பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா?
நபியின் கால்களை நபித்தோழர்கள் முத்தமிட்டார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளியூரிலிருந்து வந்த சிலர் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன.
பெரியார்களின் கால்களை முத்தமிடுவதற்கும், சிரம் பணிவதற்கும் இவை சான்றுகளாக உள்ளந என்று தவறான கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.
அந்த ஹதீஸ்களின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
حدثنا أبو كريب حدثنا عبد الله بن إدريس وأبو أسامة عن شعبة عن عمرو بن مرة عن عبد الله بن سلمة عن صفوان بن عسال قال قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي فقال صاحبه لا تقل نبي إنه لو سمعك كان له أربعة أعين فأتيا رسول الله صلى الله عليه وسلم فسألاه عن تسع آيات بينات فقال لهم لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تمشوا ببريء إلى ذي سلطان ليقتله ولا تسحروا ولا تأكلوا الربا ولا تقذفوا محصنة ولا تولوا الفرار يوم الزحف وعليكم خاصة اليهود أن لا تعتدوا في السبت قال فقبلوا يده ورجله فقالا نشهد أنك نبي قال فما يمنعكم أن تتبعوني قالوا إن داود دعا ربه أن لا يزال في ذريته نبي وإنا نخاف إن تبعناك أن تقتلنا اليهود وفي الباب عن يزيد بن الأسود وابن عمر وكعب بن مالك قال أبو عيسى هذا حديث حسن صحيح – ترمذي 2657 وابن ماجة 3695 واحمد 17397
இந்த நபியிடம் என்னை அழைத்துச் செல் என்று ஒரு யூதர் தனது தோழரிடம் கூறினார். அவரை நபி என்று சொல்லாதே! அவரது காதில் விழுந்தால் அவருக்கு நான்கு கண்கள் ஏற்பட்டு விடும் (அதாவது கர்வம் ஏற்பட்டு விடும்) என்று அந்தத் தோழர் கூறினார். பின்னர் இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தெளிவான ஒன்பது அத்தாட்சிகள் யாவை என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! திருடாதீர்கள்! விபச்சாரம் செய்யாதீர்கள்! தக்க காரணமில்லாமல் கொலை செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளதால் கொலை செய்யாதீர்கள்! குற்றம் செய்யாதவனைக் கொலை செய்வதற்காக மன்னரிடம் பிடித்துக் கொடுக்காதீர்கள்! சூனியம் செய்யாதீர்கள்! வட்டியை உண்ணாதீர்கள்! ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லாதீர்கள்! போர்க்களத்தில் பின்வாங்காதீர்கள்! யூதர்களே குறிப்பாக நீங்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்! என்று கூறினார்கள்! உடனே அவர்கள் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டனர். நீங்கள் நபி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அப்படியானால் என்னைப் பின்பற்ற உங்களுக்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தாவூத் நபியவர்கள் தனது வழித்தோன்றலில் ஒரு நபி இருந்து கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளனர். எனவே உங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டால் யூதர்கள் எங்களைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறோம் என்றனர்.
அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள் : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
இதைப் பதிவு செய்த திர்மிதி இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. நஸாயீ அவர்கள் இதன் கருத்து சரியாக இல்லை என்பதால் முன்கர் (இதை விட வலுவான ஆதாரத்துக்கு எதிரானது) என்று கூறியுள்ளார்.
அறிவிப்பாளரில் குறை உள்ளதால் இது பலவீனமானது என்று முன்திரி கூறியுள்ளார்.
இதன் கருத்து எப்படி தவறானது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் 17:101 வசனத்தில் மூஸா நபிக்கு ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இது யூத வேதங்களிலும் உள்ளது. இதைப் பற்றித் தான் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். மூஸா நபிக்கு கொடுத்த ஒன்பது அத்தாட்சிகள் என்பது மூஸா நபிக்கு கொடுத்த அற்புதங்கள் பற்றியதாகும். அவருக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் பற்றியதல்ல.
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்தபோது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
திருக்குர்ஆன் 17:101
ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபிக்கு வழங்கியதாகக் கூறும் இறைவன் அதன் பொருளைப் பின்வரும் வசனத்தில் சொல்லித் தருகிறான்.
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்” (என்று இறைவன் கூறினான்).
