குழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா?
பதில்
ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 24:32
صحيح البخاري
5066 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
நூல் : புகாரி 5066
திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பது தவறாகும்.
அதே நேரத்தில் சிலருக்கு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. தன் வாழ்க்கைத் துணையின் இல்லறத் தேவையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலை இருந்தால் இத்தகையவர்கள் மட்டும் திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் திருமணம் செய்தால் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும்.
இது போல் கணவனை இழந்த பெண்கள் அல்லது விவாகரத்து செய்த பெண்கள் மறுமணம் செய்தால் அது குழந்தையைப் பாதிக்கும் என்று அஞ்சக் கூடிய நிலை ஏற்படலாம். அது போன்ற நிலையில் உள்ள பெண்கள் குழந்தயின் காரணமாக மறுமணத்தை தவிர்ப்பதும் தள்ளிப்போடுவதும் நபிவழியை மீறியதாக ஆகாது. அவர்கள் மறுமணம் செய்யாமல் குழந்தைக்காக தனித்து வாழலாம் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.
2276 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ السُّلَمِيُّ ، حَدَّثَنَا الْوَلِيدُ ، عَنْ أَبِي عَمْرٍو – يَعْنِي الْأَوْزَاعِيَّ – حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ امْرَأَةً قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً، وَثَدْيِي لَهُ سِقَاءً، وَحِجْرِي لَهُ حِوَاءً ، وَإِنَّ أَبَاهُ طَلَّقَنِي وَأَرَادَ أَنْ يَنْتَزِعَهُ مِنِّي. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي “.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனுக்கு என்னுடைய வயிறு பாத்திரமாகவும், என்னுடைய மார்பு தண்ணீர் பையாகவும், என்னுடைய மடி வசிப்பிடமாகவும் இருந்தது. அவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டார். இப்பொழுது என்னிடமிருந்து என் மகனைப் பறித்துக்கொள்ள முயல்கிறார் என்று சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ மறுமணம் செய்து கொள்ளாத வரை நீயே உன்னுடைய மகனுக்கு மிகவும் உரிமையுள்ளவன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல் : அபூதாவூத்
குழந்தையை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்காக ஒரு பெண் திருமணம் செய்யாலம் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் அனுமதித்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.