ்  சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!

மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர் என்பதை அறிவீர்கள்.

கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள் கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.

அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு  என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.

(அதே நூல் பக்கம் : 143)

ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.

(அதே நூல் பக்கம் 143)

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.

(அதே நூல் பக்கம் 156)

இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.

பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.

மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.

காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்

இசையில் மயங்கும் ஷெய்குகள்

தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்

என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.

ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன்  எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.

(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)

இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.

காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன்.  இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்  என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?  எனக் கேட்டார்கள்.  மாட்டேன்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது  எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது  என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே  என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.  எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்  என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

எழுந்து நின்று மரியாதை செய்தல்

வயதில் பெரியவர்,  ஆசிரியர்,  தலைவர்கள்,  முதலாளிகள்,  நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள்  அமருங்கள்  என்றனர்.  தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.

நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்  பாரசீக,ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்  என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 701

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.

பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர்.

(திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

தரீக்காவின் திக்ருகள்

சபையில் வட்டமாக அமர்ந்து

லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை

பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை

அஹ்  என்று 100 தடவை

கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து, வயிறு, தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத் தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா? இந்தக் கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணானவை. ஷாதுலியா தரீக்காவின் திக்ரு  என்று சில பகுதிகளில் நடத்தப்படும் இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன் 7:205)

பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், கைகால்களை உதறிக் கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில் கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.

மனதிற்குள்ளும், உரத்த சப்தமின்றியும் திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில் இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்த திக்ரோ பகிரங்கமாகவும், பயங்கர சப்தத்துடனும் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது இறைவனுக்கு ஆத்திரமூட்டுமா? அன்பை ஏற்படுத்துமா?  என்று சிந்தித்துப் பாருங்கள்!

இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து பாடுகின்றனர். மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. அந்தத் திருநாமங்களைக் கூறியே இறைவனை அழைக்க வேண்டும்; திக்ரு செய்ய வேண்டும்.

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன் 17:110)

அல்லாஹ்வுக்குரிய அழகிய திருநாமங்களில் அஹ்  என்றொரு நாமம் இருக்கிறதா?நிச்சயமாக இல்லை. அஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமம் இல்லை என்றால் இவர்கள் யாரை திக்ரு செய்கிறார்கள்? சம்மந்தப் பட்டவர்களிடம் இது பற்றிக் கேட்டால் அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா?

அல்லாஹ் என்ற திருநாமத்தில் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து சுருக்கமாக அஹ்  என்று கூறுகிறார்களாம். இப்படி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரிக்க அனுமதி இருக்கிறதா?

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 7:180)

அல்லாஹ்  என்பதை அஹ்  என்று திரித்துக் கூறும் இவர்களைத் தன்னிடம் விட்டு விடுமாறும் அவர்கள் தண்டனை வழங்கப்படுவார்கள் என்றும் இங்கே இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தக் கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் திருநாமத்தில் விளையாடுவது திக்ராகுமா? என்று சிந்தியுங்கள்!

அப்துல் காதிர் என்று பெயரிடப்பட்ட ஒருவர் அர்  என்று அழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்ராஹீம் என்று பெயரிட்டவர் இம்  என்று அழைக்கப்படும் போது ஆத்திரம் கொள்கிறார்.

சாதாரண மனிதர்களே இவ்வாறு இருக்கும் போது யாவற்றையும் படைத்த கண்ணியத்திற்குரிய அல்லாஹ் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்? இந்த திக்ரு கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மேலும் அந்த ஹல்காவில் (சபையில்) பாடப்படும் பாடல்கள் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும், இறைவனைக் கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ளன.

ஹா! ஹா! ஹா! என்று சினிமா வில்லன்கள் சிரிப்பது போன்று அர்த்தமில்லாத உளறல்களை திக்ரு என்று பாடுகின்றனர்.

ஹாவா உலுவ்வன் வஹா ஹாஹா

ஹுபீஹி இலாஹ பாஹா பஹாஹுமன்

முதாஹுஸி ஹுதஹி ஹா ஹா ஹா.

எந்த அர்த்தமும் இல்லாது ஹாஹாஹீ ஹு ஹு என்று உளறுவது தான் இறைவனை திக்ரு செய்யும் முறையா?

என் தலைவா! இந்த ஹல்காவில் உள்ளவர்களின் பக்கம் உங்கள் பார்வையை வீசுங்கள்! அது கஷ்டத்தையும், சிரமத்தையும் அகற்றி விடும்.

என் தலைவா! உங்களுடன் எனக்குள்ள உறவு காரணமாக எனக்கு வாரி வழங்குங்கள்!

என்றெல்லாம் பாடப்படுகிறது.

மவ்லானா மவ்லானா என்ற பாடலிலும் பாஸி என்பவரைக் கடவுள் நிலையில் வைத்து அவரிடம் வேண்டுதல் செய்யப்படுகிறது.

அல்லாஹ்வை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் பாஸி என்பவரை அல்லாஹ்வாக்கும் யூதர்களின் சதித் திட்டம் இதிலிருந்து தெரிகின்றது.

இந்த பாஸி என்பவரின் உளறல்களும் பாடப்படுகின்றன.

அர்ஷ், குர்ஸீ மற்றும் ஸுரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே உள்ளவற்றையும் நான் கண்டேன். அவை எனது ஆணைக்கு அடிபணிகின்றன.

தாகத்துடன் வருபவனுக்கு நானே புகட்டுகிறேன். என்னை அழைப்பவை இரட்சிக்கிறேன். அனைத்து விஷயங்களிலும் பரிந்துரை செய்கிறேன்.

திக்கற்றவனே! நீ தாகத்துடனிருந்தால் என்னை பாஸி என்று அழை! விரைந்து வருகிறேன்.

இவை யாவும் பாஸி என்பவரின் உளறல்கள். இறைவனை திக்ரு செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இந்த உளறலைத் தான் பாடுகின்றனர்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கிண்டல் செய்யும் பாடல்களும் இந்த ஹல்காவில் பாடப்படுகின்றன.

