உலக மூட நம்பிக்கை மாநாடு
பகுத்தறிவுப் பகலவன், பெரியாரின் சீடன், சமத்துவப் பெரியார் என்றெல்லாம் சொல்லப்படும் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலக மூட நம்பிக்கை மாநாட்டை நடத்தி தன்னை அடையாளம் காட்டி விட்டார்.
தமிழை வளர்ப்பதற்காக மாநாடு நடத்துவதாகக் கூறிக் கொண்டு இவர் தமிழ் வளர்த்த இலட்சணத்தை நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்த ஊர்வலத்தில் இடம் பெற்ற இனியவை நாற்பது என்ற காட்சிகள் அனைத்துமே மூட நம்பிக்கையின் தொகுப்பாகவே இருந்தன.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல்
முல்லைக் கொடி வெயிலில் வாடிய போது அதைக் கண்டு பாரி வள்ளல் எனும் வேந்தன் வருந்தி அந்தக் கொடி படர்வதற்காக தனது தேரை வழங்கி விட்டான் என்ற கட்டுக்கதையை விளக்கும் வாகனம் அந்த அணிவகுப்பில் இருந்தது.
ஒரு கொடிக்கு, படர்வதற்கு வழியில்லை என்றால் ஒரு குச்சியை அந்த இடத்தில் நட்டு வைத்தால் போதும். இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேரைத் தெருவில் விட்டுச் செல்பவன் கிறுக்கனாகத் தான் இருப்பான். மூளையுள்ள யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். இப்படி ஒரு மன்னன் உண்மையாகவே செய்திருந்தால் அவனை மெண்டல் என்று ஒதுக்குவது தான் பகுத்தறிவு.
இதன் மூலம் கருணாநிதி என்ன சொல்ல வருகிறார். இப்படி ஒவ்வொருவரும் கிறுக்குத் தனமாக நடக்க வேண்டும் என்கிறாரா? இதனைப் பார்க்கும் பிற மொழி மக்கள் தமிழர்களுக்கு மூளை கிடையாது என்று நினைக்க மாட்டார்களா?
தேர்க்காலில் ஏற்றி மகனைக் கொன்ற மனு நீதிச் சோழன்
அடுத்ததாக மனுநீதிச் சோழன் பற்றிய கட்டுக் கதையையும் வாகன அணி வகுப்பில் சேர்த்து தனது பகுத்தறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் வாழும் பெரியார்.
மனுநீதிச் சோழனின் மகன் கவனக் குறைவாக ஒரு கன்றுக்குட்டியை தேரில் ஏற்றிக் கொன்று விட்டானாம். உடனே அந்தக் கன்றுக்குட்டியின் தாய்ப் பசு வந்து ஆராய்ச்சி மணியை அடித்ததாம். மன்னனிடம் முறையிட்டதாம். உடனே மன்னன் மனு நீதிச் சோழன் தனது மகனைத் தேர்க்காலில் ஏற்றி கொலை செய்து பசுவுக்கு நீதி வழங்கினானாம்
இப்படி ஒரு கட்டுக்கதை இலக்கியத்தில் உள்ளது. இதை உண்மை போல் சித்தரிக்கும் காட்சிக்கும், தமிழுக்கும் என்ன சம்மந்தம்? இதில் கடுகளவாவது பகுத்தறிவு இருக்கிறதா?
தவறுதலாக ஒரு வாயில்லா ஜீவனைக் கொன்றால் அதற்கு காரணமான மனிதனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று மூட நம்பிக்கை காவலர் கருணாநிதி சட்டம் கொண்டு வரப் போகிறாரா?
மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்ற சாதாரண உண்மை கூடவா தெரியாமல் போய் விட்டது.. பட்சிச் சாதி நீங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க என்று பாட்டெழுதிய பராசக்தி கலைஞருக்கு இந்த உண்மை ஏன் தெரியாமல் போனது?
தனது கன்றுக் குட்டியைக் கொன்றவன் மன்னனின் மகன் என்பது பசுவுக்கு எப்படித் தெரியும்?
