وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.
திருக்குர்ஆன் 2:4
முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் தவறாக புரிந்து வைத்திருக்கின்ற வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.இஸ்லாமியரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விஷமிகள் தவறாக பயன்படுத்தும் வசனமுமாகும் இது.முஸ்லிம்களின் தவறான விளக்கத்தை அடையாளம் காட்டுவதுடன் தவறாக பயன்படுத்தும் விஷமிகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
அல்குர்ஆனை நம்புவது போலவே முந்தைய வேதங்களையும் நம்புமாறு இவ்வசனம் நமக்கு போதிக்கிறது.முந்தைய வேதங்களை நம்புவது என்றால் முந்தைய வேதங்கள் யாவை என்பதையும் நாம் விளங்க வேண்டும். அவற்றை எப்படி நம்ப வேண்டும் என்பதையும் விளங்க வேண்டும்.
வேதங்கள் எத்தனை
மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத்,ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இஞ்சீல்,தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர் ஆகியவையே முந்தைய வேதங்கள் என்பது பலரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது.குர்ஆனையும் சேர்த்து வேதங்களின் மொத்த எண்ணிக்கை நான்கு தான் என குர்ஆனிலும் கூறப்படவில்லை.ஹதீஸ்களிலும் கூறப்படவில்லை.
மேற்கண்ட மூன்று நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டது போலவே ஏனைய நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டிருந்தன என்பதை திருக்குர்ஆனை ஆராயும் போது விளங்க முடிகிறது.
பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து இதை நாம் அறியலாம்.இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தை நாம் ஆராய வேண்டும்.
இறைத்தூதர்கள் எனப்படுவோர் இறைவனிடமிருந்து செய்திகளை பெற்று மக்களுக்கு அறிவிப்பவர்களாவர்.இதை அல்குர்ஆன் 5:99, 5:92, 16:35, 16:82, 29:18, 42:48, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இறைவனிடமிருந்து வந்த செய்திகளையே அவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் அவர்களுக்கு இறைச்செய்தி கிடைத்திருக்க வேண்டும்.இறைவனிடமிருந்து எந்த செய்தியையும் மக்களுக்கு அவர்கள் கொண்டு வராவிட்டால் இறைத்தூதர்கள் என்பதற்கு அர்த்தம் எதுவும் இருக்க முடியாது. அந்த இறை செய்திகளே வேதங்கள் எனப்படும்.
இந்த அடிப்படையில் இறைத்தூதர்கள் அனைவரும் இறைவனிடமிருந்து வழிகாட்டு நெறியை பெற்றனர்.அதை மக்களுக்கு அறிவித்தனர் என்பது தெளிவாகும்.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.
திருக்குர்ஆன் 14:4
உலகில் எத்தனையோ மொழி பேசுவோர் இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர். எந்த சமுதாயத்திற்கு ஒரு தூதர் அனுப்பப்படுவாரோ அந்த சமுதாய மக்களின் மொழியிலேயே அவர் இறை செய்தியை கொண்டு வருகிறார் என்று இந்த வசனம் கூறுகின்றது.முன்னர் குறிப்பிட்ட மூன்று மட்டும் தான் இறைவேதம் என்றால் எபிரேயு மொழியிலும் அரமாயிக் மொழியிலும் மட்டுமே வேதங்கள் வந்துள்ளன என்று ஆகும்.இந்த இரண்டு மொழிகளை தவிர இன்னும் ஏராளமான மொழிகள் உலகில் இருந்தன. அந்த மொழி பேசும் மக்களுக்கெல்லாம் இறைவனிடமிருந்து வழிகாட்டு நெறியோ,செய்திகளோ வரவில்லை என்பது இந்த வசனத்திற்கு முரணாகும்.இறைத்தூதர்கள் அனுப்பபடுவதன் நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்குகின்றது.எனவே நபி (ஸல்) காலத்துக்கு முன்பிருந்த எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்களும் வந்துள்ளனர்.அவர்களுக்கு வேதங்களும் அருளப்பட்டன என்பதே சரியாகும்.
மேலும் எல்லா இறைத்தூதர்கள்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதை தெளிவாகவும் இறைவன் குறிப்பிடுகிறான்.
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.
திருக்குர்ஆன் 2:213
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.
திருக்குர்ஆன் 57:25
எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்பதற்கு தெளிவான சான்றுகள் இவை.மனிதர்களுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து சரியான வழியை காட்ட அந்த நபிமார்களுடன் வேதங்களையும் சேர்த்தே அருளினான்.வெறும் கையுடன் எந்த தூதரும் வந்ததி்ல்லை.
மூஸா (அலை) அவர்களுக்கு தவ்ராத் எனும் வேதம் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.மூஸா (அலை) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது போலவே இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் வேதம் வழங்கப்பட்டதாக இறைவன் கூறுகிறான்.
இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.
திருக்குர்ஆன் 87:18,19
யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக!
