நான் என்பது உடலா உயிரா?

யாசிர்

மெஞ்ஞானம் என்ற பெயரில் சிலர் உளறிக்கொட்டிய கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

நான் என்று சொல்லும் போது அதில் இருந்து உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் தான் கேள்வி கேட்க வேண்டும். நான், நீ, அவன் என்பன அனைத்தும் அனைவருக்கும் புரியும் போது அதற்கு மேல் விளக்கம் கேட்பது மடமையாகும்.

நீ சாப்பிடு என்று உங்களிடம் ஒருவர் கூறினால் விழுந்தடித்துக் கொண்டு சாப்பிட ஓடுவீர்கள். நான் என்பது எனது உயிரா உடலா? என்று கேட்க மாட்டீர்கள். உயிர் சாப்பிட வேண்டுமா? உடல் சாப்பிட வேண்டுமா? என்றும் அப்போது கேட்க மாட்டீர்கள். நீ என்பது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருப்பதே இதற்குக் காரணம்.

நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனக் கூறினால் உங்கள் உடல் தருமா? உயிர் தருமா எனக் கேட்க மாட்டீர்கள். எப்போது தருவீர்கள் என்று தான் கேட்பீர்கள். நான் என்பதன் அர்த்தம் இப்போதெல்லாம் உங்களுக்குப் புரிகிறது.

சாப்பிட்டு அனுபவித்து முடித்து வெட்டியாக இருக்கும் போது இந்த அஞ்ஞானக் கும்பல் உளறுவதை அசை போடுகிறீர்கள்.

எடுத்த எடுப்பிலேயே இது உளறல் என்று அலட்சியப்படுத்த வேண்டாமா?

மாம்பழம் என்றால் என்ன? அதன் தோலா? கொட்டையா? அதன் சதையா? அல்லது அதில் உள்ள சாறா? அல்லது இனிப்பா? அல்லது அதன் நிறமா என்றெல்லாம் கேட்காமல் அதைப் புரிந்து கொள்கிறீர்கள். அது போல் மனிதன் என்பதையும் அவனைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் நான், நீ, அவன், இவன் போன்ற சொற்களையும் புரிந்து கொள்ளுங்கள்