இந்தியா டுடே’யைப் பாதுகாத்த சிகரம் 15” விருது

குஷ்பு விவகாரம் :

அறிவியல்பூர்வமான (!) சர்வே என்ற பெயரில் சமூக அவலங்களுக்கு வித்திடும் வேலையை சென்ற செப்டம்பர் 22-28-ந் தேதிய தனது இதழில் இந்தியா டுடே’ செய்தது. இந்தியா டுடே’யின் வக்கிர புத்திக்கு சினிமா நடிகை குஷ்பு பலியாகி இருக்கிறார்.

அந்த இதழுக்கு அவர் அளித்த பேட்டி இந்தியப் பண்பாட்டிற்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் சாவு மணி அடிக்கக் கூடியது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணியத்திற்கே எதிராக அவர் தெரிவித்த கருத்து பூமராங்காக அவரையே திருப்பித் தாக்கி, தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டங்களும், கருத்துக் கணைகளும், வழக்குகளும் வெடித்து வருகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்பினரும், சன் டிவியும் நடிகை குஷ்புவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள வேளையில், தங்களைப் பெண்ணுரிமைப் போராளிகள், மனித உரிமைக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அறிவு ஜீவிகளான (?) ஜனநாயக மாதர் சங்கத் தலைவி வாசுகி, வாஸந்தி போன்றவர்கள் குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

இதே வட்டத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் என்ற பெயர் பெற்ற பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒரு படி மேலே போய், குஷ்பு இந்தியா டுடே இதழுக்குத் தெரிவித்த கருத்தின் ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு; தேர்ந்த சமூகவியலாளரைப் போன்று அவர் கருத்துக் கூறியிருக்கிறார்” என்று சிலாகித்துப் பேசியுள்ளார். அத்துடன் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் அச்சடித்தும் வெளியிட்டுள்ளார். மேலும் 1970-ல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்மானத்தையும் அவர் தனது குஷ்பு ஆதரவுப் போக்கிற்கு மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான பெண் வழக்கறிஞர் ரஜினி இன்னும் ஒரு படி மேலே போய், குஷ்புவுக்கு எதிராக வழக்குப் போடத் தூண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஒத்தக் கருத்துள்ள பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டி வருகிறார்.

இவ்வாறாக குஷ்புவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு வேறு அணிகள் களமிறங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், சமூக அக்கறையும், நியாயமும் யார் பக்கம் உள்ளது? என்ற குழப்பம் உண்மையான சிந்தனையாளர்களுக்கும் கூட இப்போது ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாம் முழுமையாக அலசினால் அனைவருமே குற்றவாளிகளாகத் தான் தோன்றுவார்கள்.

இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஒன்று உள்ளது. அது என்னவெனில் ஆணாதிக்கச் சிந்தனை.

ஆணாதிக்கத்தின் எதிர்விளைவாகத் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றின. அடிப்படையில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் தவறானவை.

பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதுவதும், அவர்களுக்கும் ஆன்மா’ உண்டு; அபிலாஷைகள் உண்டு; உரிமைகள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதும் ஆணாதிக்கச் சிந்தனையாகும். இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு தான் கற்பை’யும் தனி உடமை ஆக்கியது. கற்பு’ என்றால் அது பெண்கள் மட்டுமே பேணக்கூடிய கட்டாயக் கடமை. ஆண்களுக்கு அது கட்டாயமில்லை என்ற நம்பிக்கை. அதனால் தான் காப்பியங்கள் எல்லாமே கற்பையும், பெண்ணையும் மட்டுமே ஒரு சேரப் பார்க்கின்றன. கற்புக்கு இலக்கணமாக பெண்ணினம் மட்டுமே போற்றப்படுகிறது.

பெண் என்றால் அவள் கற்பைப் பேணிக் கொள்ள வேண்டும். ஆண் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று கற்பு விஷயத்தில் பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், ஆண்களை அறவே கண்டு கொள்வதில்லை.

சினிமாவிலும் கூட ஆணும் பெண்ணும் சேர்ந்து படுக்கையறைக் காட்சிகளில் அல்லது நீச்சல் குளக் காட்சிகளில் அரை நிர்வாணமாகப் பின்னிப் பிணையும் போது, ஆணை விட, பெண் (நடிகை) தான் கேவலமாகப் பார்க்கப்படுகிறாள். ஒரு பெண் இப்படி மோசமாக நடிக்கும் போது (லட்சக்கணக்கானோர் பார்க்கும் வகையில்) அவள் எப்படி உத்தமியாக இருப்பாள்? அவள் நிச்சயம் விபச்சாரியாகத் தான் இருக்க முடியும்” என்று நல்ல குடும்பத்துப் பெண்கள் கூட விமர்சிக்கிறார்கள்.