திருக்குர்ஆன் 27:12
ஒன்பது சான்றுகள் என்பது மூஸா நபிக்கு வழங்கப்பட்ட ஒன்பது அற்புதங்களையே குறிக்கிறது என்று இவ்வசனம் சொல்வதால் இதற்கு மாற்றமாக நபியவர்கள் பதிலளித்ததாகக் கூறுவது கட்டுக் கதையாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் சலமா அல் ஹமதானி என்பார் அறிவிப்பவற்றில் ஏற்கத் தக்கவையும் நிராகரிக்கத் தக்கவையும் உள்ளன என்று அபூ ஹாதம் கூறுகிறார்கள். (ஆதாரம் அல்ஜர்ஹு வத்தஃதீல்)
மேலும் காலில் விழுவதைத் தடை செய்யும் வலுவான ஆதாரங்களுக்கு முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளதால் மேலும் இது பலவீனப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இது போல் அமைந்த பின்வரும் ஹதீஸையும் தவறான கொள்கையுடயவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
حدثنا محمد بن عيسى بن الطباع حدثنا مطر بن عبد الرحمن الأعنق حدثتني أم أبان بنت الوازع بن زارع عن جدها زارع وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله قال وانتظر المنذر الأشج حتى أتى عيبته فلبس ثوبيه ثم أتى النبي صلى الله عليه وسلم فقال له إن فيك خلتين يحبهما الله الحلم والأناة قال يا رسول الله أنا أتخلق بهما أم الله جبلني عليهما قال بل الله جبلك عليهما قال الحمد لله الذي جبلني على خلتين يحبهما الله ورسوله
– ابو داود 4548 – سنن البيهقي الكبرى ج: 7 ص: 102 -13365 – المعجم الأوسط ج: 1 ص: 133 – 418 // المعجم الكبير ج: 5 ص: 275 – 5313
(அப்துல் கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) நாங்கள் மதீனா வந்து எங்கள் வாகனத்திலிருந்து இறங்கியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளையும், கால்களையும் முத்தமிடலானோம்….
அறிவிப்பவர் : ஸாரிவு (ரலி)
நூல்கள் : அபூதாவூத், பைஹகீ, தப்ரானி அவ்ஸத், தப்ரானி கபீர்
இந்த ஹதீஸை சில அறிஞர்கள் சரியான ஹதீஸ் என்று கூறி இருந்தாலும் தக்க காரணமில்லாமல் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
ஸாரிவு என்ற நபித்தோழர் கூறியதாக இதை அறிவிப்பவர் அவரது பேத்தி உம்மு அபான் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரது நம்பகத் தன்மைக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் இவரது அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஹதீஸ் சரியானது என்று கூறுபவர்கள் உம்மு அபான் என்ற பெண்ணின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் குறித்த நற்சான்றுகளை எடுத்துக் காட்டி அப்படிக் கூற வேண்டும். இவரது நாணயம், நேர்மை பற்றி ஒரு அறிஞரும் நற்சான்று கொடுக்கவில்லை. ஒரு அறிஞருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை.
أم أبان بنت الوازع عن جدها زارع، تفرد عنها مطر الأعنق.
இவர் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று தஹபி கூறுகிறார்.
அதாவது ஒரே ஒருவர் தான் இவரைப் பற்றி அறிந்திருக்கிறார் என்று தஹபி கூறுகிறார்.
رواه الطبراني وأم أبان لم يرو عنها غير مطر
உம்மு அபான் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று மஜ்மவுஸ் ஸவாயித் நூலில் ஹைஸமீ கூறுகிறார்.
ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்து வேறு எந்த அறிஞரும் ஒருவரைப் பற்றி நற்சான்று அளிக்காவிட்டால் அவர் யாரென அறியப்படாதவர் ஆவார். அதாவது பலவீனமானவராவார்.
இது பற்றி இப்னு ஹஜர் அவர்கள் தமது நுக்பா எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
النوع (40): فإن سمى الراوي وانفرد راو واحد بالرواية عنه فهو مجهول العين
ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரின் பெயரைக் கூறுகிறார். அவர் மட்டுமே அந்த அறிவிப்பாளரிடமிருந்து அறிவித்து இருந்தால் அந்த அறிவிப்பாளர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
இந்தக் காரணத்தால் உம்மு அபான் மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர் – ஆவார். எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.
இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீப் நூலில் இவர் மக்பூல் – ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று கூறியதை ஆதாரமாகக் காட்டி இது சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுகின்றனர்.
மக்பூல் என்ற சொல்லுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் இப்னு ஹஜரின் வழக்கத்தில் இதன் பொருள் அதுவல்ல.
அறிவிப்பாளர்களைப் பன்னிரண்டு தரமுடையவர்களாக பிரித்திருப்பதாகக் கூறும் இப்னு ஹஜர் அவர்கள் அதன் விளக்கத்தையும் தக்ரீப் நூலின் முன்னுரையில் கூறுகிறார்.
மக்பூல் என்பதை ஆறாவது தரமாகக் குறிப்பிடுகிறார்.
ஐந்தாவது தரமாக அவர் கூறுவதைப் பாருங்கள்.
الخامسة: من قصر عن الرابعة قليلاً، وإليه الإشارة بصدوق سيء الحفظ، أو صدوق يهم، أو له أوهام، أو يخطئ، أو تغير بأخرة ويلتحق بذلك من رمي بنوع من البدعة، كالتشيع والقدر، والنصب، والإرجاء، والتجهم، مع بيان الداعية من غيره.
உண்மையாளர் ஆனால் நினைவாற்றல் குறைந்தவர் என்றோ, உண்மையாளர் என்றாலும் தவறாகவும் கூறுவார் என்றோ, அல்லது தவறு செய்பவர் என்றோ, இறுதிக் காலத்தில் மூளை குழம்பியவர் என்றோ நான் குறிப்பிடுபவர்கள் ஐந்தாவது தரத்தில் உள்ளவர்களாவர் எனக் கூறுகிறார்.
