ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு

எம். ஷம்சுல்லுஹா

1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.

சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.

அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.

நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர், பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அதிகமான அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.

இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.

எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்கள் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.

இம்மாதிரியான பொறுப்பில் உள்ளவர்கள் மாறி விட்டால் மொத்த சமுதாயமும் மாறுவதற்கு வாய்ப்பாக அமையுமே என்று கருதி அன்னாரிடம் சந்திப்புக்கான நாள் கேட்டோம். அது போல் அவர் சந்திப்பதற்கு நாள் வழங்கினார்.

ஒரு நாள் இரவு நேரம். இஷாவுக்குப் பின் மவ்லவி பி.ஜே., நான், பொட்டல்புதூரைச் சார்ந்த ஒரு மவ்லவி ஆகிய மூவரும் ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூரில் இமாமாகப் பணி புரியும் பள்ளியில் போய் சந்தித்தோம்.

ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும். இது மாணவர்கள் அன்றிலிருந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை. இந்த நடைமுறையைப் பேண வேண்டுமே என்ற விவகாரம் வந்தது.

பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார். அதன் படி அவர் முன்னிலையில் முதன் முறையாக மண்டியிடாமல் சம்மணமிட்டு உட்கார்ந்தோம்.

சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

பி.ஜே. தனது வாதத்தைத் தொடங்கினார்.

பி.ஜே. : ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஷம்சுல்ஹுதா: உதாரணமாக மார்க்கத்தை பால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தயிர், மோர் என்று இருக்கின்றதல்லவா? அது போல் தான் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மார்க்கம் நான்கு வகைகளில் அமைந்திருக்கின்றது.

பி.ஜே. : ஹஜ்ரத்! நான் உங்களிடம் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் கேட்கின்றேன். நீங்களோ உதாரணம் காட்டுகின்றீர்கள்.

ஷம்சுல்ஹுதா: ஏன் உதாரணம் கூறக் கூடாதா?

பி.ஜே. : உதாரணம் கூறக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆதாரத்தைக் கேட்கும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறுமனே உதாரணத்தை மட்டும் கூறக் கூடாது என்கிறேன். சரி! நீங்கள் மார்க்கத்தை பாலாக சித்தரித்து உதாரணம் காட்டினீர்கள். இப்போது நான் மார்க்கத்தைத் தண்ணீர் என்று உதாரணம் காட்டுகிறேன். நீங்கள் இதில் பால் தயிர் வெண்ணை என்று பிரித்துக் காட்டுங்களேன்.

ஷம்சுல்ஹுதா: (மவ்னம் – சிறிய இடைவெளிக்குப் பிறகு) குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கு ஒரு நேர்முகக் கருத்தும் ஓர் அந்தரங்கக் கருத்தும் இருக்கின்றது. (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஹிப்பான், மஜ்மவுஸ் ஸவாயித், முஸ்னதுல் பஸ்ஸார், அல்முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது) என்று வருகின்றதல்லவா? இந்த அடிப்படையில் தரீகத் என்ற மறைமுக ஞானம் இருக்கலாம் அல்லவா?

பி.ஜே. : அப்படியானால் நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். இது ஒரு வசனம். ஒவ்வொரு வசனத்துக்கும் உள் அர்த்தம் வெளி அர்த்தம் உள்ளதாக நீங்கள் கூறிய அடிப்படையில் இதற்கு வெளிரங்க, அந்தரங்கக் கருத்தைக் கூறுங்கள்.

ஷம்சுல்ஹுதா : (மவ்னம்)

பி.ஜே. : அல்ஹம்துலில்லாஹி என்று சொல்லும் போது, புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது என்பது நேரடி அர்த்தம். எந்த ஒரு நன்மையான காரியத்தின் போதும் நாம் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? இது மறைமுகக் கருத்து. அவ்வளவு தானே! இதல்லாத மறைமுகக் கருத்து இதில் என்ன இருக்கின்றது?

ஷம்சுல்ஹுதா: கிழ்ர் நபி, மூஸா (அலை) சம்பவத்தில் அல்லாஹ், அல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா – நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம் என்று சொல்கின்றான். எனவே, இல்ம லதுன்னி (இறைவனிடமிருந்து வந்த தனிப்பட்ட ஞானம் ஆகும். அதாவது வஹ்யீயைப் போன்று வெளிப்படையாக வராத, அந்தரங்கமாக வரும் அகமிய ஞானம் ஆகும்) என்ற அடிப்படையில் அந்தரங்க, அகமிய ஞானம் ஒன்று உள்ளதல்லவா?

