கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233 வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் (அதாவது 24 மாதங்கள்) எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15 வது வசனம் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

– எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.

பதில்: 2:233 வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால், 46:15 வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.

கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, ‘கர்ப்ப காலம் ஆறு மாதம்’ என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.

அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராக இறைவன் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.

மனிதனுக்குத் தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.

கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்று கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.

இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர்தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.

மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்  தன்மையும், அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.

நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் – இன்ஸான் – என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு ‘இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம்’ என்று கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்! இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும், மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது.

எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.

இந்த மாபெரும் உண்மை, படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)