அதே சமயம் அவளுடன் நெருங்கி அவளை விடக் குறைவான (ஒரே ஒரு ஒட்டு ஜட்டியுடன்) ஆடையுடன் நடிக்கும் நடிகன் இப்படி விமர்சிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் கற்பு, மானம் இவையெல்லாம் பெண்ணிற்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான புரிதலே. இது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே!

ஆனால், உண்மையில் கற்பு, மானம் என்பதெல்லாம் இரு பாலருக்கும் இருக்க வேண்டிய பொதுவான அம்சம். இது சமூகத்தில் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. தனக்கு வரவேண்டிய மனைவி கன்னித்தன்மையுடன் – கற்பு நெறியுடையவளாக இருக்க வேண்டும் என்று தான் ஒரு ஆண் விரும்புவான். இதே விருப்பம் பெண்ணுக்கும் இருக்கும். அவளது இந்த விருப்பம் தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதே போல் மணமுடித்த பிறகும் இரு பாலருக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்கு மாற்றமாக இருவரோ அல்லது ஒருவரோ தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கின்றன. இந்த விஷயத்தில் பெண் மட்டும் தவறிழைக்கும் போது ஆண் வர்க்கம் கொதித்தெழுகிறது. இது தான் ஆணாதிக்கம்.

ஆக, கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான ஒன்று என்ற கருத்து ஏற்கப்படாமல் போவதால் தான் இத்தகைய ஆணாதிக்கப் போக்கிற்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன.

ஒரு தவறான போக்கிற்கு எதிராகத் தோன்றுகின்ற பெண்ணுரிமை சிந்தனை சரியான கோணத்தில் இருக்கின்றதா? என்றால், நிச்சயமாக இல்லை! என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்கு உதாரணம் தான் குஷ்பு போன்றவர்களின் குருட்டுத் தனமான கருத்துக்களும் அதை ஆதரிக்கும் பெண்ணுரிமைப் போராளி(?)களின் நடவடிக்கைகளும். ஒரு தவறுக்கு மற்றொரு தவறு ஒரு போதும் பரிகாரமாக முடியாது.

ஆண்கள் தங்களின் கற்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதற்காக – அவர்கள் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் அதே வழியில் பயணிக்க வேண்டும் என்று சொல்வதும், அதை ஆதரிப்பதும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொரிவது போன்றதாகும்.

இன்றைய சமூக அமைப்பில் ஒழுக்கச் சீர்கேட்டில் மூழ்கிக் கிடக்கும் ஒருவனுக்கு, ஒழுக்கம் மிக்க மனைவி அமைந்து விடுகிறாள். ஆனால், ஒழுக்கம் மிக்க ஒரு பெண்ணுக்கு, ஒழுக்கங்கெட்ட கணவன் கூட கிடைப்பது சிரமமாக உள்ளது.

குஷ்புவுக்கு வேண்டுமானால் சுந்தர். சி. கணவனாகக் கிடைத்திருக்கலாம். அல்லது சினிமா என்னும் வானில் நட்சத்திரங்களாக (போலியாக) ஜொலிக்கக் கூடியவர்களுக்கு சில தறுதலைகள் கிடைத்து விடலாம். ஆனால் சராசரி வாழ்க்கையில் இது சாத்தியமா? என்பதைச் சிந்தனையாளர்களான(?) வாசுகியும், வாஸந்தியும், ரஜினி (வழக்கறிஞர்)யும், அ. மார்க்சும் இன்னும் இவர்களைப் போன்று இந்தக் கருத்தை ஆமோதிப்பவர்களும் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் தங்கள் மகள்களைக் குஷ்பு சொன்ன ஆலோசனையின் படி வாழ அனுமதிப்பார்களா? அல்லது இவர்களின் மகன்களுக்கு இத்தகைய ஒழுக்கங்கெட்டவர்களை மனைவியாக்க சம்மதிப்பார்களா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆக, இந்தப் பிரச்சனையின் அடிப்படை ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து தோன்றுகிறது. இது முதல் தவறு. ஆணாதிக்கத்தின் தவறான சிந்தனைக்கு எதிராக அதே பாணியில் பெண்கள் தவறிழைப்பது என்பது இரண்டாவது தவறு. மூன்றாவதாக இப்போது இந்த ஒழுக்கம் பற்றிய சர்ச்சை கிளம்புவதற்கு முக்கியக் காரணமான இந்தியா டுடேயின் வக்கிரம்.

