இறை நேசர்களுக்கு அச்சமில்லை என்பதன் விளக்கம்

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:62

இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.

மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 10:63

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

யார் இறைநேசர்கள் என்பதை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையில் அவர் நல்லவர் தான் என்று நாம் தீர்மானிக்க இயலாது.

صحيح البخاري
1243 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ العَلاَءِ، امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: أَنَّهُ اقْتُسِمَ المُهَاجِرُونَ قُرْعَةً فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ وَغُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ: لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ قَدْ أَكْرَمَهُ؟» فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ؟ فَقَالَ: «أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ اليَقِينُ، وَاللَّهِ إِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي، وَأَنَا رَسُولُ اللَّهِ، مَا يُفْعَلُ بِي» قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ مِثْلَهُ. وَقَالَ نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ عُقَيْلٍ مَا يُفْعَلُ بِهِ. وَتَابَعَهُ شُعَيْبٌ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، وَمَعْمَرٌ

உஸ்மான் பின் மழ்வூன் என்ற நபித்தோழர் மரணித்த போது அவரை நோக்கி “அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்துவான்” என்று உம்முல் அலா என்ற பெண்மணி கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அவரைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று உனக்கு எவ்வாறு தெரியும்“ என்று கேட்டு கண்டித்தார்கள்.

பார்க்க : புகாரீ 1243, 2687,  3929, 7003, 7018

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர். ஹிஜ்ரத் செய்தவர். வெளிப்படையான செயல்களைப் பார்த்து ஒருவரை இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால் இவரைச் சொல்லலாம். ஆனாலும் இவர் மரணித்த பிறகு “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான்” என்று உம்முல் அலா அவர்கள் தீர்மானித்ததை நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

صحيح البخاري
2898 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، التَقَى هُوَ وَالمُشْرِكُونَ، فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، لاَ يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ: مَا أَجْزَأَ مِنَّا اليَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ»، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: أَنَا صَاحِبُهُ، قَالَ: فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ، قَالَ: فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ: أَنَا لَكُمْ بِهِ، فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»

போர்க்களத்தில் ஒருவர் வீரதீரத்துடன் போரிடுவதைக் கண்ட நபித்தோழர்கள் அவரை உயர்வாக மதித்து பாராட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நரகவாசி என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் போரில் ஏற்பட்ட காயத்தின் வேதனை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார்.

பார்க்க : புகாரீ 2898

நபித்தோழர்கள் கூட ஒருவரை நல்லடியார் எனக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி மகான்களைக் கண்டுபிடிக்க முடியும்?

صحيح مسلم
152 – (1905) حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ “،

மறுமையில் ஒரு உயிர் தியாகி, ஒரு அறிஞர், ஒரு செல்வந்தர் ஆகியோர் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் செய்த நல்லறங்கள் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். அவர்கள் தாம் செய்த நல்லறங்களைக் கூறுவார்கள். அப்போது இறைவன் நீங்கள் உலகில் பெயர் வாங்குவதற்காகவே செய்தீர்கள். அப்பெயரை உலகில் பெற்றுவிட்டீர்கள் எனக் கூறி “இவர்களை நரகத்துக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிடுவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பார்க்க : முஸ்லிம் 3865

உயிர் தியாகிகள் என்றும், வள்ளல் என்றும், அறிஞர் என்றும் மக்களால் கருதப்பட்ட மூவர் அல்லாஹ்விடம் நரகவாசிகளாக உள்ளனர் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால் நாம் எப்படி ஒருவரை மகான் என்று தீர்மானிக்க இயலும்?

ஒரு குழந்தை மரணித்த போது ஆயிஷா (ரலி) அவர்கள் சுவனத்து சிட்டுக்குருவி என்றார்கள். எந்தப் பாவத்தையும் இக்குழந்தை செய்யவில்லை எனவும் கூறினார்கள். அவ்வாறு சொல்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து விட்டார்கள்.

பார்க்க : முஸ்லிம் 5174, 5175

ஒன்றுமறியாக் குழந்தையின் நிலையைக் கூட நாம் தீர்மானிக்க இயலாது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

நல்லடியார்களை நாம் அறிய முடியும் என்ற கருத்தில் சில சான்றுகள் உள்ளனவே? அதன் நிலை என்ன என்ற கேள்விக்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

திருக்குர்ஆன் 9:119

இணைகற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:221

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113

உண்மையான முஃமின்களுடன் வாழ வேண்டும் என்றும், இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றும், இணை கற்பித்தவர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்றும் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கட்டளையிடுகிறான்.

ஒருவர் நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் நாம் தீர்மானித்தால் தான் மேற்கண்ட கட்டளைகளை நாம் பின்பற்ற இயலும் என்றாலும் இதில் குழப்பம் தேவையில்லை.

நம்முடைய பார்வையில் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

நம்முடைய பார்வையில் யார் இறை நம்பிக்கையாளராகத் தெரிகிறாரோ அத்தகைய உண்மையாளருடன் நாம் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர அவருடைய உண்மையான நிலையை இறைவனே அறிந்தவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனும் இவ்வாறு தான் தீர்மானிக்கச் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 60:10

நம்பிக்கை கொண்ட பெண்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தால் அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் தாமா? அல்லது வேறு நோக்கத்தில் வந்துள்ளார்களா? என்று சோதித்து அறியுமாறு இவ்வசனம் கட்டளையிடுகிறது. இவ்வாறு சோதித்துப் பார்த்து அவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கை உள்ளதா என்பதை அல்லாஹ் தான் அறிவான் என்ற வாக்கியத்தில் இருந்து இதை அறியலாம்.

நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் சமாதிகளை வணங்குவோர் இந்த அடிப்படையை உணராமல் மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் காட்டி நம்முடைய பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிபவர்களை அல்லாஹ்விடத்திலும் நல்லவர்கள் என நாம் தீர்மானிக்கலாம் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் ஒருவரை நல்லவர் தான் என்று மக்கள் தீர்மானிக்க இயலும் என்பதற்குப் பின் வரும் ஹதீஸையும் சான்றாகக் காட்டுகின்றனர்.

صحيح البخاري
1367 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள்.

நூல் : புகாரீ 1367

மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசியென்றும், மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று இகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரிகிறது.

மக்கள் தான் நல்லவர்கள் என்று முடிவு செய்பவர்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தந்தாலும் யாரையும் நல்லவர் என்று தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை. அதற்கான அறிவும் நமக்கு இல்லை என்ற கருத்தில் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக இதன் கருத்து அமைந்துள்ளது.

மேலும் இது நடைமுறைக்கும் மாற்றமாக உள்ளது. இஸ்லாத்தை அப்பட்டமாக மீறி நடப்பவர்களை மகான்கள் என்று மக்கள் முடிவு செய்வதை நாம் காண்கிறோம். கஞ்சா அடிப்பவன், பீடி குடிப்பவன், குளிக்காமல் சடை வளர்த்துத் திரிபவன் எனப் பலரை நம் மக்கள் மகான்கள் பட்டியலில் சேர்த்து தர்கா கட்டியுள்ளனர். மக்கள் சரியாக முடிவு எடுப்பதில்லை என்பதற்கு இது சான்றாக உள்ளது.

மேலும் ஒரு மனிதனின் உள்ளத்தில் உள்ளதை யாராலும் அறிய முடியாது என்ற இஸ்லாத்தில் அடிப்படைக்கும் இது மாற்றமாக உள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 4979, 83, 100104121122140141193213245269298327397427471 ஆகிய குறிப்புகளையும் காண்க!