இறைவன் கூறும் ஸலவாத் என்றால் என்ன?
பி. ஜைனுல் ஆபிதீன்
இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.
இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்!
திருக்குர்ஆன் 33:56
இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்.
இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.
1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.
2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.
இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.
இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.
ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித்தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.
இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.
இறைவா! இப்ராஹீம் நபிக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.
நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த – தொழுகையில் நாம் ஓதி வருகின்ற – ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.
நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.
இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.
நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.
அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால் – இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.
இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?
அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?
அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?
என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.
அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?
ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
- பிறருக்காக அருள் வேண்டுதல்.
- பிறருக்கு அருள் புரிதல்.
என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.
இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.
இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.
இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.
நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.
இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:43
இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56 வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.
இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.
இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.
பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.