இவர்களை விட தாழ்ந்த தரத்தில் உள்ள ஆறாவது தரத்தில் உள்ளவர்களைத் தான் மக்பூல் என்று தான் சொல்வதாக இப்னு ஹஜர் கூறுகிறார்.
மக்பூல் பற்றி இப்னு ஹஜர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்!
السادسة: من ليس له من الحديث إلا القليل، ولم يثبت فيه ما يترك حديثه من أجله، وإليه الإشارة بلفظ: مقبول، حيث يتابع، وإلا فلين الحديث.
ஒருவர் குறைவான ஹதீஸ் அறிவித்து, அவரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸ் பலவீனம் என்று சொல்லப்படவில்லையானால் அவர் தான் மக்பூல் என்கிறார்.
நான்காம் படித்தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் இடம் பெறும் ஹதீஸ்களை பலவீனம் என்று சொல்பவர்கள் அதைவிட தரத்தில் குறைந்த ஐந்தாம் நிலையில் உள்ளவர் இடம் பெற்ற ஹதீஸை சரியானது என்று கூறியிருப்பது வியப்பாக உள்ளது.
மேலும் காலில் விழக் கூடாது என்று தடை செய்யும் ஆதாரங்களை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுக்கு மாற்றமாக இந்த ஹதீஸ்கள் அமைந்திருப்பதால் இன்னும் கடுமையான பலவீனமுடையதாக இந்த ஹதீஸ்கள் ஆகிவிடுகின்றன.
கைகளை முத்தமிடுதல்
பெரியார்கள், உலமாக்கள், ஹஜரத் கிப்லாக்கள் ஆகியோரைப் புனிதமானவர்கள் என்று கருதிக் கொண்டு அவர்களின் கைகளை முத்தமிட்டுவது பாக்கியம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகிறது.
மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதாக சில ஹதீஸ்கள் உள்ளன. அதன் நம்பகத் தன்மையில் கருத்து வேறுபாடு உள்ளது.
அவற்றை நம்பகமானது என்று வைத்துக் கொண்டாலும் அது இச்செயலுக்கு ஆதாரமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகான் என்று நம்புவது மார்க்கத்தின் கடமையாகும். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்ப வேண்டும்.
மற்ற எவரையும் மகான் என்றோ, இறைவனுக்கு நெருக்கமானவர் என்றோ முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. நாம் மகான் என்று நினைப்பவர் இறைவனிடம் ஷைத்தானாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே மகான் என்று இறைவனாலும், இறைத் தூதராலும் அறிவிக்கப்படாத அனைவரும் சமமான நிலையில் உள்ளவர்களே. இறைவனுக்கு இவர் நெருக்கமானவர் என்று யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியாது எனும் போது வெறும் தாடியையும், ஜுப்பாவையும், பேச்சாற்றலையும், அரபுமொழி அறிவையும் வைத்துக் கொண்டு ஒருவரை மகான் என்று முடிவு செய்வது இறைவனது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குற்றமாகும்.
ஒருவர் மகானா? அல்லவா? என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க நீ யார்’ என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம் ஏற்கத்தக்க பதில் இல்லை.
எனவே எந்த மனிதரையும் முத்தமிட நமக்கு அனுமதி இல்லை. ஸலாம் கூறுவதும், முஸாஃபஹா செய்வதும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தில் இல்லை.
ஒருவரை நல்லடியார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதை விரிவான ஆதாரங்களுடன் அறிய அவ்லியாக்களைக் கண்டறிவது எப்படி என்ற நமது நூலைப் பார்வையிடுக!
சுருங்கச் சொல்வதென்றால்
மக்களால் மதிக்கப்படும் அறிஞர்களும், பெரியார்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.
நாம் அவர்களைப் பார்ப்பதோ, அவர்கள் நம்மைப் பார்ப்பதோ பாக்கியம் அல்ல.
அவர்களைத் தொடுவதோ, அவர்கள் நம்மைத் தொடுவதோ அவர்கள் தொட்டுத்தரும் பொருட்களைத் தொடுவதோ புனிதமாக ஆகாது.
அவர்களின் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகள் மற்ற மனிதர்களின் வாய்களில் இருந்து வரும் வார்த்தைகள் போன்றவை தான். அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை.
அவர்களின் கைகளால் திறந்து வைக்கப்படும் வீடுகள், கடைகள் மற்ற மனிதர்களால் திறந்து வைக்கப்படும் வீடுகள் போன்றவை தான்.
அவர்கள் புனிதமானவர்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் செய்யும் துஆவிலும், அவர்கள் வழங்கும் பொருட்களிலும் சில சந்தர்ப்பங்களில் பரகத் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அவர்களைத் தவிர மற்ற யாராக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர்கள் என்பதற்கோ, அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்பதற்கோ, அவர்கள் நல்லடியார்கள் என்பதற்கோ ஆதாரம் இல்லாததால் அவர்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.
அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்களே என்று உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!