பிஸ்மில்லா கூறி அறுப்பது சரியா?

உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லா ஏன்

அப்துல் சமத்

பதில் :

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும்.

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி தான் பிஸ்மில்லா கூறுவதாகும்.

இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரை கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்கு கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்த்தால் தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த உறுதி மொழி தான் லைசன்ஸ் ஆகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமயாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலை எடுத்து விடுகிறான்.

அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை. இதற்குக் காரணம் பிஸ்மில்லா தான். அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால் தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும் நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லா சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.