நாகரீக உடை அணியுங்கள் !தமிழக அரசு
ஆசிரியைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!
நமது கலாச்சாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குனரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், வகுப்பறையில் நாகரீகமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியைகள் மாணவியருக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மாணவியர்களும் ஆசிரியைகளைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆசிரியைகள் சரியில்லாத உடைகளுடன் வகுப்பறைகளுக்கு வருவதாகப் புகார்கள் வருவது வருத்தம் தருகிறது என்று அந்த சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.
மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும் இந்த சுற்றறிக்கையில் என்ன மாதிரியான உடைகளை ஆசிரியைகள் அணிய வேண்டும் என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்படவில்லை என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
பெண்கள் அணியும் ஆடைகள் குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருவதை நாம் காண முடிகின்றது. அந்த அடிப்படையில் தான் ஆசிரியைகளுக்கு போடப்பட்ட இந்த உத்தரவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
நாட்டில் ஒழுக்க ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள் தான் காரணம் என்பதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாக பெண்கள் அணியும் ஆடைகள் சம்பந்தமாக பல்வேறு வாதப் பிரதிவாதங்களும், பல்வேறு புதிய உத்தரவுகளும் போடப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் தங்களது உடல் அழகை மறைக்கக் கூடிய வகையில் பெண்கள் ஆடையணிவது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என்ற இஸ்லாத்தின் கருத்தை உண்மைப்படுத்தும் முகமாக தமிழக அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
அதே நேரத்தில் மாணவ அமைப்புகள்தான் பெண்கள் தங்களது விருப்பப்படி ஆடையணிவது தான் பெண்களுக்குரிய சுதந்திரம் என்றெல்லாம் சொல்லி கூப்பாடு போட்டு வந்தார்கள். ஆனால், அந்த மாணவர் அமைப்புகளே தற்போது இந்த விஷயத்தில் தெளிவடைந்துள்ளனர் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஆம்! சென்ற வாரம் மணிப்பூரில் உள்ள மாணவர் அமைப்புகள் மாணவிகளுக்கு போட்ட தடையுத்தரவு அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் முழங்கால் தெரியும் அளவுக்கு ஆபாசமாக யூனிஃபார்ம் (சீருடை) அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் அமைப்புகள் இது தொடர்பாக மாணவிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. ஆபாச சீருடையை தவிர மொபைல் ஃபோனை கல்வி நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை ஏற்படுத்தப்படும் என்ற செய்திகள் கடந்த வாரம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் ஆபாசமான உடைகளை அணிவதற்கு தடை விதிக்க ஆறு மாணவர் அமைப்புகள் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
பாதம் வரை அணியப்படும் பானெக் என்கிற பாரம்பரிய உடையைத்தான் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வர வேண்டும். முழங்கால் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட எந்தப் பள்ளி, கல்லூரி சீருடையையும் ஏற்க இயலாது என்று மாணவர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருக்கிறது.
ஆல் மணிப்பூர் ஸ்டுடன்ஸ் யூனியன், டெமோக்ரெடிக் ஸ்டுடன்ஸ் அலயன்ஸ் ஆஃப் மணிப்பூர், மணிப்பூர் ஸ்டுடன்ஸ் ஃபெடரேசன் உள்ளிட்ட மாணவர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ஆபாச உடையை மாணவிகள் அணிவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருட்களை விற்பதற்கும் தடை விதித்துள்ளது என்ற செய்தியும் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை உண்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
இப்படி மாணவிகளும், ஆசிரியைகளும் ஆடை விஷயத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தங்களது உடலழகை மறைத்தாலே பற்பல விபரீதங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்பதுதான் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பு.