லைலத்துல் கத்ர் இரவில் முழுக் குர்ஆனும் அருளப்பட்டதா?

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.

திருக்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

திருக்குர்ஆன் 17:106

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

திருக்குர்ஆன் 25:32

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

திருக்குர்ஆன் 97:1

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!

திருக்குர்ஆன் 96:1

என்ற வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.