ஆராய்ச்சி மணியை அடித்தால் மன்னன் நீதி வழங்குவான் என்பது எப்படி அந்தப் பசுவுக்குத் தெரியும்?
எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற சாதாரண அறிவு கூட முத்தமிழ் வித்தகருக்கு இல்லையா?
ஒரு பசுவைத் தவறுதலாகக் கொல்வதே குற்றம் என்றால் இன்று கோடிக்கணக்கான உயிரினங்கள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றனவே இதற்காக யாரைக் கொல்வது? உலக மூட நம்பிக்கை மாநாட்டிலேயே மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று பல்லாயிரம் ஜீவன்கள் கொல்லப்பட்டதே இதற்கு யாரைத் தேரில் ஏற்றிக் கொல்லப் போகிறார் இந்த நவீன மனுநீதிச் சோழன்?
நடைமுறை சாத்தியமில்லாத காரியங்களைச் சில மூட மன்னர்கள் செய்திருந்தால் அவர்கள் தமிழர்கள் என்பதற்காக அதை நியாயப்படுத்துவதா?
உலக மக்கள் தமிழனைப் பற்றி மூளையற்ற ஜென்மங்கள் என்று எண்ண மாட்டார்களா?
வைரமுத்து போன்ற புலவன் மனுநீதிச் சோழன் புகழ் பாட இப்படி புளுகி இருக்கிறான் என்பதைக் கூட அறியாதவராக கலைஞர் ஆக வேண்டுமா?
மதுரையை எரித்த கண்ணகி
கற்பனைக் கதையான கண்ணகி மதுரையை எரித்ததற்கும் ஒரு அலங்கார ஊர்தி.
கோவலன் அநியாயமாக தண்டிக்கப்பட்டது உண்மைச் சம்பவம் என்று வைத்துக் கொண்டாலும் அதற்காக மதுரை நகரையே கற்பின் சக்தியால் கண்ணகி எரித்தாள் என்பதில் கடுகளவாவது பகுத்தறிவு உள்ளதா? அப்படி தெய்வீக சக்தியால் ஒரு நகரை அழிக்க முடியுமா?
அப்படியானால் தா.கிருஷ்னன் கொல்லப்பட்ட போது அவரது மனைவியால் ஏன் மதுரையை எரிக்க முடியவில்லை?
பூம்புகார் படத்தில் கலைஞர் வசனம் எழுதியதால் இது உண்மையாகி விடுமா?
அப்படியே மதுரையை எரிக்கும் அளவுக்கு கண்ணகிக்கு தெய்வீக ஆற்றல் இருந்தாலும் அவள் செய்தது பாண்டிய மன்னன் செய்ததை விட பெரிய அநீதி அல்லவா?
ஒரு மன்னன் கோவலனைத் தண்டித்தான் என்பதற்காக பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வது எந்த வகை நீதி?
இப்படி ஒரு சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் கன்னகியைப் போல் மனித குல விரோதி யாரும் இருக்க முடியாது.
மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன் எனும் பேயன்
குளிரால் நடுங்கிய மயிலுக்கு பேகன் என்பவன் போர்வை கொடுத்த கட்டுக் கதையும் அலங்கார ஊர்தியில் இருந்தது.
குளிரில் மயில் நடுங்கியது என்பதே கட்டுக்கதை அல்லவா? பறவைகள் குளிரைத் தாங்கும் வகையில் இயற்கையான உடலமைப்பைப் பெற்றுள்ளன. அவற்றுக்குப் போர்வை போர்த்துவது அவற்றைத் தண்டிப்பதாகத் தான் ஆகும். போர்வைக்குள் அவை அடங்கி இருக்காது. போர்வையுடன் பறக்கவும் முடியாது.
இப்படி எவனாவது ஒரு பேயன் (பேகன்) அன்று செய்திருந்தால் அவனது அறியாமையை எண்ணி வருந்தலாமே தவிர வள்ளல் தன்மைக்கு இதை எடுத்துக் காட்டாகக் கூற முடியுமா?