பத்திரிகைத் துறை என்பது ஒரு புனிதமானது. இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் அது ஒன்று. சமூகப் பொறுப்புமிக்க துறையும் கூட அது. வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமையானது” என்றெல்லாம் பத்திரிகைத் துறையைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்படுகிறது. அத்தகைய பத்திரிகைகளில் இந்தியா டுடே’ தனது சர்வேக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு கொஞ்சமும் சமூக அக்கறை கொண்டதல்ல.

எதிர்காலத் தலைமுறையினருக்கும், நிகழ்கால இளைய சமுதாயத்திற்கும் அறிவு, ஆற்றல், சமூகப் பொறுப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிகாட்டல்களுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ள பத்திரிகை – அதற்கு நேர்மாற்றமாக நிகழ்கால இளைய சமுதாயத்தையும், எதிர்கால சந்ததிகளையும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழச் செய்வதற்கான கருப்பொருளைக் கொண்டு தனது சர்வேயைத் துவக்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஷ்பு சம்பந்தமான தற்போதைய சர்ச்சைக்கு மூல காரணம் இந்தியா டுடே’ தான்.

இந்தியப் பண்பாடு, நாகரீகம், ஒழுக்க மாண்புகள் இவற்றை அழிப்பதற்காக இந்தியா டுடே’ வைத்த நெருப்புக்கு குஷ்பு எண்ணெய் ஊற்றி இருக்கிறார். அவரை ஆதரிப்போர் அந்தத் தீயை விசிறி விட்டு பரவச் செய்கின்றனர்.

அடுத்து நான்காவதாக மற்றொரு சாராரின் தவறையும் நாம் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். அவர்கள் யாரென்றால் குஷ்புவுக்கு எதிராகக் களம் இறங்கி இருப்பவர்கள்.

குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்குமே! ஏன்? மனித குலத்திற்கே எதிரான கருத்து என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

குஷ்புவுக்கு எதிராகத் துடைப்பம், செருப்பு சகிதமாகப் போராட்டத்தில் இறங்கியதும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர நீதிமன்றப் படிகளில் ஏறியதும் சரியான நடவடிக்கை தான். ஆனால், நம்முடைய கேள்வி என்னவென்றால், இந்த அசிங்கத்தில் அங்கம் வகிப்பவர்களில் முக்கியமானவர்களை விட்டுவிட்டு அதில் ஒரு அங்கமான குஷ்புவை மட்டும் குறி வைப்பது சரியான நடவடிக்கை தானா?

உண்மையிலேயே கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராக இவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள் என்றால் அந்தச் சீரழிவிற்கு மூல காரணமான – முக்கிய கர்த்தாவான இந்தியா டுடே’யை ஏன் இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்? இவர்களின் துடைப்பக் கட்டைகள், காலணிகள், கையிலேந்தப்பட்ட ஊர்வலமும், வழக்குகளும் இந்தியா டுடே’ அலுவலகத்தை நோக்காமல் போனதற்கு என்ன காரணம்? குறைந்த பட்சம் தங்களது கண்டனத்தைக் கூட தெரிவிக்காமல் போனதற்கு என்ன காரணம்? ஒரேயொரு காரணம் தான். அது சிகரம் 15” தான்.

போராட்டத்தில் முன்னணி வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சின்ன ஐயா அன்புமணியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளரான திருமாவளவனும், சன் டிவியின் தயாநிதி மாறனும் இந்தியா டுடே’யை கண்டுகொள்ளாமல் பாதுகாத்தது சிகரம் 15′ என்னும் விருது கேடயம்தான் தடுத்து வருகிறது என்ற நடுநிலையாளர்களின் கூற்றைப் புறக்கணிக்க முடியாது.

எனவே, இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் மேலே சுட்டிக்காட்டிய தவறுகளுக்கு சமூக அக்கறையுடையவர்கள் பரிகாரம் காண வேண்டும். இல்லையென்றால் கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.”

திருக்குர்ஆன் 33:35

குறிப்பு: இந்தியா டுடே பத்திரிகை சில பிரமுகர்களைத் தேர்வு செய்து சிகரம் 15 என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்தது. அது தான் சிகரம் 16 என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விருது பெற்றவர்கள் தான் குஷ்பூவை எதிர்த்து இந்தியாடுடே யைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

உணர்வு 10:5