அதிக மதிப்பெண் போதை

கேள்வி

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது?

பதில்

இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும், தேவைகளும் உள்ளன.

உடலை வலுவாக வைத்திருக்க துணைபுரியும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்து கொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது.

பிள்ளைப் பருவத்தின் சந்தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண் தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள்.

சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களைப் பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்த வேண்டும்.

அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறிபிடித்து அலைவது ஒழிந்துவிடும்.

நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத்தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால்கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும்.

இதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது.

மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர்தான்.

கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக, சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம்.

அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள்.

எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மனப் பாடத்திற்காகத்தான் மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.

100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100 கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள்.

அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்துவிட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும்.

இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100 சதவிகித மதிப்பெண் பெறுவான்.

அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70 சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்களும் கிடைக்கிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள்.

இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது.

அதாவது வாய்ப்புக்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த மாணவர்கள் சிலரது மதிப்பெண்களை விட அது போன்ற தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம்.

இது போக மதிப்பெண்கள் போடக்கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதை விடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத்தாள் தாரள சிந்தனை கொண்டவர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான்.

விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிப்பதால் திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு.

முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊனமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால் கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளைத் திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வர வேண்டியவன் கீழே போய் விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன.

இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, விடை எழுத ஆசிரியர்கள் துணை செய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு.

எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்த போது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த ஆண்டு சிறப்புப் பறக்கும் படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன. சில பள்ளிகள் அப்படியும் தப்பித்து விட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்.

எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மாணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன.

மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள்.

மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்களைச் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது.

முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர்கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு மட்டும் நிரப்பப்படாது. அந்தப் பத்துப் பேருக்கு ஒதுக்கியது போக எஞ்சியவை அடுத்தடுத்த மதிப்பெண் எடுத்தவர்களைக் கொண்டுதான் நிரப்பப்படும். இதை அனைவரும் உணர்வது நல்லது.