உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?
உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா?
ஹாஜா
பதில் :
உபரியான நோன்புக்கு மட்டுமின்றி கடமையான நோன்புக்கும் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவது அவசியம் இல்லை. ஸஹர் நேரத்தில் சாப்பிடாமல் இஷா நேரத்திலேயே நோன்பு நோற்கும் எண்ணத்தில் சாப்பிட்டு உறங்கினால் அவர் நோன்பாளியாக \தொடரலாம்.
கடமையான நோன்புஎன்றால் நோன்பு நோற்கும் முடிவை சுபுஹுக்கு முன்னர் எடுத்து விடவேண்டும். உபரியான நோன்பு வைக்கும் எண்ணமே ஒருவருக்கு இல்லை. காலையில் எழுந்த உடன் நான் இன்று நோன்பாளையாக இருக்கிறேன் என்று முடிவு செய்யலாம். சுபுஹ் முதல் எதுவும் உண்ணாமல் பருகாமல் இருந்திருக்க வேண்டும்.
உதாரணமாக காலை எட்டு மணி வரை ஒருவர் எதுவும் உண்ணவில்லை; பருகவில்லை. அப்போது நபிலான நோன்பு வைக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டால் அவர் அன்று நோன்பு என முடிவு செய்யலாம்.
ஆனால் கடமையான என்ன்பு வைக்கும் முடிவை இரவில் சுபுஹுக்குள் எடுத்து விட வேண்டும்.
بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ رواه مسلم
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை’ என்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்” என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு ஹைஸ் எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, அதைச் சாப்பிட்டார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : முஸ்லிம்
உண்ணாமலும், பருகாமலும் இருந்தால் விடிந்த பிறகு கூட அன்றைய நாளில் உபரியான நோன்பு நோற்க அனுமதியுள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான நோன்பு நோற்பதாக ஸஹர் நேரத்தில் முடிவு செய்யாமல் பகலில் தான் முடிவு செய்கிறார்கள். சூரியன் உதித்த பிறகு ஸஹர் செய்ய முடியாது என்பதால் நபியவர்கள் ஸஹர் செய்யாமல் நோன்பு நோற்றுள்ளார்கள் என்று இதில் இருந்து தெரிகிறது.
ஸஹர் செய்ய வாய்ப்பு இல்லாதவர் ஸஹர் செய்யாமல் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை என்பதற்கு இது ஆதாரமாகும்.
ஸஹர் செய்ய வாய்ப்பு உள்ளவர் ஸஹர் செய்து நோன்பு நோற்பதே சிறப்பு.. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
1923حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது.அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)நூல் : புகாரி 1923
1836حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்ட பிற சமுதாயத்தின் நோன்பிற்கும் உள்ள வேறுபாடு ஸஹர் நேரத்தில் உண்பது தான்.அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)நூல் : முஸ்லிம்
ஸஹர் செய்வது குறித்து நபியவர்கள் இந்த அளவு முக்கியத்துவப்படுத்தி கூறி இருப்பதால் ஸஹர் செய்வது கடமையான நோன்புக்கு மட்டுமின்றி கடமையல்லாத நோன்புக்கும் சுன்னத்தாகும்.