உன்னை அனைவரும் நரகத்தை அஞ்சி வணங்குகிறார்கள். மறுமை வெற்றியைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். சொர்க்கத்தில் குடியிருக்கவும் ஸல்ஸபீல் எனும் பானத்தை அருந்தவும் விரும்புகின்றனர். எனக்கோ, சொர்க்கம், நரகம் பற்றி அக்கறையில்லை. என் நேசத்திற்கு எந்தப் பிரதிபலனையும் நான் வேண்ட மாட்டேன்.

சொர்க்கத்தை வேண்டுமாறும், நரகத்திற்கு அஞ்சுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதைக் கிண்டல் செய்யும் திமிர் பிடித்த இந்த வார்த்தைகளைத் தான் திக்ரு என்று பாடுகின்றனர்.

முஹம்மதை நேசிக்கும் எவரும் தூங்கக் கூடாது என்ற இந்த உளறலும் இந்தப் பாடல்களில் உள்ளது.

இந்தப் பாடல்களில் தமாஷுக்கும் பஞ்சமில்லை.

என் கையைப் பிடித்து என்னை விரும்பக் கூடியவர்களிடம் என்னை விற்று விடுங்கள்! என் கையைப் பிடித்து கடை வீதிக்குக் கொண்டு போய் காதலர்களிடம் என்னை விற்று விடுங்கள்

இந்த ஹல்காவில் இந்தப் பாடல் வரிகளைப் பாடும் போது அவர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்று கடை வீதியில் விற்று விடுங்கள்!

இப்போது சொல்லுங்கள்! இந்த தமாஷும், வில்லன் சிரிப்பும், உளறல்களும் மனிதனைத் தெய்வமாக்கும் போக்கும் அதையொட்டி நடக்கும் கூத்தும் இறைவனை திக்ரு செய்வதாகுமா? பார்த்தாலே பளிச்சென்று தெரியக் கூடிய இந்தக் கோமாளித் தனங்கள் பள்ளிவாயிலில் அரங்கேற்றப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை.

தஸ்பீஹ் மணி

பிற மதத்தவர்கள் வைத்திருக்கும் ஜெபமாலையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே தஸ்பீஹ் மணி.

அல்லாஹ்வின் தூதரும், அவர்களின் அன்புத் தோழர்களும் இந்த ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கவில்லை.

யார் பிற சமயக் கலாச்சாரத்திற்கேற்ப நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : அபூதாவூத் 3512, அஹ்மத் 4868

எனவே பிற சமயத்தவரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த தஸ்பீஹ் மணி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3332, 3408, நஸயி 1331,

உங்கள் விரல்களால் எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3507, அபூதாவூத் 1283

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பெண்ணிடம் சென்றோம். அவருக்கு முன்னால் சிறு கற்களோ, பேரீச்சங்கொட்டைகளோ இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பெண் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்

அறிவிப்பவர் : ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3491, அபூதாவூத் 1282

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் மணி வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

ஆனால் இந்த ஹதீஸ் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் குஸைமா என்பவர் யாரென்று அறியப்படாதவர். இதனை தஹபீ அவர்கள் மீஸானிலும்,இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும், குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் ஸயீத் பின் அபீ ஹிலால் என்பவர் நம்பகமானவராக இருந்தவர். எனினும் கடைசிக் காலத்தில் நினைவுத் தடுமாற்றம் கொண்டவராகி விட்டார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸ் ஏற்கப்பட முடியாததாகும்.

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்:

நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம் பழக் கொட்டைகளைக் குவித்து வைத்திருந்த போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்  நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா?  கேட்டார்கள்.  எனக்குக் கூறுங்கள்  நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு!  என்றார்கள்.

அறிவிப்பவர் : சஃபிய்யா (ரலி)

நூல் : திர்மிதீ 3477

இந்த ஹதீஸும் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹாஷிம் பின் ஸஃது என்பவர் நம்பகமானவர் அல்ல என்று தஹபீ அவர்கள் மீஸானி லும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும் கூறுகின்றனர்.

மேலும் இதன் இரண்டாம் அறிவிப்பாளர் கினானா  என்பவர் யாரென்றே தெரியாதவர்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மார்க்கத்தில் எப்போது பார்த்தாலும் தஸ்பீஹ் செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை. ஒரு முஸ்லிமுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன.

மனைவி, மக்களைக் காக்கும் கடமை, பிரச்சாரம் செய்யும் கடமை போன்ற கடமைகளைச் செய்ய வேண்டியவன் பல்லாயிரக் கணக்கில் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தால் அந்தக் கடமைகளையெல்லாம் அவனால் செய்ய முடியாமல் போகும்.

நபிகள் நாயகம் அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்படும் அதிக பட்ச எண்ணிக்கை 100 க்கு மேல் இல்லை. இதை எண்ணுவதற்கு கைவிரல்களே போதுமானதாகும்.

தஸ்பீஹ் மணி ஏற்படுத்திய விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தாம் எப்போதும் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது.

தஸ்பீஹ் மணியைக் கையால் உருட்டிக் கொண்டு மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களையும் கூட நாம் காண முடிகின்றது.

இன்னும் சிலர் தஸ்பீஹ் மணியை உருட்டும் போது யாரேனும் ஸலாம் கூறினால் அதற்குக் கூட அவர்கள் பதில் சொல்வதில்லை. ஒரு தலை அசைப்புத் தான் ஸலாமுக்குப் பதிலாகக் கிடைக்கும். ஸலாமுக்குப் பதில் கூறுவது கடமை என்பதைக் கூட இவர்களால் உணர முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத இந்த நவீன கண்டு பிடிப்பு அல்லது காப்பியடிப்பு புனிதம் நிறைந்த பொருளாகக் கூட மாறி விட்டது.

நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் இது இல்லாததாலும் அது ஏற்படுத்தும் தீய விளைவின் காரணமாகவும், பிறரிடமிருந்து அது காப்பியடிக்கப்பட்டது என்பதாலும் இந்த ஜெபமாலை தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும், இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தப்லீக் ஜமாஅத்

முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஜமாஅத்தில் நம்மை இணைத்துக் கொள்ளலாமா? அந்த ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளனவா?

