குஸைமா (ரலி)யின் பொய் சாட்சியத்தை நபிகள் அங்கீகரித்தார்களா?

ஷாகுல் ஹமீது

பதில்

குஸைமா என்ற நபித்தோழரின் சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூல்களில் காணப்படுவதை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஆனால் இது விரிவாக அலச வேண்டிய விஷயமாகும்.

முதலில் இது தொடர்பான ஹதீஸைப் பார்ப்போம்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 3130, அஹ்மத் 20878

இது தான் குஸைமாவின் சாட்சியம் இருவரின் சாட்சியத்துக்குச் சமமானது என்று சொல்லப்படுவதற்கான ஆதாரமாகும்.

இஸ்லாம் போதிக்கும் நாணயத்துக்கும், நபிகள் நாயகத்தின் அப்பழுக்கற்ற நேர்மைக்கும் உகந்ததாக இந்தச் செய்தி அமையவில்லை.

முதலில் இந்தப் பிரச்சனை தலைபோகிற காரியமல்ல. ஒரு ஒட்டகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்கு கேட்டு விட்டு போனார்களா? அல்லது விலை பேசி முடித்தார்களா என்பது தான் அடிப்படைப் பிரச்சனை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்குக் கேட்ட போது அந்தக் கிராமவாசி மவுனமாக இருந்ததால் விலைக்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு விலைக்கு விற்று விட்டேன் என்று சொல்லாததால் அதை விற்கவில்லை என்று கிராமவாசி நினைத்திருக்கிறார்.

கிராமவாசி இப்படி நினைத்ததால் தான் நீங்கள் நான் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? மற்றவருக்கு விற்று விடட்டுமா என்று கேட்கிறார்.

இருவரும் புரிந்து கொள்வதில் பிழை நேர்ந்துள்ளது தான் இதிலிருந்து தெரிகிறது.

எனக்கு விற்கவில்லை என்று நீ சொல்வதால் உன் விருப்பப்படி யாருக்காவது விற்றுக் கொள் என்று சொல்வது தான் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கப் படி கூற வேண்டியதாகும்.

ஏனெனில் இந்தப் பேச்சு வார்த்தையின் போது சாட்சிகள் யாரும் இருக்கவில்லை என்ற நிலையில் பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சொல்வதைத் தான் ஏற்க வேண்டும்.

கிராமவாசி சாட்சியைக் கொண்டு வா என்று கேட்டவுடன் பேச்சு வார்த்தை நடந்த போது அந்த இடத்தில் இருந்திராத குசைமா பொய்யாக சாட்சி கூறுகிறார். நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இப்படிக் கூறினேன் என்று அவர் காரணம் கூறுகிறார்.

இவர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. கிராமவாசியின் சொல்லை ஏற்பதால் நபிகள் நாயகம் பொய் சொல்லி விட்டார்கள் என்று ஆகாது. யாரோ ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்பது தான் இதன் விளைவாகும்.

இதற்காக குஸைமா பொய் சொல்லத் தேவை இல்லை. இது தலை போகிற காரியமும் அல்ல. ஒரு ஏழைக்கும் நாட்டின் அதிபருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அப்படி குஸைமா பொய் சாட்சி சொல்லி இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருப்பார்கள்.

அதுதான் அவர்களின் இயற்கை குணமாகும்.

என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றும், வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி என்ற கெட்ட கொள்கையால் தான் முந்தைய சமுதாயம் அழிந்தது என்று சொன்னவர்கள் அவர்கள்.

(பார்க்க புகாரி 3475)

நபிகள் நாயகத்துக்குப் பதிலாக இனொருவர் சம்மந்தப்பட்ட வழக்காக இது இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ அதையே தான் தனக்கும் தீர்ப்பாக அளித்திருப்பார்கள். எனவே நபிகள் நாயகத்தை நேர்மையற்றவராகக் காட்டும் இது கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

சாட்சியம் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளைப் பாருங்கள்.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:283

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோஇச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தார்களே தவிர கள்ளத் தனத்தைக் கற்றுக் கொடுக்க அவர்கள் அனுப்பப்படவில்லை.

