போராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

பேரணி, ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் பெண்கள் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா?

பதில் :

முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிர) தாங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர். எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச் செய்கின்றன.

இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்களின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும் ஆதரித்து பங்கு கொண்டுள்ளது.

கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவது கூடாது என்று கூறுகிறது. ஆனால் தர்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதை இவர்கள் கண்டிப்பதில்லை.

பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம், கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அந்த அனுமதியே போராட்டங்களுக்கும் பொருந்தும்.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது.

صحيح البخاري

351 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.

நூல் : புகாரி 351

ஐந்து வேளைத் தொழுகைகளிலும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.

பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

மேலும் பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும், தலையைத் திறக்கும் நிலையும் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري

193 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا»

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.

நூல் : புகாரி 193

போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் இதனால் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري

324 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي العِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ، فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ، قَالَتْ: كُنَّا نُدَاوِي الكَلْمَى، وَنَقُومُ عَلَى المَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا وَلْتَشْهَدِ الخَيْرَ وَدَعْوَةَ المُسْلِمِينَ»، فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ، سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بِأَبِي، نَعَمْ، وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلَّا قَالَتْ: بِأَبِي، سَمِعْتُهُ يَقُولُ: «يَخْرُجُ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، أَوِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ، وَالحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الخَيْرَ، وَدَعْوَةَ المُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى»، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ الحُيَّضُ، فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَكَذَا وَكَذَا

324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப்போம். எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

வயது வந்த பெண்களும், திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும், மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

நூல் : புகாரி 324

சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வியும் கேட்டுள்ளனர். அதைப் பல ஆண்களும் பார்த்துள்ளனர்.

பார்க்க புகாரி 351, 979, 1250, 1953

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும், பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

صحيح البخاري

6228 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ، وَكَانَ الفَضْلُ رَجُلًا وَضِيئًا، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ، وَأَقْبَلَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَفِقَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَأَعْجَبَهُ حُسْنُهَا، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الفَضْلِ، فَعَدَلَ وَجْهَهُ عَنِ النَّظَرِ إِلَيْهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الحَجِّ عَلَى عِبَادِهِ، أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»

6228 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம் குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 6228

இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

இப்படி கேள்வி கேட்கும் பலர் தமது மனைவியரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ செல்கிறார்கள்.

தனது மனைவியர் மற்றும் குடும்பப் பெண்கள் கடைத்தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிக்கின்றனர்.

முறையாக ஆடை அணிந்து இவர்களின் குடும்பத்துப் பெண்கள் பள்ளிக் கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்கிறார்கள்.

சமுதாய நன்மைக்காகக் குரல் எழுப்பும் போது மட்டுமே இந்த வாதங்களை எழுப்புகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.