நாற்பது நாட்கள், ஒரு வருடம் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றனர். இது சரியா? என்றெல்லாம் பல கேள்விகள் முஸ்லிம்களிடையே நிலவுகின்றன.

எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது நாட்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ மார்க்க வேலைகளுக்காகவோ சொந்த வேலைக்காகவோ வெளியூர் செல்வது மார்க்கத்தில் குற்றமாகாது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அறப்போர் செய்வதற்காகவும், ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் பிரயாணம் மேற்கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை;அனுமதிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக இறைவனது கட்டளைப்படி ஹில்று (அலை) அவர்களைச் சந்திக்க மேற்கொண்ட பயணம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.

(திருக்குர்ஆன் 18:60 – 18:82)

ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து வந்த நபித் தோழர்களும் இருந்துள்ளனர்.

புகாரி : 88, 2640

நல்ல காரியங்களுக்காகப் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இது பற்றி இன்னும் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

எனவே பயணம் செய்வது சரியா? தவறா? என்ற அடிப்படையில் இதனை அணுகுவது சரியில்லை. இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அடிப்படையிலேயே இந்த ஜமாஅத் சரியான ஜமாஅத்தா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும்.

எதற்காக மக்களை அழைக்கிறீர்கள்?  என்று கேட்டால்,  தொழுகையின் பால் மக்களை அழைப்பதற்காகத் தான் ஆள் சேர்க்கிறோம்  என்று கூறுகின்றனர்.

தொழுகை எனும் மிக முக்கியமான கடமையின் பால் மக்களை அவர்கள் அழைக்கின்றனர்; இதற்காக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரயாணம் மேற்கொள்கின்றனர்  என்பது உண்மை தான். * பெருமையும், கர்வமும் கொண்ட பலர்,தப்லீக் ஜமாஅத் மூலம் சாதுவானவர்களாக மாறியுள்ளதை மறுக்க முடியாது.

* பெரும் செல்வந்தர்கள் கூட இந்த ஜமாஅத்தில் செல்லும் போது சமையல் செய்வதற்கும் முன் வருகிறார்கள்.

* தஹஜ்ஜுத், லுஹா போன்ற வணக்கங்களைப் பேணுதலுடன் செய்து வருகின்றனர்.

* சினிமாக்களை விட்டு விடுகின்றனர்.

இவைகளெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்கள் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அந்த ஜமாஅத்தில் உள்ள இது போன்ற நல்ல அம்சங்களை மறுப்பவர்கள் உண்மையை விரும்பக் கூடியவர்களாக இருக்க முடியாது.

அதற்காக ஒட்டு மொத்தமாக தப்லீக் ஜமாஅத்தை ஆதரித்து விட முடியாது.

மார்க்கத்திற்கு விரோதமான போக்குகள் உள்ளனவா என்பதையும் நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

ஊர் ஊராக அழைத்துச் செல்லப்படும் மக்களுக்குப் போதிக்கப்படும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களின் தஃலீம் வகுப்புக்களில் திருக்குர்ஆன் விரிவுரையோ, அதன் தமிழாக்கமோ, நபிமொழிகளின் ஆதாரப்பூர்வமான தமிழாக்கமோ படிக்கப்படுவதில்லை.

படிக்கப்படுவது இல்லை என்பது மட்டுமில்லை. படிக்கப்படுவதற்கு பகிரங்கத் தடை விதிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனையும். நபிகள் நாயகம் (ஸல்) வழியையும் படிக்கத் தடை விதிக்கும் கூட்டத்தில் பயணம் செய்யலாமா?

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும், அவனது தூதருடைய போதனைக்கும் தடை விதித்து விட்டு, இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் நூல் மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நூலாசிரியருக்கும், ஹஜ்ரத்ஜீக்கும் உள்ள மாமனார் மருமகன்  உறவு தான் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று விபரமறிந்தவர்கள் விமர்சிப்பதில் நியாயம் இருப்பதாகவே நமக்குப் படுகின்றது.

அந்த நூல் தொகுப்பாவது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனுக்கே வேட்டு வைக்கும் சங்கதிகள் அந்த நூல் ஏராளம்! இறைத் தூதரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுக்கும் பஞ்சமில்லை! பெரியார்கள் பெயரால் கட்டுக் கதைகள் ஏராளம்! இது போன்ற கதைகளை அறிந்து கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்ளலாமா?

தனது வயிற்றுக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் உழைக்குமாறும், குடும்பத்திற்குரிய கடமைகள் ஆற்றுமாறும் இஸ்லாம் போதிக்கின்றது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள்.  இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நூல்: புகாரி 1975, 6134

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?  என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி),  உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை  என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா,  நான் நோன்பு வைத்திருக்கிறேன்  என்றார்.  நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்  என்று ஸல்மான் கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி)  உறங்குவீராக!  என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், உறங்குவீராக!  என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி)  இப்போது எழுவீராக!  என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம்  உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபுத்தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ஸல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஜுஹைபா (ரலி)

நூல் : புகாரி: 1968, 6139

சில்லாவுக்கு அழைக்கும் போது இந்தக் கடமைகள் பின் தள்ளப்படுகின்றன. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்று கூறி எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கச் செய்யும் அளவுக்கு இந்த சில்லா வின் மீது வெறியூட்டப்படுகின்றது. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்பதற்கு இவர்கள் கொண்டது தான் பொருள் என்றால் குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவன் நம் மீது சுமத்தியிருப்பானா என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பல கடமைகளைப் புறக்கணிக்கத் தூண்டும் இந்தப் பிரயாணம் சரி தானா என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? இவர்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். எந்த இயக்கமும் எந்த நபரும் பயணத்தின் போது பண்ட பாத்திரங்களையும், சட்டி பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. ஆனால் இவர்கள் அனைத்து சமையல் சாதனங்களையும் கூடவே எடுத்துச் செல்பவர்களாக உள்ளனர். அதாவது சோத்துக்கு மட்டும் அல்லாஹ் பார்த்துக் கொள்ள மாட்டான் என்பது போல் இவர்களின் நம்பிக்கை அமைந்துள்ளது.