திருக்குர்ஆன் 19:12
முன்னரும் பல வேதங்கள் அருளப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுவதுடன் மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது போல் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் வேதம் அருளப்பட்டு இருந்தது என்றும் தெளிவாக அறிவிக்கி்ன்றது.யஹ்யா (அலை) அவர்களுக்கும் வேதம் இருந்தது எனபதையும் அறிவிக்கின்றது. ‘முன்னர் அருளப்பட்ட வேதங்கள்’ எனும்போது அவை மொத்தமே மூன்று தான் என்று கூறுவது இந்த வசனங்களுக்கு முரணாகும். எத்தனை இறைத்தூதர்கள் வந்தனரோ அத்தனை வேதங்கள் இருந்தன என்பதே சரியாகும்.
இதில் மாற்றுக் கருத்துடையவர்களின் மழுப்பல்கள் சில உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.
அதாவது வேதங்கள் இரண்டு வகை. ஒன்று ஸுஹ்பு எனும் சிற்றேடுகள்,மற்றது கிதாப் எனும் பெரிய ஏடுகள் இந்த மூன்று நபிமார்களுக்கும் வழங்கப்பட்டது கிதாப் எனும் பெரிய ஏடுகள். மற்றவர்களுக்கு (இப்ராஹீம் நபி உடப்ட) வழங்கப்பட்டது ஸுஹுபு எனும் ஆகமங்கள்; என்று இவர்கள் கூறுகின்றனர்.இதற்கு சான்றாக 87:18,19 வசனங்களில் ‘ஸுஹுபு’ எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளதைக் காட்டுகி்ன்றனர்.
இவர்களின் இந்த விளக்கம் குர்ஆன் ஹதீஸ் வழக்கிற்கும் அரபு அகராதிகளுக்கும் முரணாகும். ‘கிதாப் என்றால் பெரிய புத்தகங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது.எழுதப்பட்ட எதனையும் கிதாப் என்று கூறலாம்.கிதாப் என்றாலே எழுதப்பட்டது என்பது தான் பொருளாகும்.
சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு அரசிக்கு கடிதம் எழுதி,இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அந்த கடிதம் அப்பெண்ணைச் சேர்ந்த போது
“பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கிதாப் (கடிதம்) போடப்பட்டுள்ளது” என்று அவள் கூறினாள்.
திருக்குர்ஆன் 27:29
இதன் மூலம் ‘கிதாப்’ என்பதை ஒரு தாளில் எழுதப்பட்ட கடிதத்துக்கும் கூட குறிப்பிடலாம் என அறிகிறோம்.மேலும் முன்னர் நாம் எழுதிய வசனங்களில் ஏனைய நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டதாக குறிப்பிடும் இடங்களில் ‘கிதாப்’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிதாப் என்பது பெரிய நூல்,ஸுஹுப் என்பது சிறிய நூல் என்ற வாதம் அடிபட்டுப் போவதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் திருக்குர்ஆனை முஸ்ஹப் என்று குறிப்பிடும் வழக்கம் நபித்தோழர்கள் காலம் முதல் இருந்து வருகின்றது. இந்த வார்த்தை ஸுஹுப் என்பதிலிருந்து பிறந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ” இவர் தூய்மையான ஸுஹுபை ஓதுகிறார்.அதில் உறுதியான பல கிதாப்கள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான்.(அல்பய்யினா அத்தியாயம் )
திருக்குர்ஆனை ஸுஹுபு என கூறும் இறைவன் அதிலுள்ள அத்தியாயங்களை கிதாப் எனக் குறிபிடுகிறான்.இந்த வசனத்தினடிப்படையில் கூறுவதாக இருந்தால் ஸுஹுப் என்பது பெரிய ஏடுகள்,கிதாப் என்பது சிறிய ஏடுகள் என்று தான் கூற வேண்டும். எனவே மூவரைத் தவிர ஏனைய நபிமார்களுக்கு ஸுஹுப் எனும் சிற்றேடுகள் வழங்கப்பட்டன என கூறுவது தவறான வாதம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சுருங்க சொல்வதென்றால் பெரிய வேதங்களானாலும் சிறிய வேதங்களானாலும் அதை கிதாப் என்றும் கூறலாம்;ஸுஹுப் என்றும் கூறலாம்.ஆகவே அனைத்து நபிமார்களுக்கும் வேதம் வழங்கப்பட்டதில் எந்த ஐயமும் இல்லை.
பல நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்த போதும் 25 நபிமார்கள் பெயர்கள் மட்டும் குர்ஆனில் கூறப்படுவது போலவே பல வேதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே குர்ஆனில் கூறப்படுகின்றன.பெயர் குறிப்பிடப்படும் முந்தைய வேதங்கள் மூன்று தான். ஆனால் பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பல வேதங்களை இறைவன் அருளினான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.முந்தைய வேதங்களை நம்புதல் என்பதன் சரியான பொருள் இது தான்.
எப்படி நம்ப வேண்டும்?