பி.ஜே. : லதுன் என்று வருகின்ற வார்த்தையை வைத்து அகமிய ஞானம் என்று முடிவுக்கு வருகிறீர்கள். ஜக்கரியா நபி இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, லதுன் என்ற வார்த்தை தான் இடம் பெறுகின்றது. அவர்கள் கேட்டது போன்று யஹ்யா என்ற குழந்தையையும் அல்லாஹ் கொடுக்கிறான். அதனால் அந்தக் குழந்தைக்கு வலத் லதுன்னி அல்லது துர்ரியத் லதுன்னி அல்லாஹ்விடமிருந்து வந்த தனிப்பட்ட குழந்தை என்று கொள்வோமா? நிச்சயமாகக் கொள்ள மாட்டோம். அது போல் தான் இந்த இல்ம லதுன்னி. இது தனிப்பட்ட ஞானத்தையெல்லாம் ஒரு போதும் குறிக்காது. எனவே கிழ்ர், மூஸா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த அகமியக் கல்விக்கு எந்தவொரு ஆதாரமும் எடுக்க முடியாது.

ஷம்சுல்ஹுதா: (மவ்னம்)

பி.ஜே. : இறந்து விட்ட நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்ய ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? இறந்து போன நல்லடியார்கள் பதிலளிப்பார்களா?

ஷம்சுல்ஹுதா: நபி (ஸல்) அவர்கள் உஹத் போரின் போது, அதில் ஷஹீதானவர்களிடம் வழியனுப்புவது போன்று பேசிக் கொண்டிருந்தார்களே?

பி.ஜே. : நீங்கள் கூறும் அந்த நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்கள் தான் அங்கு பேசியிருக்கின்றார்கள். அங்கிருந்து ஏதேனும் பதில் வந்ததா?

ஷம்சுல்ஹுதா: அங்கிருந்து பதில் வரவில்லை.

பி.ஜே. : அங்கிருந்து பதில் வரவில்லை எனும் போது, இறந்தவர்களிடம் எப்படிக் கேட்க முடியும்? எனவே அது இணை வைப்பாகத் தான் அமையும்.

இதன் பிறகு சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் வெளியேறுகின்றோம்.

முடிவுரை

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வரும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற விஷயத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? என்று தமிழகத்தில் மாபெரும் மேதை என்று மதிக்கப்பட்ட ஷம்சுல்ஹுதா ஆலிமிடம் கேள்வி தொடுக்கப்பட்ட போது அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டார்.

இது ஷம்சுல்ஹுதா மீது நான் அளவு கடந்து கட்டி வைத்திருந்த மரியாதைக் கோட்டையை ஒரு நொடிப் பொழுதில் மடமடவென்று தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கி விட்டது.

ஷம்சுல்ஹுதா அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பான தோற்றத்தைக் கொண்டவர். தன்னை விட சிறியவராக இருந்தாலும், வாடா போடா என்றெல்லாம் பேசாமல், தம்பி! வாங்க! என்று அழைத்துப் பேசுகின்ற தனிப் பாங்கைப் பெற்றிருந்தார்.

எப்போதும் வெள்ளை ஆடை தான் அணிவார். கவர்ச்சி மிக்க மேடைப் பேச்சு! காந்தத்தைப் போல் கவருகின்ற ரீங்காரக் குரல், கிராஅத்! பாடம் நடத்துவதிலும் தனக்கென தனி பாணியைத் தன்னகத்தே கொண்ட ஒருவர் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் விழி பிதுங்கியது, மொழி தடுமாறியது எல்லாம் இவர் சத்தியத்தில் இல்லை என்ற எண்ணத்தை என்னிடம் ஆழமாகப் பதிய வைத்தது. சத்தியத்தில் ஆணித்தரமாக அடியெடுத்து வைக்க உதவியது. இங்கு இதை நான் கூற முன் வருவதற்குக் காரணம் என்னுடைய மன மாற்றத்தைக் கூறுவதற்காக அல்ல!

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற கருத்துக்கு இவர்களிடம் கடுகளவு கூட ஆதாரம் இல்லை. எனவே அவையெல்லாம் மாயாஜால, மந்திரக் கதைகளாக அமைந்து விட்டன.

அது போல் இறந்து விட்ட பெரியார்களிடம் உதவி தேடுவதற்கு, பிரார்த்தனை செய்வதற்கு எள்ளளவும் ஆதாரத்தை இந்த மாபெரும் மேதைகளால் சமர்ப்பிக்க இயலவில்லை என்பதை இந்தக் கலந்துரையாடல் வடிவில் அமைந்த விவாதம் தெரிவிக்கின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

இந்த விவாதத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மதீனாவில் கையேந்தும் காசுக்காக இங்கு வேலை செய்யும் வர்க்கத்தில் உள்ளவர்கள் இல்லை நாங்கள்! ஏகத்துவம் என்ற வெளிச்சம் 80களில் எங்கள் உள்ளங்களில் வெள்ளமாய் பாய்ச்சப்பட்ட மாத்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தைச் சொல்கிறோம். இன்ஷா அல்லாஹ் இறுதி மூச்சு வரை சொல்வோம் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அடுத்து கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் நடந்த விவாதத்தை இன்ஷா அல்லாஹ் காண்போம்.