மேலும் இந்த ஜமாஅத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளும், வீரமும் மழுங்க வைக்கப்படும் அளவுக்கு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

தங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்காக அறப்போருக்குச் சென்ற நபித் தோழர்களின் வீரமிக்க பயணமும், இது பற்றி ஆர்வமூட்டிய நபிமொழிகளும் சோற்றுப் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு இவர்கள் செல்கின்ற பயணத்தைப் பற்றியது என்று போதிக்கத் துணிந்து விட்டனர்.

தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு, முழங்காலுக்குக் கீழ் ஜுப்பாவை அணிந்து கொண்டு பள்ளியின் ஒரு மூலையில் அல்லது ஒரு தூணில் சாய்ந்து விடுவது தான் இஸ்லாம் என்று கற்பிக்கத் தலைப்பட்டு விட்டனர். இஸ்லாத்திற்கு தவறான வடிவத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கோழைகளாக ஆக்கும் இந்த ஜமாஅத் எப்படி சரியான ஜமாஅத்தாக இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் எந்த அளவுக்கு மரியாதை செய்யலாம் என்பதற்கு இஸ்லாம் வரம்பு கட்டியுள்ளது. இந்த வரம்பு மார்க்கத்தின் பெயரால் மீறப்படுகின்றது.

ஷியாக்களில் உள்ள மதத் தலைமை போல் தப்லீக் ஜமாஅத்திலும் ஹஜ்ரத்ஜீ  என்ற பெயரால் மதத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு, அவர்களின் தோழர்கள் செய்யாத அளவுக்கு ஹஜ்ரத்ஜீ க்கு மரியாதை செய்யப்படுகின்றது.!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தன் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்தத் தண்ணீரையே தாருங்கள்  எனக் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே  என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்  எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி  இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1636

மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலதரப்பட்டவர்களின் கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாக்களில் ஹஜ்ரத்ஜீக்கும் முக்கிய தலைவர்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்டுகின்றது.

ஹஜ்ரத்ஜீ என்பவர் மற்றவர்களைப் போன்ற மனிதர் அல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் வாரிசுகள் தான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஒரு முழம் உயரத்திற்கு ஒரு குஷன் மெத்தை

உயரமாக திண்டுகள்

உடலைப் பிடித்து விடுவதற்காக விடலைப் பையன்கள்

இப்படி ராஜ தர்பார் கொடிகட்டிப் பறக்கின்றது. பிற மதங்களின் அவதாரப் புருஷர்கள் போலவும், ஆச்சார்யர்கள் போலவும் இப்பதவியைப் பெற்றவர்கள் மதிக்கப்படும் நிலை உள்ளது.

அவர் வருவதற்கு முன் பராக் சொல்ல எத்தனை பேர்? அவரைத் தொட்டு விட்டாலே பாவங்கள் பறந்து போகும் என்போர் எத்தனை பேர்?

திண்டுக்கல்லில் (1990) நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக போஸ்ட் கார்டுகள்,பள்ளிவாசல் போர்டுகள், ஜும்ஆ பிரசங்கங்கள் மூலம் மக்கள் அழைக்கப்பட்ட போது ஹஜ்ரத்ஜீ யின் துஆவுக்கு வாருங்கள்  என்பதே பிரதானப்படுத்தப்பட்டது. அங்கு பேசப்படும் கருத்துக்களை விட இவரது நல்லாசியே முக்கிய குறிக்கோளாகிப் போனது. இந்த துஆ நடக்கும் நேரத்திற்கு மட்டுமே புறப்படுபவர்களும் உள்ளனர்.

உலகத்தில் வாழுகின்ற – அல்லது இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்களில் இவர் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவர் என்று இவர்களுக்குச் சொல்லித் தந்தவர் யார்?

இவர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர் யார்?

இவரது துஆவுக்கு இருக்கும் அற்புத சக்தியை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?

இன்னும் அனேகக் குறைபாடுகள்!

* சட்டங்களை ஆலிம்கள் தான் சொல்ல வேண்டும் என்று புரோகிதத்துக்கு வக்காலத்து!

* நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தீமையைக் கண்டு கொள்ளாத நிலை!

நன்மைகளிலும் ஒன்றிரண்டு நன்மைகளை மட்டுமே சொல்லிவிட்டு மற்ற நன்மைகளை பேசாமல் மவுனம் சாதித்தல்.

இப்படி தப்லீக் ஜமாஅத்தின் தீய செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறிப்பு : இல்யாஸ் மவ்லானா அவர்களின் தப்லீக்குக்கும் இன்று மாறியுள்ள தப்லீக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

ஜின்களை வசப்படுத்த முடியுமா?

ஜின் அத்தியாயத்தை 40 நாட்கள் தொடர்ந்து ஓதினால் ஜின்களை வசப்படுத்தலாம் என்று சில ஆலிம்கள் கூறுகின்றனர்.

ஜின் என்று அத்தியாயம் இருப்பது போல்,  யானை,  எறும்பு,  தேனீ,  சிலந்தி,  மாடு,  மனிதன், பெண்கள் என்றெல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன.

அந்த அத்தியாயங்களை ஓதினால் அவற்றை வசப்படுத்த முடியுமா? ஜின் பற்றிக் கூறப்படுவதால் தான் அந்த அத்தியாயத்திற்கு அப்பெயர் வந்தது. ஜின்னை வசப்படுத்தலாம் என்பதால் அல்ல.

ஜின் என்ற படைப்பு மனிதனைப் போல் அறிவு படைத்ததும், மனிதனை விட பலமிக்கதுமாகும். பகுத்தறிவும், பலமும் கொண்ட ஓர் இனத்தை அதை விட பலத்தில் குறைந்தவர்கள் எப்படி வசப்படுத்த முடியும்?

ஜின் என்ற படைப்பை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இதை ஓர் சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மற்ற எவரும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.  தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்  என்று கூறினோம்.

திருக்குர்ஆன் 34:12,13

சுலைமான் நபிக்குக் கட்டுப்படா விட்டால் நரகில் தள்ளுவேன் என்று பிரத்தியேகமாக இறைவன் கட்டளையிட்டதால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்குக் வசப்பட்டன. மற்றவர்களுக்குக் கட்டுப்படுமாறு இறைவன் கட்டளை எதுவும் ஜின்களுக்குப் பிறப்பிக்கவில்லை.

