வரதட்சணை வாங்கி பித்அத்களுடன் நடக்கும் திருமணம் செல்லுமா?

வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அந்த வழிகாட்டுதல் படி அந்தக் காரியத்தைச் செய்தால் தான் அது செல்லும். அந்த ஒழுங்குகள் பேணப்படாவிட்டால் அந்தக் காரியம் செல்லத்தக்கதல்ல,

ஆனால் திருமணம் மட்டும் இதில் இருந்து விலக்கு பெறுகிறது.

திருமணத்தில் இஸ்லாத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும், பித்அத்களை அரங்கேற்றினாலும், வரதட்சணை வாங்கினாலும், பெண் வீட்டு விருந்து கொடுத்தாலும், ஆடம்பரம், வீண் விரயம், ஆடல் பாடல் போன்றவை இடம் பெற்றாலும் அந்தத் திருமணம் செல்லாது என்று கூற முடியாது.

இறைவனால் மறுமையில் தண்டனை பெற்றுத் தரும் குற்றத்தைச் செய்தவர்களாக ஆவார்கள். ஆனால் திருமணம் செல்லத்தக்கதல்ல எனக் கூற முடியாது,

திருமணம் செல்லாது என்று கூறினால் அவர்களின் இல்லறத்தை விபச்சாரம் என்று சொல்ல வேண்டி வரும். இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் இதற்காக விபச்சாரத்துக்கான தண்டனை வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு காலத்திலும் வழங்கப்பட்டதில்லை.

இப்படி வாழ்ந்த ஜோடிகளில் ஒருவர் மரணித்து விட்டால் மற்றவர் அவருக்கு வாரிசு இல்லை என்று சொல்ல முடியாது. ஒருவரிடம் இருந்து மற்றவர் வாரிசு உரிமையைப் பெறுவார்கள். இத்திருமணம் செல்லத்தக்கது தான் என்று இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் விபச்சாரத்தில் பிறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். பிள்ளைகள் என்ற முறையில் அவர்கள் பெற்றோரின் வாரிசுகளாவார்கள்.

இன்னும் சொல்வதாக இருந்தால் முஸ்லிமல்லாதவர்கள் அவர்களின் முறைப்படி திருமணம் செய்தார்கள் என்றால் அது கூட செல்லத்தக்க திருமணம் தான்.

அது செல்லத்தக்கதல்ல எனக் கூறினால் விபச்சாரத்துக்கான தண்டனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கி இருக்க வேண்டும். அப்படி வழங்கவில்லை. அதைத் திருமணமாக அங்கீகரித்துக் கொண்டார்கள்.

தம்பதிகளாக இஸ்லாத்தைத் தழுவினால் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் திருமணம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. இஸ்லாமிய முறையில் செய்யாத அந்தத் திருமணத்தையே திருமணமாக இஸ்லாம் அங்கீகரித்துக் கொள்கிறது.

அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் சட்டப்படியான வாரிசுகளாகத் தான் கருதப்பட்டார்கள்.

விபச்சாரம் என்ற வழியைத் தவிர்த்து இன்னாருக்கு இன்னார் என்று செய்யப்படும் எல்லா திருமணங்களும் செல்லத்தக்கவை தான்.