விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா?

கேள்வி:

கணவனோ அல்லது மனைவியோ எவ்வளவு தான் சொத்துக்கள் அவரவர் பெயரில் பதிவு செய்து வைத்திருந்தாலும் அதில் இருவருக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வருவதாக செய்திகள் வருகின்றது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா? இல்லை இதனால் பாதிப்புகள் ஏற்படுமா? – விளக்கவும்.

– கடையநல்லூர், மசூது

கணவன் – மனைவி வாழ்ந்த காலத்தில், கணவன் பெயரில் உள்ள சொத்துக்களும், மனைவிக்கு பிரித்து அளிக்க வேண்டும் என்ற சட்டமும், தவறான ஒன்றாகும். ஏனெனில், இதன் மூலம் வசதி படைத்த கணவன்களை திருமணம் செய்து கொண்டு, பிறகு எளிதில் பிரியலாம் என்ற சட்டம் மூலம் கணவனின் சொத்துக்களை அடைய இது வழிவகுக்கலாம். அந்தச் சொத்தின் மூலம், தான் விரும்பியதை விவாகரத்திற்குப் பிறகு செய்யவும் இது வழிவகுக்கலாம். இந்தச் சட்டம் சரியானதா?

ஃபெய்ஸல், ரியாத்

மேற்கண்ட சட்டம் இயற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வதற்கு முன்னர் மேற்கண்ட சட்டம் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமணம், வாரிசுரிமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தமது மதச்சட்டப்படி நடந்து கொள்ளும் உரிமையை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் தலையிட முடியாது.

தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டம் ஹிந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து திருமணச் சட்டத்திருத்த மசோதா 2010 என்ற மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது அதை உடனே நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நிரந்தரக் குழுவின் பரிசீலனைக்கு விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற நிரந்தரக்குழு பரிந்துரைத்துள்ள மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் இம்மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதால் இது நிறைவேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்து திருமணச் சட்டத்தில் நான்கு முக்கிய திருத்தங்களை நாடாளுமன்ற நிரந்தரக்குழு பரிந்துரைத்துள்ளது.

1.தம்பதியர் சேர்ந்து வாழ முடியாது என்று நீதிமன்றம் கருதினால் உடனே விவாக ரத்து வழங்கலாம். ஆறு மாதம் அல்லது 18 மாதம் கழித்த பின்பே விவாகரத்து வழங்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் மாற்றப்படும்.

இது குறித்து சென்ற வார உணர்வில் நாம் தெளிவாக எழுதியுள்ளோம்.

2.மனைவி விவாகரத்து கோரினால் அதைக் கணவன் ஆட்சேபிக்க முடியாது என்றும், கணவன் விவாகரத்து கோரினால் அதை மனைவி ஆட்சேபிக்கலாம் என்பது இரண்டாவது திருத்தம். இது குறித்தும் சென்ற வார உணர்வில் எழுதப்பட்டு விட்டது.

ஆண்கள் விவாகரத்து கோரும் போது பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பல நிபந்தனைகளையும் அதற்கு விதித்துள்ளதால் அது குறித்து பரிசீலனை அவசியம் என்பதால் இது இஸ்லாமியச் சட்டத்துக்கு நெருக்கமான சட்டம் எனக் கொள்ளலாம்.

3.கணவன் மனைவி சேர்ந்து வாழும் போது ஒரு குழந்தையைத் தத்து எடுத்து விட்டு பின்னர் விவாகரத்து செய்தால் தத்து எடுத்த பிள்ளைக்கு இருவரின் சொத்திலும் உரிமை உண்டு என்பது மூன்றாவது திருத்தம்.

தத்துப் பிள்ளை என்பது இஸ்லாத்தில் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்தது தான். விளக்கத் தேவை இல்லை.

4.திருமணத்திற்குப் பின் கணவனோ மனைவியோ சொத்து வாங்கி விட்டு பின்னர் விவாகரத்து செய்தால் ஒருவர் சொத்தில் மற்றவருக்கும் பங்கு உள்ளது. எவ்வளவு பங்கு என்பது மசோதாவில் இல்லை. எவ்வளவு பங்கு என்பது வழக்கின் சூழலைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப நீதிமன்றம் இதை முடிவு செய்யும். சரிபாதி என்று மசோதாவில் கூறப்படவில்லை.