எனவே இது சுலைமான் நபிக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதியாகும். பொதுவாக எந்த மனிதனும் ஜின்களை ஒருக்காலும் வசப்படுத்த முடியாது.

ஜின்களை வசப்படுத்தி இருப்பதாக யாராவது உங்கள் காதுகளில் பூச்சுற்றினால் நம்பி ஏமாற வேண்டாம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாமல் ஜின்களைப் பயன்படுத்தி இதை நிரூபித்துக் காட்டச் சொல்லுங்கள். ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஜின்களைப் பயன்படுத்தி மாளிகை ஒன்றை எழுப்பிக் காட்டட்டும். இப்படியெல்லாம் ஜின்கள் செய்தததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று (ஸுலைமான்) கேட்டார்.  உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்  என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

திருக்குர்ஆன் 27:38,39

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

எங்கோ இருக்கின்ற சிம்மாசனத்தை சில வினாடிகளில் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு ஜின்களின் ஆற்றல் உள்ளது. எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் வானுலகத்தின் எல்லை வரை சென்று வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் உண்டு. இதை மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களிலிருந்து அறியலாம்.

ஜின்களை வசப்படுத்தியுள்ளதாகக் கூறுவோர் உண்மையாளர்கள் என்றால் இது போன்ற சாகசங்களைச் செய்து காட்ட வேண்டும்.

கோலார் தங்க வயலில் நுழைந்து, பத்து கிலோ தங்கத்தை எடுத்து வா  என்று ஜின்களுக்குக் கட்டளையிட்டு, அதைச் செய்து காட்டட்டும்.

மனித குலத்தில் முதலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஜார்ஜ் புஷ்ஷைப் பிடித்துக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிட்டு உலகத்திற்கு நன்மை செய்து காட்டட்டும்.

ஜின்களை வசப்படுத்தியிருந்தால் இவற்றை மிகச் சாதாரணமாகச் செய்து காட்ட இயலும்.

இந்தப் பித்தலாட்டக்காரர்கள் இதில் எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

இவர்களை இழுத்துப் போட்டு உதைக்கும் போது அதைத் தங்களிடம் உள்ள ஜின்களை விட்டுத் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

உங்களிடம் ஒரு வேளைச் சோற்றுக்கும், ஒண்ணே கால் ரூபாய்க்கும் கையேந்தி நிற்பவர்களிடம் ஜின்கள் வசப்பட்டிருப்பதாக நம்பி ஈமானையும், அறிவையும் இழந்து விட வேண்டாம்.

சகுனம் பார்த்தல்

நாள், நட்சத்திரம் பார்த்தல், சகுணம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ, துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

எந்த நாள் கெட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், பொருள் வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம். முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி) படுகொலை செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அதை நல்ல நாள் என்பதா?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால் அதைக் கெட்ட நாள் என்பதா?

நாட்களுக்கும், நல்லது கெட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம் .

(அல்குர்ஆன் 3:140)

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேல் பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன்  என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதி மொழிக்கு முரணாகும்.

ஒரு நாள், நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்?இதைச் சிந்திக்க வேண்டாமா?

வருங்காலத்தில் நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும் ஒன்று தான். ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 4137

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்கள், ஹஸரத்துகளின் நிலைமையைப் பாருங்கள்! வறுமையிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும், மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம் காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடிந்ததா? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். நாள் நட்சத்திரம், சகுணம், ஜோதிடம் ஆகிய அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வது அவசியமாகும்.

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி

கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு?  இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?

என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், முஸ்லிமல்லாதவர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.

(பார்க்க புகாரி: 1207, 1252)

மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர்.

பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிமல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது  என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!  என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:100

கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

ஓரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஓரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:42)

அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு. நமது புலனுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது  என்ற கருத்து நிலை பெறும்.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே.

இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.

அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்குச் சிரமமல்ல.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.

அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

கந்தூரி

தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டால் நபியைப் பின்பற்றுவதன் அவசியத்தை அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக்குவது என்பதிலேயே அவர்களின் கவனம் செல்கின்றது.

இறை நேசர்களில் சிலர் இந்த மார்க்கத்துக்காக ஆற்றிய சேவைகளைக் கூறினால் நாமும் அப்படிச் சேவை செய்ய வேண்டும்  என்று அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக ஆக்கலாம் என்பதில் தான் அவர்களுக்குக் கவனம்.

புகாரி இமாம் அவர்கள் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக செய்த தியாகத்தைக் கூறினால் அதிலிருந்து ஹதீஸ்களின் முக்கியத்துவத்தை உணர மாட்டார்கள். மாறாக அதையும் விழாவாக்குவது அவர்களின் நோக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் எத்தனையோ நபிமார்கள் சென்று விட்டனர். அவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கந்தூரி நடத்திக் கொண்டிருக்கவில்லை. உணவுகள் வழங்கிக் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறக்கச் செய்வதற்காக ஷைத்தான் விரிக்கும் மாய வலைகள் இவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் மவ்லூது ஓதினால் போதும்; எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்தது இந்த விழாக்கள் தான்.

புகாரி கந்தூரி நடத்துவது தான் ஹதீஸுக்குச் செய்யும் மரியாதை. ஹதீஸைப் பின்பற்ற வேண்டியதில்லை  என்ற எண்ணம் வளரவும் இந்த விழாக்கள் தான் காரணம்.

உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

786 என்பதைப் பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன)

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பார்க்க : அல்குர்ஆன் 27:30

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எழுதியுள்ளனர்.

பார்க்க : புகாரி 7, 2941, 4553

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

தர்கா ஸியாரத்

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777)

அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்  என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்.  அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை  என்றார்.  இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை  என்றார்.  அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு,திருவிழா போன்றவை இருக்கக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில் பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும், பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 78

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

ஒற்றைப்படையாகக் கொடுத்தல்

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

இது சரியா?

