இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா?

கேள்வி :

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா?

இஹ்ஸாஸ் இலங்கை.

பதில்:

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்து தவறானது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

ஹதீஸ்களை ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறியலாம்.

صحيح البخاري

6295 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ كَثِيرٍ هُوَ ابْنُ شِنْظِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمِّرُوا الآنِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا المَصَابِيحَ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும் போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும்

புகாரி : 6295

எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்து விடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள், விடி பல்புகள் இருக்கவில்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.

விளக்குகளை அணைத்துவிட்டால் எந்த வெளிச்சமும் இன்றி இருட்டு அறையில் தான் உறங்க வேண்டிவரும். இருட்டு அறையில் உறங்குவதால் அறிவு குறையும் என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். எனவே இருட்டில் உறங்குவதற்கும், அறிவு குறைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறிய முடிகின்றது. விஞ்ஞான ரீதியிலும் இக்கருத்து சரியானதல்ல.