இதுவும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்றாலும் இது அறிவுக்குப் பொருத்தமான சட்டமாக இல்லை. இதில் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாகும்.

விவாகரத்து செய்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இந்துத் திருமணச் சட்டத்தில் ஏற்கனவே உள்ளது. மாதாமாதம் ஜீவனாம்சம் கொடுக்குமாறு சட்டம் இருக்கும் போது கணவன் சொத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறுவதால் இது ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

மனைவியை விவாகரத்து செய்யும் போது கணவனிடமிருந்து நியாயமான ஒரு தொகையைப் பெற்று வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இவர்கள் கொண்டு வரவுள்ள சட்டத்தில் திருமணத்துக்குப் பின் சம்பாதித்த சொத்தில் தான் மனைவிக்கு ஒரு பங்கு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமியச் சட்டத்தில் கணவனின் அனைத்து சொத்துக்களும் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்கேற்ப ஈட்டுத் தொகை வழங்குமாறு கூறப்படுகிறது.

மனைவியின் சம்பாத்தியமும் கணவனின் சம்பாத்தியத்தில் சேர்ந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் இதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும் என்பது இந்தச் சட்டத்தின் கருத்து. மனைவியின் உழைப்பு இல்லாமல் கணவனின் உழைப்பில் மட்டும் திரட்டிய சொத்தாக இருந்தாலும் அதிலும் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு தக்க ஈட்டுத்தொகை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கருத்து.

அதாவது பெண்களின் பாதிப்பை இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது. சொத்தைத் திரட்டுவதில் பெண்களின் பங்கு உண்டா என்பதில் இச்சட்டம் கவனம் செலுத்துகிறது. உழைக்காத சம்பாதிக்காத மனைவியர் என்றால் மிக அற்பமான தொகை தான் கிடைக்கும்.

இது குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அது வருமாறு :

ஜீவனாம்சம்

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதை விடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.

மாதாமாதம் ஜீவனாம்சம் பெறுவதற்காக அதில் பாதியளவு வழக்கிற்குச் செலவிடப்படுகிறது. இச்சுமையைப் பெண் சுமக்கிறாள். கள்ளக் கணக்குக் காட்டி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து பெரும்பாலான கணவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அல்லது அற்பமான தொகையைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாடுகளில் அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுகின்றது. மறுமணம் செய்துவிட்டால் முந்தைய கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று இந்த நாடுகளிலுள்ள சட்டம் கூறுகின்றது.

எனவே, ஜீவனாம்சம் முறையாகக் கிடைத்து வந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்ய மாட்டாள். ஏனெனில் மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் பெற முடியாது. ஜீவனாம்சத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சனை ஓரளவு தீர்ந்துவிட்டாலும், அவளது உணர்வுகளுக்கான தீர்வு ஏதுமில்லை. இதனால் சிலர் தவறான நடத்தையில் ஈடுபடவும் இது தூண்டும்.

பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையையும், சொத்தையும் ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.  திருக்குர்ஆன் 2:241, 33:49 ஆகிய வசனங்கள் இதைத் தான் கூறுகின்றன.

அந்த வசனங்கள் வருமாறு :

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

திருக்குர் ஆன் 2:241

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

திருக்குர்ஆன் 33:49

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இவ்வசனங்கள் குறிக்கின்றன என்று நினைக்கின்றனர்.

இதை இத்தா காலத்தில்’ என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில்’ நியாயமான முறையில் என்று கூறுகிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.

திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

திருக்குர்ஆன் 2:236

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் பாதுகாப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக கொடுக்கும் ஈட்டுத் தொகையாக இது ஆகாது.

முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றது, இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் வழங்கும் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.

எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

திருக்குர்ஆன் 65:6 வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனங்களில் (2:241, 33:49) கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.

இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டால் இந்தச் சட்டத்தை வரைந்தவர்கள் ஓரளவுக்கு இஸ்லாமியச் சட்டத்துக்கு நெருக்கமாக வருகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் சொத்தில் கணவனுக்கும் பங்கு என்பதில் பெண்களின் பலவீனமும் அவர்களுக்கு ஏற்படும் இழப்பும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.