இறைவன் ஒற்றையானவன், ஒற்றையை அவன் விரும்புகிறான்  என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6410

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261, 1263,

பெருநாளின் போது ஒற்றை எண்ணிக்கையில் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடுவார்கள்

நூல்: புகாரி 953

ஒற்றை எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறுமாறு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று 34 தடவை கூறுமாறு கற்றுத் தந்துள்ளனர்.

ஒரு பிரச்சினைக்கு சாட்சி கூறுபவர்கள் இருவர் என்று குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 100 என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் ஜோடியாகப் படைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகள் இரட்டை ரக்அத்களையே கொண்டுள்ளன.

இது போல் இன்னும் அனேகம் உள்ளன.

ஒற்றையாகவும், இரட்டையாகவும் பல காரியங்கள் குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்படுகின்றன.

எவற்றை ஒற்றையாகச் செய்ய வேண்டும் என்றோ, இரட்டையாகச் செய்ய வேண்டுமென்றோ ஆதாரம் கிடைக்கின்றதோ அவற்றை அவ்வாறு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களில் நம் வசதி போல் செய்து கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.

ஒரு பொருளின் விலை இரண்டு ரூபாய் என்று வியாபாரி கூறினால் ஒற்றையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ரூபாய் கொடுக்க முடியாது.

100 ரூபாய் என்று பேசிய பிறகு ஒரு ரூபாயை ஒட்டுவது ஏமாளித்தனமாகும்.

இது போன்ற மூட நம்பிக்கைகளுக்குச் சான்றாக அந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரட்டையாகவும் பல காரியங்கள் மார்க்கத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸை ஆராயும் போது அதன் பொருள் தெளிவாகும்.

இறைவன் (வித்ராக) ஒற்றையாக இருக்கிறான். ஒற்றையாக இருப்பதையே விரும்பவும் செய்கிறான்  என்று பொருள் கொள்வது உசிதமாகும்.

பொதுவாக மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் தனித்திருப்பதை விரும்புவதில்லை. துணையுடனிருப்பதையே விரும்புகின்றனர். தனிமை போரடிக்கக் கூடியதாகத் தான் பெரும்பாலும் அமையும்.

ஆனால் படைத்த இறைவன் தனித்தவனாக இருப்பதுடன் தனித்தவனாக இருப்பதை விரும்பவும் செய்கிறான். தனக்குப் போரடிக்காமலிருக்க வேண்டுமென்பதற்காக மனைவி,மக்கள், சுற்றம் எதுவும் வேண்டும் என்று விரும்புவதில்லை. தனிமை அவனுக்குப் போரடிப்பதில்லை. அவனுக்கே அது தான் விருப்பமானது.

இவ்வாறு பொருள் கொள்ள ஏற்றதாக அந்த ஹதீஸ் இருப்பதுடன் பொருத்தமானதாகவும் அமைகின்றது.

மற்றவர்களின் செயல்களும் ஒற்றையாக இருப்பதை அவன் விரும்புகிறான் என்று பொருள் கொண்டால் ஒற்றையில்லாத பல விஷயங்களை அவன் மார்க்கமாக ஆக்கியிருக்க மாட்டான்.

கண்கள், காதுகள், கால்கள் என்று எத்தனையோ இரட்டைகள் அவன் படைப்பில் உள்ளன. இரட்டையாக எத்தனையோ மார்க்க அனுஷ்டானங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒற்றையாக இறைவன் ஆக்கவில்லை.

* அவன் ஒற்றையானவன் (தான்,) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

* அவன் ஒற்றையானவன். (மற்றவர்களின் செயல்களும்) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

இப்படி இரண்டு விதமான பொருளுக்கும் அந்த ஹதீஸ் இடம் தந்தாலும் முதலாவது பொருளே சரியானதாக நமக்குத் தோன்றுகிறது. அவ்வாறு பொருள் கொள்ளும் போது முரண்பாடு ஏற்படுவதில்லை.

கறுப்பு நிறமும், தரித்திரமும்

முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்காவில் பிரவேசித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2638

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

நூல்: முஸ்லிம் 2639

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடி கறுப்பு நிறமாக இருந்தது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 1604

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு மேலாடை அணிந்து மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: நஸயீ 1490

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்புப் போர்வை அணிந்திருந்தார்கள். ஹஸன்,ஹுசைன், ஃபாத்திமா ஆகியோரை அதற்குள்ளே சேர்த்துக் கொண்டார்கள்.

நூல்: முஸ்லிம் 4450

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கறுப்பு மேலாடை ஒன்றைத் தயார் செய்து கொடுத்தேன். அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். வியர்வை ஏற்பட்டதும் கம்பளி வாடையை உணர்ந்ததால் அதைக் கழற்றி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 3552

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புப் போர்வை, கறுப்புக் கம்பளி அணிந்ததாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

கறுப்பு நிறப் பொருட்கள் தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என்று இதிலிருந்து உணரலாம். காவி நிற ஆடையைத் தவிர மற்ற எல்லா நிறங்களும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கனவில் வரும் கட்டளை

இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா?

என்னை நீங்கள் கனவில் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் கனவில் நான் வந்தது எனக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. கனவில் வந்தது உண்மையில் நான் தான் என்றால் வந்த எனக்கல்லவா அது முதலில் தெரிய வேண்டும்?

கனவில் ஒருவர் வருவது என்பது வருபவரின் விருப்பத்தின்பாற்பட்டதன்று. மாறாகக் காண்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

இறந்தவரோ, உயிருடன் உள்ளவரோ உங்கள் கனவில் வந்தால் உண்மையில் அவர் வரவில்லை. அவர் வந்ததாக உங்களுக்குத் தோன்றுகிறது. அவ்வளவு தான். எனவே கனவில் ஒருவர் வந்து கட்டளையிடுவது என்பதற்கு இடமே இல்லை.

அல்லாஹ் இந்த மார்க்கத்தைத் தன் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் நிறைவு செய்து விட்டான். மார்க்கத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவன் சொல்லாமல் விட்டதில்லை. அவ்வாறிருக்க, கனவின் மூலம் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. கனவுகளின் மூலமும் இறைவன் கட்டளைகளைப் பிறப்பிப்பான் என்றால் மார்க்கம் நபியவர்கள் மூலமாக முழுமைப்படுத்தப்படவில்லை என்று ஆகி விடும்.

