உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

2. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா?

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா?

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுயநலத்திற்காகக் கொல்வது உயிர்வதை தானே?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண்பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.

எனவே உயிர்வதை என்று சொல்வது போலியான காரணம் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.

சைவம், அசைவம் ஆகிய இரு வகை உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

இவ்வாறு சிந்தித்தால் தனது நன்மைக்காக பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும், முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

1) இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும், வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக் கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.

1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம், ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை.

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயிரினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால் தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை.

இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான்.

அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால் தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

இதனால் இன்னொரு நன்மையும் ஏற்படுகிறது. மனிதர்கள் விரும்பி உண்ணும் பிராணிகளும் மனிதர்கள் உண்ண விரும்பாத பிராணிகளும் உள்ளன. சிலர் விரும்பி, சிலர் விரும்பாத பிராணிகளும் உள்ளன.

ஒருவர் விரும்பாத பிராணியை அவருக்கு நாம் வழங்கினால் அது மிகப்பெரிய மோசடியாகும். காகத்தை அறுத்து அதைக் கோழி எனச் சொல்லி விற்பதையும், நாயை அறுத்து ஆட்டு இறைச்சி என விற்பதையும் நாம் பார்க்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் மாமிசத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவன் பெயரால் அறுக்கிறேன் என்று கூறி அறுக்கும் முஸ்லிம் ஆட்டை அறுத்து மாட்டிறைச்சி என்று சொல்ல மாட்டான். உண்ணக் கூடாது என்று தடுக்கப்பட்ட நாய், பன்றி காகம் ஆகியவற்றை அவன் அறுக்க மாட்டான்.

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதால் இந்த நன்மையும் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

மீனை அறுக்காமல் சாப்பிடுவது ஏன்? செத்த மீன்களைச் சாப்பிடுவது ஏன் என்ற சந்தேகம் உள்ளவர்கள் 505வது குறிப்பைப் பார்க்கவும்.