யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா?

கேள்வி:

குழந்தை வயிற்றில் இருக்கும் பத்து மாதமும் யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ?

அன்ஆம் அத்தியாயம் ஓதினால் நாம் நினைத்த நாட்டங்கள் நிறைவேறும் என்கிறார்களே அது உண்மை தானா?

சித்தி லைலா

பதில்:

குழந்தை வயிற்றில் இருக்கும் போது பத்து மாதமும் யூசுஃப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாகப் பிறக்கும் என்று நம்புவதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை.

யூசுஃப் நபி பேரழகுடையவராக இருந்தார் என்று ஹதீஸ்கள் உள்ளன. அவரைப் பற்றிக் கூறும் அத்தியாயத்தை ஓதினால் குழந்தை அழகாகப் பிறக்கும் என்று முடிவு செய்வது மடமையாகும்.

மேலும் அல்அன்ஆம் அத்தியாயத்தை ஓதினால் நமது நாட்டங்கள் நிறைவேறும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இது மட்டுமல்லாமல் ஜின் அத்தியாயத்தை ஓதினால் ஜின்னை வசப்படுத்தலாம் என்றும் சிலர் உளறி வருகின்றனர்.

ஜின்களைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் அந்த அத்தியாயத்துக்கு ஜின் என்று பெயர். ஜின்களை வசப்படுத்தலாம் என்பதற்காக இந்த அத்தியாயம் அருளப்படவில்லை. இந்த அத்தியாயத்தைச் சிந்தித்தால் ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியாது என்று தான் முடிவு செய்ய இயலும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிய போது அதை ஜின்கள் செவியுற்றனர். ஆனால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் வஹீ மூலம் இதை அறிவித்த பிறகுதான் அறிந்தனர் என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டது” என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:1

இந்த அத்தியாயத்தின் முதல் வசனமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஜின்கள் தனிப்படைப்பு. மனிதர்களின் பார்வையில் பட மாட்டார்கள். அருகில் அமர்ந்து நாம் ஓதுவதை அவர்கள் கேட்டாலும் அதை நாம் அறிந்து கொள்ள முடியாது எனும் போது ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்?

ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்றால் மனிதனை விட ஜின்கள் பலவீனமாக இருக்க வேண்டும். ஆனால் மனிதர்களை விட அதிக ஆற்றல் ஜின்களுக்கு உள்ளன என்று இதே அத்தியாயம் கூறுகிறது.

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

எவ்வித சாதனங்களும் இல்லாமல் வானுலகம் வரை செல்லும் ஆற்றல் ஜின்களுக்கு உள்ளன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே நாம் வசப்படுத்தும் அளவுக்கு ஜின்கள் பலவீனமாக இல்லை.

நாஸ் என்றால் மனிதர்கள் என்று பொருள். இந்தப் பெயரில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் உள்ளது.

இதை ஓதினால் மனிதர்களை வசப்படுத்த முடியும் என்று சொல்வார்களா?

மாடு எனும் பொருள் கொண்ட பகரா அத்தியாயத்தை ஓதிகொண்டே இருந்தால் மாட்டை வசப்படுத்திவிட முடியுமா?

தேனீ, எறும்பு, சிலந்தி, யானை ஆகிய பெயர்களைக் கொண்ட அத்தியாயங்கள் உள்ளன. இந்த அத்தியாயங்களை ஓதி தேனீக்களையும், எறும்புகளையும், சிலந்திகளையும், யானைகளையும் வசப்படுத்தலாம் என்று சொல்வார்களா?

இது போன்று சொல்லப்படும் அனைத்தும் கட்டுக் கதைகளாகத் தான் உள்ளன.