அப்படியானால் வணடலூர் பூங்காவில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஸ்வெட்டர் கொடுக்கும் திட்டம் எதுவும் அடுத்த பிறந்த நாளைக்கு கலைஞர் கொண்டு வரப் போகிறாரா? தமிழன் என்றால் முட்டாள் என்று சித்தரிப்பதற்கு மக்கள் பணத்தைப் பாழடிக்க வேண்டுமா?
பிசிராந்தையார் – கோப்பெரும் சோழன்
பிசிராந்தையார் கோப்பெரும் சோழன் இடையே உள்ள நட்பைப் பற்றி விளக்கும் அலங்கார ஊர்தியும் இருந்தது.
பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காண வேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை என்று இவனது கதை நீள்கிறது.
பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆந்தையார் பாண்டிய மன்னனுக்கு விசுவாசமாக இல்லாமல் பாண்டியனின் எதிரியாகிய சோழனின் ஆதரவாளராக இருந்துள்ளார். எந்தத் தேசத்தில் இருக்கிறோமோ அந்தத் தேசத்தின் எதிரியின் மீது அன்பு வைப்பது தேச விரோதச் செயலாகும். தமிழனின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் ராஜபக்சேவுக்கு ஒருவன் உற்ற நண்பனாக இருப்பது போன்றது இந்தக் கூடா நட்பு.
அதைத் தான் பிசிராந்தையார் செய்துள்ளார். அத்துடன் கோப்பெரும் சோழன் உண்ணாமல் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததைக் கேள்விப்பட்டு தானும் அவருடன் சேர்ந்து உயிரை விட்டார் என்பது அந்தக் கட்டுக் கதையின் முடிவு.
அப்படியானால் வடக்கிருத்தல் என்ற தற்கொலை தவத்தை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா? ஒருவன் கிறுக்குத் தனமாக கோழைத்தனாக தற்கொலை செய்தால் அவனுடன் மற்றவரும் தற்கொலை செய்வது தான் நட்புக்கு இலக்கணமா?
வடக்கிருத்தல் எனும் தற்கொலையை கருனாநிதி ஆதரித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை உலக மூடநம்பிக்கை மாநாடு நடக்கும் அதே தினத்தில் கைது செய்து சிறையில் தள்ளியது என்ன நியாயம்?
அவர்கள் கோப்பெரும் சோழன் வழியில் தானே சென்றுள்ளனர். அவர்களை ஆதரித்த ஜெயலலிதாவும், வைகோவும் பிசிராந்தையார் வழியில் தானே சென்றுள்ளனர் என்று கருனாநிதி ஒப்புக் கொள்வாரா?
கையை வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் எனும் மூடனின் கதையும் இதில் இடம் பெற்று தமிழர்கள் மூடர்கள் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இவனைப் பற்றிய கதை இது தான்
பொற்கைப் பாண்டியன் என்பவன் காவல் காக்கும் பொருட்டு மதுரையில் வீதி வலம் வருவானாம். ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் “வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்” எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள்.
வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக் கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான்.
ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஜயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவாளே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், படைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக்கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான்.
வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் தங்கத்தால் கை செய்து பொருத்திக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் (தங்கக்கை) பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன்.
இது உண்மை என்று வைத்துக் கொண்டால் இதில் தமிழனின் பெருமை என்ன இருக்கிறது? அரசவையில் இந்த உண்மையைக் கூறினால் பிரச்சனை தீர்ந்து விடப் போகிறது. இதற்காக எவனாவது தன் கையை வெட்டிக் கொள்வானா? சரியான மெண்டல்கள் தான் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர் என்பதைத் தவிர வேறு ஒரு செய்தியும் இதில் இல்லை.
அட்சயப் பாத்திரத்துக்கும் ஊர்தி
அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் பற்றி புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. கோவலனின் காதலி மாதவியின் மகள் மணிமேகலை. இவளிடம் அட்சய பாத்திரம் இருந்ததாம். அதில் இருந்து அவள் வருவோருக்கெல்லாம் உணவு அளித்து வந்தாளாம். இந்த அட்சயப் பாத்திர கட்டுக் கதைக்கும் அலங்கார ஊர்தி.
எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும் பாத்திரம் ஒன்று இருக்க முடியுமா? இது பகுத்தறிவுக்கோ, அறிவியலுக்கோ உகந்ததா?
வாழும் பெரியார் இதை நம்புகிறாரா?
அப்படியே ஒரு பாத்திரம் இருந்து அதில் இருந்து வருவோர்க்கெல்லாம் உணவு கொடுப்பதில் என்ன பெருமை உள்ளது? வடிகட்டிய கஞ்சனிடம் இப்படி ஒரு பாத்திரம் இருந்தால் அவன் கூட கொடுக்கத் தான் செய்வான். ஏனெனில் எவ்வளவு எடுத்தாலும் குறையாது எனும் போது இழப்பு பற்றி கவலை அவனுக்கு இருக்காது.
இல்லாத கட்டுக் கதைகளை நம்புபவன் தான் தமிழன் என்று உலகுக்கு காட்டுவதற்கு கலைஞர் மிகவும் மெனக்கெட்டுள்ளார்.
ரமாயணமும் இந்து மதப் பழக்கங்களும்
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழ் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டப்பட்டது. கரக ஆட்டம், காவடி ஆட்டம், முளைப்பாரி, சிவன் விஷ்னு பிள்ளையார், முருகன், மற்றும் பலவேறு இந்து தெய்வங்கள் வடிவில் வேடமணிந்து நடனக்குழுவினர் ஆட்டம் போட்டனர்.
ராமர் பாலம் பிரச்சனை வந்த போது ராமாயணமே கட்டுக்கதை என்றார் வாழும் பெரியார். ஆனால் அவர் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராமாயணத்தைப் புகழ்ந்து பேசி வாழும் பெரியார் முகத்தில் கரியைப் பூசிச் சென்று விட்டார்.
அது போல் இந்து மதப் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகள் அனைத்துக்கும் சமத்துவப் பெரியாரால் தமிழ்ச்சாயம் பூசப்பட்டது.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழ் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டப்பட்டது. கரக ஆட்டம், காவடி ஆட்டம், முளைப்பாரி, சிவன் விஷ்னு பிள்ளையார், முருகன், மற்றும் பலவேறு இந்து தெய்வங்கள் வடிவில் வேடமணிந்து நடனக்குழுவினர் ஆட்டம் போட்டனர்.
ஒரு சர்ச்சோ, ஒரு பள்ளிவாசலோ தமிழனின் அடையாளமாகக் காட்டப்படவில்லை.
முழுக்க முழுக்க இந்து மத இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவை தான் மாநாடு முழுவதும் சிற்பங்களாகவும், ஊர்திகளாகவும், சுவர் ஓவியங்களாகவும் காட்சியளித்தன. மொத்தத்தில் சங்கராச்சாரியார் நடத்தும் இந்து மாநாடு போல் இந்த உலக மூட நம்பிக்கை மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
ஒரே வித்தியாசம் மற்றவர்கள் நடத்தும் மாநாடு அந்த நம்பிக்கை உள்ளவர்களிடம் திரட்டப்பட்ட நிதியில் நடக்கும். இந்த மாநாடு அனைத்து மதத்தினரின் வரிப் பணத்தில் நடக்கிறது.
இதற்கு ஆதரவாக
காதர் முகைதீன்கள் அறிக்கை விடுகிறார்கள்.
பகுத்தறிவாளர்கள் எலும்புத் துண்டுகளுக்காக சாமரம் வீசுகிறார்கள்.
பத்திரிகையாளர்கள் அரசு விளம்பரத்துக்காகவும் அற்பப் பரிசுகளுக்காகவும் விலை போய் விட்டனர்.
ஒட்டு மொத்த தமிழர்களை மூடர்களாகச் சித்தரிக்க இவர்கள் முயன்றாலும் உண்மை முஸ்லிம்கள் மட்டுமே இதில் தெளிவாக உள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
ஒட்டு மொத்த தமிழகமே தமிழின் பெயரால் மூட நம்பிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் போது முஸ்லிம்கள் இந்தச் செய்தியை உரத்துச் சொல்லி சிந்திக்கத் தூண்டும் கடமை உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது
Published on: June 24, 2010, 9:29 PM