ஜனாஸாவை வாகனத்தில் சுமந்து செல்லலாமா?
ஜனாஸாவைப் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால் என்பன போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
صحيح البخاري 1314 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا وُضِعَتِ الجِنَازَةُ ، وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً، قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ، قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ “
1314 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உடல் (கட்டிலில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)நூல் : புகாரி 1314
எனவே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்வதை விட தோளில் சுமந்து செல்வதே சிறப்பானதாகும்.
ஆயினும் சில சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். வெளியூரில் மரணித்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் தோளில் சுமந்து செல்வது சாத்தியமாகாது.
ஊரை விட்டு வெகு தொலைவில் அடக்கத்தலம் அமைந்திருந்தால் அவ்வளவு தூரம் தூக்கிச் செல்வது சிரமமாக அமையும்.
மேலும் தோளில் தூக்கிச் செல்லுங்கள் என்று கூறும் மேற்கண்ட ஹதீஸ் விரைவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறது.
நல்லடியார்களின் ஜனாஸாவாக இருந்தால் என்னைச் சீக்கிரம் கொண்டு செல்லுங்கள் என்று கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே அடக்கத்தலம் தூரமாக இருந்தால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் ஜனாசாவை எடுத்துச் சென்றால் தான் ஜனாஸாவின் விருப்பம் நிறைவேறும்.
மேலும் உடலைத் தூக்கி விட்டால் சீக்கிரம் கொண்டு போய் இறக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.
கிலோ மீட்டர் கணக்கான தொலைவில் அடக்கத்தலம் இருந்தால் தோளில் தூக்கிச் செல்வது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்றால் சீக்கிரம் வந்துவிடலாம்.
மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்வதற்குச் சிறந்த நன்மைகள் உள்ளன. நீண்ட நேரம் நடக்கும் நிலை ஏற்பட்டால் பெரும்பாலானவர்களால் பின் தொடர்ந்து வர முடியாத நிலை ஏற்படலாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் அடக்கத்தலத்துக்கு நெருக்கமான தூரம் வரை ஜனாஸாவைக் கொண்டு சென்று அங்கிருந்து தோளில் சுமந்து சென்றால் அங்கிருந்து ஜனாஸாவை மக்கள் பின் தொடர்ந்து சென்று அந்த நன்மைகளையும் மக்கள் அடைந்து கொள்ள முடியும்.
மேலும் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று அல்லாஹ் பல்வேறு வசனங்களில் அறிவுறுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.