விண்வெளிப் பயணத்தில்
கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதி விலக்குகளும் உள்ளன.
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:115)
கிப்லாவை நோக்க இயலாத சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டே எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற வசனம் அருளப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஃபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:115 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1251
எதிரிகளின் அச்சம் மிகவும் கடுமையாக இருந்தால் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, வாகனத்தின் மீதோ, கிப்லாவை முன்னோக்கியோ, அதை முன்னோக்காமலோ தொழலாம் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக ராபிவு அவர்கள் அறிவித்து விட்டு இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகவே இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 4535
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
அல்குர்ஆன் 2:286
6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84 வசனங்களையும் பார்க்க!
எனவே விண்வெளிப் பயணத்திலோ, அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ கிப்லாவை முன்னோக்க இயலாவிட்டால் எந்தத் திசையையும் நோக்கித் தொழலாம்.