ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா?
ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் அதுவும் பலஹீனமான ஹதீஸ் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள்.
1 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சில ஸஹீஹான ஹதீஸ்கள் இமாம்களால் ஹதீஸ் கிதாப்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஏன் ஸஹீஹான ஹதீஸாக நம்ப மறுக்கிறீர்கள்?
ஸஹீஹான ஹதீஸ் குரானுடன் மோதுவதால் அதைப் பலஹீனம் என்று கூறுவதால் மார்க்கத்தில் ஏதேனும் தவறு உள்ளதா? தயவுசெய்து இதை விளக்கவும்.
2 நீங்கள் இது ஸஹீஹான ஹதீஸ் ஆக முடியாது என்று சில காரணங்கள் கூறுகிறீர்கள். அதே போன்று தான் விரல் ஆட்டுவதற்கான ஹதீஸும் ஸஹீஹான ஹதீஸ் என்று இமாம்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழும் பொழுது உள்ளச்சத்தோடு தொழுமாறு அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். இப்பொழுது நாம் தொழுகையில் விரல் ஆட்டுவதன் மூலம் மற்றவர்களின் தொழுகை பாதிப்படைந்து விடும். ஆக இந்த ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுடன் மோதுவதால் இதையும் நீங்கள் பலஹீனமான ஹதீஸ் என்று கூறத் தயங்குவது ஏன்?
ஃபாஹிம்
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்தி எப்படியெல்லாம் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதை கீழே உள்ள ஆக்கங்களில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
சூனியத்தை நம்புதல் இணை வைத்தல்
சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று ஹதீஸ் உண்டா
சூனியத்தை நம்புதல் எப்படி ஷிர்க் ஆகும்
சூனியத்தை நம்புவது இணைவைத்தலா?
சூனியத்தை நம்புதல் இணை வைத்தலே
பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் நூல்
ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் கூறவில்லை. மாறாக அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதுடன் குர்ஆனுக்கும் முரணாக இல்லாமல் இருந்தால் தான் ஒரு ஹதீஸ் ஸஹீஹாக முடியும் என்பதே நம்முடைய நிலைப்பாடாகும்.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர்.
திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரமாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும் ஒரு அடிப்படையான விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது.
நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் முற்றிலும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்தவரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.
குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி இது என் இறைவனிடமிருந்து வந்தது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனமும் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொறுத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிக பட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.
ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஒருவரே சாட்சி கூறுவதும் முற்றிலும் சமமானதாக ஆகாது.
எவ்வளவு தான் நம்பகமானவர் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.
குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னவை குறித்து இப்படிச் சொல்லியிருப்பார்களா என்று கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.
ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும்.
இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.
இதனை இன்னொரு வகையில் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் நேரடியாக இமாம்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிவிப்பாளர்கள் வழியாகவே அந்தச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இமாம் புகாரி அவர்கள் தம்முடைய நூலில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் இமாம் புகாரி அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் குறைந்து மூன்று அல்லது நான்கு அறிவிப்பாளர்களாவது இடம் பெற்றிருப்பர்.
இவ்வாறு தான் முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத், பைஹகி, தாரகுத்னீ, தப்ரானி, போன்று அனைத்து ஹதீஸ் நூற்களிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களும் அமைந்திருக்கின்றன.
அறிவிப்பாளர் தொடர்களில் குறைந்தது ஏதேனும் ஒரு அறிவிப்பாளர் பொய்யராகவோ, யாரென்றே அறியப்படாதவராகவோ, வேறு ஏதேனும் குறைகள் உடையவராகவோ இருந்தால் அந்த அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய செய்தியை நாம் பலவீனம் என்று கூறுகிறோம்.
பலவீனம் என்று சொன்னால் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அந்த அறிவி்ப்பாளர் எதனை அறிவித்துள்ளாரோ அது நபிகள் நாயகம் கூறியதாக நிரூபணமாகவில்லை என்பதுதான் பொருள்.
ஒரு அறிவிப்பாளர் மீதுள்ள குறையை வைத்து நாம் ஹதீஸைப் பலவீனம் என்று முடிவு செய்கிறோம். அந்த அறிவிப்பாளரின் குறைகளை நாம் நேரடியாகக் காணவில்லை. மாறாக அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவரைப் பற்றி கூறிய கருத்துக்களின் அடிப்படையில் தான் நாம் அந்த முடிவிற்கு வருகின்றோம்.
ஒருவரைப் பற்றி குறை கூறுபவர்கள் உண்மையிலேயே சரியாகத்தான் அந்தக் குறையைக் கூறியுள்ளார்களா? அல்லது அந்த அறிவிப்பாளர் மீது இட்டுக் கட்டிக் கூறியுள்ளார்களா? என்பதை நம்மால் நிரூபணம் செய்ய முடியாது.
நாம் வெளிப்படையில் உள்ளதை வைத்துத் தான் முடிவு செய்ய முடியும். உள்ளத்தில் உள்ளதை அறியக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.
அது போன்று ஒரு அறிவிப்பாளர் மீது அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் இவர் தரமானவர் என்று சொன்னால் அவரை நம்பகமான அறிவிப்பாளர் என்றே நாம் முடிவு செய்கின்றோம்.
அதே நேரத்தில் நம்மால் கண்டுபிடிக்க முடியாத மிகப் பயங்கரமான குறைகள் கூட அவரிடத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த அடிப்படையை நம்மை எதிர்க்கக் கூடியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இப்படித் தான் ஹதீஸ்களைத் தரம் பிரித்தும் வருகின்றனர்.
