இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?
கேள்வி: இயேசுவையும், மர்யமையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்டமாட்டான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் நபிகள் நாயகம் அவர்களும் தவறு செய்ததாக குர்ஆனில் பார்க்க முடிகிறது. இயேசுவை குர்ஆனே பரிசுத்த ஆவி என்று கூறுவதால் இயேசு தான் கர்த்தர் கர்த்தரைத் தான் ஷைத்தான் தீண்ட முடியாது என்று கிறித்தவ நண்பர் என்னிடம் வாதிடுகிறார். அவருக்கு தெளிவான பதிலை எப்படி கூறுவது?
-சைத் ரஹ்மான்
உங்களிடம் இக்கேள்வியைக் கேட்டவர் கிறித்தவர் என்பதால் பைபிளில் இருந்து முதலில் இதற்கான பதிலைக் கண்டு பிடிப்போம்.
பாவம் செய்கிற ஆத்மாவே சாகும் – (பைபிள் – எசக்கியேல் 18;20)
சிலுவையில் அறைந்து இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகிறது.
பாவம் செய்த ஆத்மா தான் சாகும் என்ற பைபிள் வாதப்படி இயேசு பாவம் செய்தார் என்று பைபிள் கூறுகிறது.
மனிதன் பாவம் செய்வதற்கு அவன் பிசாசினால் பிடிக்கப்படுவதே காரணம் என்பது பைபிளின் கோட்பாடு.
ஆனால் இயேசுவும் பிசாசினால் சோதிக்கப்பட்டார் என்று பைபிள் கூறுகிறது. – (மத்தேயு 4:1-10)
பிசாசினால் சோதிக்கப்பட்டதில் இருந்து இயேசு பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது.
பாவமே செய்யாதவர் என்ற அர்த்தத்தில் ஒருவர் இயேசுவைக் குறிப்பிட்ட போது இயேசு அதை மறுத்துள்ளார்.
அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார். – (மாற்கு 10:18)
நல்லவரின் எந்தப் பிரார்த்தனையும் இறைவனால் மறுக்கப்படுவதில்லை என்று பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
தேவனிடம் நல்லவர் செய்யக் கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை. – (யோவான் 9:31)
இயேசுவின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போயிற்று. இயேசு பாவம் செய்துள்ளார் என்று இதன் மூலம் பைபிள் ஒப்புக் கொள்கிறது.
மதுபானம் அருந்துவது பாவம் என்று பைபிள் கூறுகிறது. – (நீதி மொழிகள் 23:29-35)
ஆனால் இயேசு மதுபானபிரியன் என்றும் அதே பைபிள் கூறுகிறது. – (மத்தேயு 11:19)
ஒரு பெண் விபச்சாரம் செய்த போது பைபிள் சட்டப்படி கல் எரிந்து கொள்ளுமாறு மக்கள் கேட்டனர்.
அதற்கு இயேசு விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று கூறினார். – யோவான் 8:3-11
இயேசு அவளைத் தண்டித்திருக்க வேண்டியது தானே? என்று சிந்தித்தால் பைபிள் இயேசுவை எப்படிச் சித்தரிக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
பாவம் செய்தவர்கள் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது பைபிள் கோட்பாடு. – (மத்தேயு 3:6)
எல்லோரும் ஞானஸ்னானம் செய்தது போல் இயேசுவும் ஞானஸ்னானம் பெற்றார். – (மத்தேயு 3:13)
இப்படி பைபிளைப் புரட்டினால் இயேசு நிறையப் பாவங்கள் செய்துள்ளார் என்பது தெரிகிறது.
ஒருவர் பைபிளை நம்பினால் இயேசு பாவம் செய்தார் என்றும் நம்ப வேண்டும்.
இயேசுவை ஷைத்தான் தீண்டவில்லை என்று இஸ்லாம் கூறுவதை ஒருவர் ஆதாரமாகக் காட்டினால் அதற்கான அர்த்தத்தை இஸ்லாத்தில் இருந்து பெற வேண்டும். ஷைத்தான் தீண்டவில்லை என்பதற்கான அந்த்தம் என்ன என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளக்கி விட்டார்கள்.
صحيح البخاري
4548 – حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِيَّاهُ، إِلَّا مَرْيَمَ وَابْنَهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ} [آل عمران: 36]
பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போது ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். மர்யமையும், அவருடைய புதல்வரையும் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.நூல் : புகாரி 4548
குழந்தை பிறக்கும் போது ஷைத்தானால் தீண்டப்பட்டு குழந்தைகள் அழும். அதில் இருந்து இயேசு பாதுகாக்கப்பட்டார் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.
அதன் பிறகு அவர் பாவம் செய்ய மாட்டார் என்று இஸ்லாம் கூறவில்லை.
எல்லா மனிதர்களும் பாவம் செய்பவர்கள் என்று இஸ்லாம் தெளிவாக அடிப்படைக் கொள்கையை வகுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக விஷமத்தனமான விளக்கம் கொடுப்பது தான் தூய ஆன்மிகமா? என்று கேளுங்கள்.
எந்தக் கிறித்தவரும் இதற்கு தக்க மறுமொழி கொடுக்க முடியாது.