முந்தைய வேதங்களை எவ்வாறு நம்புவது என்பதை பல முஸ்லிம்கள் அறியாததால் இந்த வசனத்தை கிறித்தவர்கள் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் அவர்கள் எவ்வாறு முஸ்லிம்களைக் குழப்புகின்றனர் என்பதை நாம் விரிவாக அறிய வேண்டும்.
மேலே கண்ட 2:4 வசனம் முந்தைய வேதங்களை நம்புமாறு கூறுகிறது.வேதமுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின் வசனங்களை ஓதி வருகின்றனர். (3:113) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.இஞ்சீல் வேதத்தையுடையவர்கள் அல்லாஹ் அருளிய வேதத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கட்டும் (5:47) எனவும் குர்ஆன் கூறுகிறது. இதுபோல் முந்தைய வேதங்கள் பற்றி அநேக வசனங்கள் கூறுகின்றன. குர்ஆனே முந்தைய வேதங்களை நம்ப சொல்வதால் எங்களது பைபிலையும் நம்புங்கள்! பைபில் கூறும் கொள்கையின் பால் வாருங்கள்! என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறது கிறித்தவ திருச்சபை.
முந்தைய வேதங்களை குர்ஆன் நம்ப சொல்கிறது என்பது உண்மை தான்.எப்படி நம்ப வேண்டுமென்பதையும் அல்குர்ஆன் நமக்கு சொல்லித்தர தவறவில்லை.
முந்தைய வேத்திற்குரியவர்கள் தங்கள் வேதங்களில் சொந்தச்சரக்குகளை திணித்தார்கள்.தங்களது சொந்த இலாபத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வசனங்களை நீக்கினார்கள். அடித்தல், திருத்தல், கூட்டல், குறைத்தல் ஆகிய மாறுதல்களுக்கு முந்தைய வேதங்கள் இலக்காயின. (பார்க்க 2:75, 5:41, 5:13) என்பதையும் அல்குர்ஆன் சொல்கிறது.
முந்தைய சமுதாயத்திற்கு வேதங்கள் அருளப்பட்டன என்பதை நம்புவதுடன் அவற்றில் மனிதக்கரங்கள் தாராளமாகவே விளையாடின என்பதையும் நாம் நம்ப வேண்டும். அதாவது முந்தைய வேதக்காரர்களிடம் இருப்பது கலப்படங்கள்.அவற்றில் இறைவனின் சில உண்மையான வசனங்கள் இருக்கக்கூடும் என்றாலும் எவை இறைவனின் வார்த்தைகள்? எவை மனிதக கற்பனையில் தோன்றியவை என்பதைக் கண்டு கொள்ள இயலாத விதத்தில் இரண்டும் இரண்டறக் கலந்துள்ளன எனவும் நாம் நம்ப வேண்டும்.முன்னரும் வேதங்கள் அருளப்பட்டன என்று விசுவாசம் மட்டும் தான் கொள்ள முடியுமே தவிர அவர்களிடம் இருப்பவை அனைத்தும் வேதம் தான் என்று நம்பவோ அதில் கூறப்படுவதற்கேற்ப செயல்படவோ அனுமதியில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
கூடுதல், குறைவு செய்தார்கள் என்பது மட்டுமன்றி முழுக்க முழுக்க மனிதக் கற்பனைகளால் எழுதி வைத்தவைகளையும் வேதங்கள் என்று முந்தைய வேதக்கார்கள் அறிமுகமும் செய்தனர்.
தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.
திருக்குர்ஆன் 2:79
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர்.
திருக்குர்ஆன் 3:78
இவர்கள் சுயமாகவே வேதங்களை தயாரித்துக்கொண்டார்கள் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.இவ்வாறு தான் முந்தைய வேதங்களைப் பற்றி முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.
இறைவனிடமிருந்து பல சமுதாயங்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.அவை அணைத்தும் அதைக் கொண்டு வந்த நபிமார்களின் காலங்களில் முழு உண்மையாகவே இருந்தன.ஆனாலும் வேதங்களை முழுமையாக ஒழித்து விட்டு மனிதக் கற்பனைகளை வேதம் என்று நம்பியவர்களும் இருந்தனர்.நபிமார்கள் கொண்டு வந்த வேதத்துடன் சிலவற்றை சேர்த்து சிலவற்றை நீக்கியவர்களும் இருந்தனர்; என்று நம்புவதே முந்தைய வேதங்களை நம்புவது என்பதன் சரியான பொருளாகும்.தவ்ராத்தோ,இஞ்சீலோ அது இறக்கப்பட்ட விதமாக அப்படியே இன்று உலகில் கிடையாது. கிறித்தவர்கள் இஞ்சீலை விசுவாசியுங்கள் என்று கூறப்படும் வசனங்களை காட்டி தங்கள் பைபிலை இஞ்சீல் என்று ஏமாற்றுவதற்கு இந்த வசனத்தில் எந்த சான்றும் கிடையாது.
(இது குறித்து கூடுதலான விபரங்களை அறிய விரும்புவோர் இது தான் பைபில் என்ற எமது வெளியீட்டை பார்வையிடுக.