மறுமை என்பது உண்மையா?

கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்? மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த மண்ணறையிலும் நடைபெறவில்லையே ஏன்? உங்களால் நடந்ததாக நிரூபணம் செய்ய முடியுமா? என்றும் பல கேள்விகள் கேட்டார்.

– ஜே. ரியாஸ் கான், கீழக்கரை.

பதில்: மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில், ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாகும்.

ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன. உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது.

நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை. வேறு எங்கேயும் இருக்கவில்லை. எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பதை நம்புவது எளிதானதாகும்.

மேலும், கடவுள் இருப்பதை முஸ்லிம்கள் நம்பும் போது அவன் சர்வ சக்தியுள்ளவன் என்று நம்புகின்றனர். மனிதனைப் போல் பலவீனமானவனாக கடவுளை முஸ்லிம்கள் நம்புவதில்லை.

மட்கிப் போனவைகளை உருவாக்குவது உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இயலாத ஒன்று தான். கடவுளின் நிலையும் அது தான் என்றால் அப்படி ஒரு கடவுள் தேவையே இல்லை.

நமக்கெல்லாம் முடியாததை எவனால் செய்ய முடியுமோ அவன் தான் கடவுள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

எனவே, மறுமை பற்றி கேள்வி கேட்பது பொருத்தமில்லாதது.

கடவுளைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வந்து விட்டால் மறுமை, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவை.

மண்ணறையில் வேதனை என்பது ஒரு அடையாளத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தையாகும். மண்ணறையைத் தோண்டிப் பார்த்தால் மனிதர்கள் யாரும் வேதனை செய்யப்படுவதை பார்க்க முடியாது. இதைச் சரியான முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

நல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

கெட்டவர்கள் பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.

அது போல் ஒரு மனிதனைக் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன; அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மண்ணறை ஏது?

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் – அந்த மண்ணுக்குள் தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும் பகுதியினருக்கு மண்ணறை வேதனை இல்லாமல் போய்விடும்.

இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து தண்டிக்கிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.

குறிப்பிட்ட சில மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருத வேண்டும்.

எரிக்கப்பட்டவர்களுக்கும், மிருகங்களுக்கு உணவாகிப் போனவர்களுக்கும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்ற விபரீதமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மண்ணறை வாழ்க்கை பற்றி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.

மண்ணறை வாழ்வு இது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் உங்கள் நாத்திக நண்பரின் கேள்விக்கு விடையளிக்கலாம். மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா? என்றெல்லாம் அவர் கேள்வி கேட்க முடியாது.

அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்