கனவுகள் மூலமாகவே கட்டளைகளை இறைவன் பிறப்பிப்பான் என்றால் எந்த நபியையும் அவன் அனுப்பியிருக்கத் தேவையில்லை. நபிமார்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக வேண்டியதுமில்லை. ஒவ்வொருவருக்கும் கனவிலேயே அனைத்தையும் கட்டளையிட்டு விடலாம்.

நபிமார்கள் இறைவனுடன் நேரடித் தொடர்பு உடையவர்கள் என்பதால் அவர்களின் கனவுகள் மட்டுமே வஹீ என்று ஹதீஸ்களில் காண்கிறோம்.

கனவில் யாரும் உங்களுக்குக் கட்டளையிடுவதாக உங்களுக்குத் தெரிந்தால் அப்படி நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்று பொருளேயன்றி  அவரே வந்தார்; கட்டளையிட்டார்  என்பது அதன் பொருளன்று.

இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!  என்று ஒருவர் கூறுவது போல் ஒருவர் கனவில் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல.

ஏனெனில் இந்த நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். கனவின் மூலம் காட்டித் தரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறை ஏதும் வைக்கவில்லை.

மேலும் இது போன்ற செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இது போல் கூறப்பட வேண்டும். ஏனெனில் வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.

இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக அந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு  என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.

ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும், வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க : புகாரி 417, 418, 827, 1244, 1301, 3195, 4087, 4089, 5368  பார்க்க : முஸ்லிம் 1763, 1765

எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.

பார்க்க : முஸ்லிம் 1764

அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூற மாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்று கண்டு கொள்ளலாம்.

கனவுகள் என்ற நமது நூலில் ஹதீஸ்களின் ஆதாரங்களுடன் விரிவாக இதை விளக்கியுள்ளதால் அந்த ஆதாரங்களை இங்கே குறிப்பிடவில்லை. மேல் விபரங்களுக்கு அந்த நூலைப் பார்வையிடுக.

ஜம்ஜம் தண்ணீர்

ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா?

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.

நூல்: திர்மிதீ 886

ஜம்ஜம் தண்ணீரின் வரலாற்றிலிருந்தே அந்தத் தண்ணீரின் புனிதத்தை நாம் அறியலாம்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் சிறு குழந்தையாக இருந்த போது தாகத்தால் துடித்தனர். அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஒரு வானவரை இறைவன் அனுப்பி, இப்போதுள்ள ஜம்ஜம் தண்ணீரை உற்பத்தி செய்தான்.

நூல்: புகாரி 3364

வானவர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஊற்று என்ற வகையில் அது புனிதம் பெறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டதாக ஹதீஸ்கள் உள்ளன.

நூல்: புகாரி 349, 3207, 3342, 7517

ஆனால் இறந்த பின் ஹாஜிகளை அந்தத் தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

தலையைத் திறந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதை அருந்த வேண்டும் என்பதற்கும் எந்தக் கட்டளையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தியுள்ளதால் அவ்வாறு அருந்த அனுமதி உண்டு என்று மட்டுமே கூற முடியும்.

புர்தா படிக்கலாமா?

புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல்.

இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

வாழ்க்கையில் வளம் பெற

மனநோய் விலக

காணாமல் போன பெருட்கள் கிடைக்க

மற்றும் இன்ன பிற நோக்கங்கள் நிறைவேற

வீடுகளில் இதைப் பாடி வருகின்றனர். அதுவும் கூலிக்கு ஆள் பிடித்துப் பாடச் செய்து வருகின்றனர்.

ஒரு மனிதனுடைய வார்த்தைகளைப் பாடுவதால் இத்தகைய பயன்கள் கிடைக்கும் என நம்புவது அந்த மனிதனுக்கு இறைத் தன்மை வழங்குவதாகும்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எழுதிய பாடலுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது? அதை யார் வழங்கியது? அதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் சிந்திக்க மறந்ததால் புர்தாவைப் புனிதமாகக் கருதி வருகின்றனர்.

புர்தா என்பது முழுக்க முழுக்க நல்ல கருத்துக்கள் நிறைந்த கவிதை என்று வைத்துக் கொண்டால் கூட அதை ரசிக்கலாமே தவிர அதற்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் புர்தா என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்க்கக் கூடிய நச்சுக் கருத்துக் கொண்ட பாடலாக இருப்பதால் அதைப் பாடுவதே குற்றமாகும்.

லவ்ஹுல் மஹ்ஃபூல்  என்னும் ஏட்டைப் பற்றி நாம் அறிவோம். நடந்தவை,நடக்கவிருப்பவை அனைத்தும் ஒன்று விடாமல் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு இலை கீழே விழுந்தாலும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே விழுகின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

லவ்ஹுல் மஹ்ஃபூல்  என்பது அனைத்து ஞானங்களின் மொத்தத் தொகுப்பு என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆனால் புர்தா என்ன சொல்கின்றது தெரியுமா?

(நபியே!) இவ்வுலகமும் மறு உலகமும் உங்களின் அருட்கொடையாகும். லவ்ஹுல் மஹ்ஃபூலில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தில் சிறு பகுதி தான்.

அல்லாஹ்வின் ஞானத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஞானம் அதிகம் எனக் கூறும் இந்த நச்சுக் கருத்தைப் பாடியவனும், நம்புபவனும் முஸ்லிமாக இருக்க முடியுமா?

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

கஃபாவின் மேல் ஆணையாக என ஒரு மனிதர் கூறுவதை இப்னு உமர் (ரலி) செவியுற்ற போது,  அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யாதே! ஏனெனில் யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்து விட்டார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்  எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் உபைதா

நூல் : திர்மிதீ 1455

பிளவுண்ட சந்திரன் மேல் நான் சத்தியம் செய்கிறேன் என்று புர்தாவில் பூசிரி கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இணை வைத்தல் என்று இனம் காட்டினார்களோ அதை நியாயப்படுத்தும் இந்தக் கவிதையை உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியுமா?