ஒரு அறிவிப்பாளர் மீது கூறப்பட்டுள்ள குறைகளை அடிப்படையாக வைத்து அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக எடுத்துரைப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் வெளிப்படையாக குர்ஆனிற்கு முரண்படாக உள்ள செய்தியை நிச்சயமாக நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கவே மாட்டார்கள் என்று நாம் முடிவு செய்வது மிக மிகச் சரியானதாகும்.
திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வது கூடாது என்று நாம் கூறும் போது இவ்வாறு கூறினால் ஒவ்வொருவரும் தமக்கு பிடிக்காத செய்திகளையெல்லாம் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்து விடுவார்கள். இது ஹதீஸ்களை மறுக்கின்ற வாசலைத் திறந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான வாதமாகும். உண்மைக்கு மாற்றமானதாகும்.
ஹதீஸ்களை முழுமையாக மறுக்கும் கூட்டத்தினர் ஏன் உருவானார்கள்? குர்ஆனுக்கு முரணாக இருந்தாலும் அதை ஏற்று குர்ஆனை மறுக்க வேண்டும் என்ற தவறான கோட்பாட்டின் காரணமாகத் தான் உருவானார்கள். குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்ற சரியான நிலைபாட்டை மார்க்க அறிஞர்கள் சொல்லி இருந்தால் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டத்தினர் உண்டாகி இருக்க மாட்டார்கள்.
எந்தக் கோட்பாடு ஹதீஸ்களை மறுக்கும் போக்கைத் தடுத்து நிறுத்துமோ அந்தக் கோட்பாடு தான் ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறுவதை விட வேடிக்கையான வாதம் எதுவும் இருக்க முடியாது
இவர்கள் கூறுவது போல் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அறிவற்ற வாதத்தை யாராவது எடுத்து வைத்தால் அது குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று எடுத்துக் காட்டி அதை முறியடிப்பது தான் முறையாகும்.
கொசுவுக்குப் பயந்து குடிசையைக் கொளுத்தக் கூடாது. குடிசையை வைத்துக் கொண்டு கொசுவைத் தான் கொல்ல வேண்டும்.
குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸை யாராவது குர்ஆனுக்கு முரண்படுவதாக ஆதாரங்கள் இன்றிக் கூறினால் அவருடைய அந்த கருத்தை தவறு என்பதை விளக்கி அதன் முதுகெலும்பை முறிக்கும் வகையில் நாம் பதிலளிப்போம். நபிகள் நாயகத்தின் எந்த ஒரு ஆதாரப்பூரவமான வழிமுறையும் மறுக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அல்லாஹ் அத்தகைய சத்தியவாதிகளை கியாமத் நாள் வரை கொண்டு வரத்தான் செய்வான்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளதையே எடுத்துக் கொள்வோம். விரலசைத்தல் தொழுகையில் மற்றவர்களின் உள்ளச்சத்தைப் பாதிக்கிறது என்று ஒருவர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இந்த வாதம் விபரீதமானதாகும்.
அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டினால் மட்டும் மற்றவர்களின் கவனத்தை திருப்பாது. மாறாக ஆட்டாமல் விரலை நீட்டினால் அது இறையச்சத்தைப் பாதிக்கும் என்று சிலர் கூற முடியும். கைகளை உயர்த்துவது அவ்வாறு உயர்த்தாதவரின் இறையச்சத்தைப் பாதிக்கும் என்று சிலர் கூறும் நிலை ஏற்படும்.
ஆமீன் சொல்வது ஆமீன் சொல்லாதவரின் இறையச்சத்தைப் பாதிக்கும் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.
உண்மை என்னவென்றால் ஒருவர் விரல் அசைக்கும் போது மற்றவரின் உள்ளச்சம் பாதிக்கிறது என்றால் நபிவழியை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனப்போக்கு தான் இதற்குக் காரணம்.
இது தான் நபி வழி என்று ஒப்புக் கொண்டால் அவரது இறையச்சம் அதிகரிக்கத் தான் செய்யும்.
விரல் அசைத்து தொழக்கூடியவர்கள் தான் இறைவனுக்கு அஞ்சி சமாதி வழிபாட்டை விட்டு விலகி உள்ளனர். ஒருவர் கூட சமாதி வழிபாடு செய்வதில்லை. ஆனால் விரல் அசைப்பதை எதிர்க்கக் கூடியவர்களில் பாதிப்பேர் சமாதியை வணங்கக் கூடியவர்களாக உள்ளனர்.
விரல் அசைக்கக் கூடியவர்களில் தான் வரதட்சணை வாங்காதவர்களும் எளிமையாகத் திருமணம் நட்த்துவோரும் அதிகம் உள்ளனர். வட்டி, சினிமா, போதை, புகை உள்ளிட்ட எண்ணற்ற தீமைகளை விட்டு விரல் அசைப்பவர்கள் தான் அதிகம் விலகி உள்ளனர். ஊரே எதிர்த்தாலும், உலகே எதிர்த்தாலும் அல்லாஹ்வின் தூதர் சொல்லி விட்டால் அதை நான் செய்வேன் என்ற மனஉறுதி தான் இதற்குக் காரணம்.
எனவே விரல் அசைப்பது இறையச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த வாதம் உண்மைக்கு மாற்றமானதாகும்.
எனவே விரலசைப்பது குர்ஆன் கட்டளைக்கு எதிரானது என்பது கற்பனை தானே தவிர உண்மையானது கிடையாது.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏன் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்பதற்கு நாம் வைத்துள்ள வாதங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் இது போன்ற ஒன்றுமில்லாத கேள்விகளைக் கேட்பதினால் எந்தப் பயனும் இல்லை .