கருணைக் கொலை கூடுமா?
போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 4:93
கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.
ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.
வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர், உறுப்புக்களை இழந்தோர் செத்து விட்டால் நல்லது என்று சில சமயம் கூறி விடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.
முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுபவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை கருணைக் கொலை என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.
உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய் என்று கேட்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 5671, 6351
ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானோ அந்த அளவு மறுமையில் அவனது துன்பங்கள் குறையும் என்பது இஸ்லாம் கூறும் சித்தாந்தம்.
பார்க்க : புகாரி 5640, 5642, 5648, 7684
எனவே ஒருவன் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு மறுமையில் நன்மைகள் தான் ஏற்படப் போகின்றன. அவனுக்கு மறுமையில் கிடைக்கும் பேறுகளை கருணைக் கொலை என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.