ஒருவர் இவ்வுலகில் எந்த அளவு நன்மையான காரியங்களைச் செய்கிறாரோ அதற்கேற்பவே மறுமை நாளில் இறைவனது அருளைப் பெறுவார். இது சாதாரண முஸ்லிமுக்கும் தெரிந்த உண்மையாகும். இந்தச் சாதாரண உண்மையையும் புர்தா மறுக்கின்றது. மனிதர்களைப் பாவம் செய்யத் தூண்டுகின்றது.

அல்லாஹ் தனது அருளைப் பங்கிடும் போது பாவங்களுக்குத் தக்கவாறு வழங்கக் கூடும் .

ஒருவர் எந்த அளவுக்குப் பாவம் செய்கிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் எனக் கூறும் இந்த உளறலை நம்ப முடியுமா?

ஒவ்வொரு மனிதனும் தத்தமது செயல்களுக்குத் தான் கூலி கொடுக்கப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒருவன் சிறந்த பெயர் சூட்டப்படுகிறான். இதில் பெயர் சூட்டப்பட்டவனுக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எத்தனையோ கயவர்களுக்கு அழகான பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் புர்தா என்ன சொல்கிறது தெரியுமா?

என் பெயர் முஹம்மத் என்றிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் மீது பொறுப்பு உண்டு. படைப்புக்களிலேயே அவர்கள் தாம் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்கள்.

முஹம்மத் என்ற பெயருள்ளவருக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா?

முஹம்மத் என்று பூசிரிக்குப் பெயர் சூட்டியது அவரது குடும்பத்தினர் தாம். இந்தப் பெயருக்கும், பூசிரிக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. இவரது பெயர் முஹம்மத் என்று இருப்பதால் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பாற்றி விடுவார்களாம். இது எவ்வளவு அபத்தம் என்று சிந்தியுங்கள்.

முஹம்மத் எனும் பெயர் பெற்ற ஒருவர் இவர்களின் பொருட்களை அபகரித்துக் கொண்டால் பொறுத்துக் கொள்வார்களா? நிச்சயமாக பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத இந்த புர்தாவைப் புனிதமாகக் கருதுவதில் கடுகளவாவது நியாயம் உள்ளதா என்று சிந்தியுங்கள்.

இப்படி புர்தாவில் அனேகம் அபத்தங்கள்! சிந்தனையாளர்களுக்கு இந்த விபரங்களே போதுமாகும்.

அரபி மொழி தான் தேவமொழியா?

மொழிகள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு சாதனமே தவிர மொழிகளில் தேவ மொழி,தெய்வீக மொழி என்றெல்லாம் கிடையாது. இஸ்லாத்தன் பார்வையில் அனைத்து மொழிகளும் சமமானவையே.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் : 14:4

நபிகள் நாயகத்துக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். தமது சமுதாயத்தின் மொழியிலேயே அவர்களுக்கு இறைவன் வேதங்களைக் கொடுத்து அனுப்பியதாக இவ்வசனம் கூறுகின்றது. எல்லா மொழிகளையும் இஸ்லாம் சமமாகவே பார்க்கின்றது என்பதற்கு இது சான்று.

இறுதித் தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழி அரபு என்பதால் அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் அகில உலகுக்கும் தூதர் என்பதால் அரபு மொழியில் அருளப்பட்ட அந்த வேதமே அகில உலகுக்கும் வேதமாக அமைந்து விட்டது.

அகில உலகத்தின் வேதத்தை அரபு மொழியில் ஏன் அருள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். தமிழ் மொழியிலோ, வேறு எந்த மொழியிலோ அருளப்பட்டிருந்தாலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். ஏதாவது ஒரு மொழியில் தான் அருள முடியும். நபிகள் நாயகத்தின் மொழி அரபு மொழியாக இருந்ததால் அரபு மொழியில் அருளப்பட்டது.

திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தையாக நாம் நம்புகிறோம். அல்லாஹ்வின் வார்த்தை என்று அதை நம்புவதால் அதை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட இடங்களில் அப்படியே ஓத வேண்டும். இவ்வாறு ஓதுவது அரபு மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்று கருதக் கூடாது. அல்லாஹ்வின் வார்த்தைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்றே கருத வேண்டும்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழியில் அதற்கு நிகரான வேறு வார்த்தைகளை ஓதுவதும் கூடாது என்பதிலிருந்து அரபு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அறியலாம்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகை போன்ற வணக்கங்களில் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் தமிழாக்கத்தைப் படிக்கலாம். படிக்க வேண்டும். ஏனெனில் குர்ஆன் விளங்குவதற்காகவும் சிந்திப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் : 47:24

புரியாத மொழியில் ஓதுவதை விட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா?  என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானது தான்.

ஆயினும் இதை விட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டில் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மொழி தெரியாதவர்களும், தெரிந்தவர்களும் அதைத் தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது.

நாட்டின் ஒற்றுமைக்காக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு, இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது.

ஒரு பள்ளிவாசலில் ஒரு இறைவனை ஒரே மாதிரியாக வணங்கும் போது ஏற்படும் உலக ஒற்றுமைக்காக – மொழி புரியவில்லை என்ற குறையை சிறிது நேரம் மறந்து விடுவதில் எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடாது.

எந்த இலட்சியமும் இல்லாமல் புரியாத மொழியில் உள்ள பாடல்களை மனிதன் ரசிக்கிறான். மிகப் பெரிய இலட்சியத்துக்காக அல்லாஹ்வின் வேதத்தை அருளப்பட்டவாறு  படிப்பதில் எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது.

அல்லாஹ்வின் வேதத்தை, அருளப்பட்டவாறு தான் தொழுகையில் ஓத வேண்டும் என்றாலும்

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்

என்று அல்குர்ஆன் (2:286) கூறுகின்றது.

அரபு மொழி தெரியவில்லையென்றால் அதைக் கற்றுக் கொள்ள வழியில்லையானால் அதற்காக முயன்றும் முடியவில்லையானால் அவர்கள் அரபு மொழியில் தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

15.07.2009. 23:13 PM