கிராமவாசி சொன்னதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகப் புரிந்திருந்தால் அந்தக் கிராமவாசியின் ஒட்டகத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி அநீதியிழைத்த குற்றம் சேராதா? அதற்கு துணை போன குற்றம் வராதா?

صحيح البخاري
5976 – حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ الوَاسِطِيُّ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ: أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ ” فَمَا زَالَ يَقُولُهَا، حَتَّى قُلْتُ: لاَ يَسْكُتُ

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம் தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம் தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா? என்று நினைத்தேன்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)

நூல் : புகாரி 5976

صحيح البخاري
5977 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الكَبَائِرَ، أَوْ سُئِلَ عَنِ الكَبَائِرِ فَقَالَ: ” الشِّرْكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، فَقَالَ: أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ؟ قَالَ: قَوْلُ الزُّورِ، أَوْ قَالَ: شَهَادَةُ الزُّورِ ” قَالَ شُعْبَةُ: وَأَكْثَرُ ظَنِّي أَنَّهُ قَالَ: «شَهَادَةُ الزُّورِ»

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது’. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறிவிட்டு, பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். பொய் பேசுவது’ அல்லது பொய் சாட்சியம்’ (மிகப் பெரும் பாவமாகும்) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் :அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 5977

பொய் சாட்சியை மிகப் பெரும் பாவம் என அறிவித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக பொய் சாட்சி சொல்வதை எப்படி அங்கீகரித்து இருப்பார்கள்?

இதில் இன்னொரு அநியாயமும் அடங்கியுள்ளது.

பொதுவாக கொடுக்கல் வாங்கலுக்கு இரு சாட்சிகள் அவசியம். 2:282 வசனத்தில் இதைக் காணலாம்.

நபிகள் நாயகத்துக்காக ஒருவர் சாட்சி சொல்கிறார். அதுவும் அவர் காணாததைக் கண்டதாகச் சொன்ன பொய்யான சாட்சி. இப்போது இன்னொரு சாட்சி தேவை.

இதற்கு நபிகள் நாயகம் சொன்ன தீர்வாக என்ன சொல்லப்பட்டுள்ளது?

இந்த ஒருவரின் சாட்சி இருவரின் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி கிராமவாசிக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

எல்லோருக்கும் இரு சாட்சிகள், நபிகளுக்கு மட்டும் ஒரு சாட்சியே இரு சாட்சிகளுக்குச் சமம் என்பதைச் சொல்லத் தான் நபியவர்கள் வந்தார்களா?

அதுவும் குஸைமா பொய் சாட்சி சொன்ன இந்தச் சம்பவம் உண்மை என்றால் இவரது சாட்சி இனி ஏற்கப்படக் கூடாது என்று தான் நபியவர்கள் கூறுவார்கள். பொய் சொன்னவர் என்று தெரிந்தும் தனது சொந்த ஆதாயத்துக்காக இரு சாட்சிக்குச் சமம் என்று கிரீடம் சூட்டுவார்களா? என்ன?

இது இஸ்லாத்தின் நீதிநெறியைக் கேவலப்படுத்தும் சதிகாரர்கள் இட்டுக்கட்டிய பச்சைப் பொய் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

இனி சூனியத்தை விட்டு விட்டு இதைப் பிடித்துக் கொண்டு சலபுக் கூட்டம் சில நாட்கள் வண்டியை ஓட்டும். அல்லாஹ்வின் தூதரின் கன்னியத்தை விட அறிவிப்பாளர் கன்னியம் இவர்களுக்கு முக்கியமாகப் படும்.

நானே பல ஆண்டுகளுக்கு முன் இதை ஆதாரமாகக் காட்டி பேசியுள்ளேன். அதை எடுத்துப் போட்டு இது எனது பிரச்சனை போல் காட்டப்படும்.

26.09.2014. 4:04 AM