நேர்வழி ஒன்றா பல வழிகளா?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நேர்வழியைப் பற்றிக் கூறும் போது ஒன்று என்று தான் கூறப்படுகின்றது. ஆனால் 29:69 ம் வசனத்தில் வழிகள் என பன்மையாக அல்லாஹ் கூறுகின்றானே? இதற்கான விளக்கத்தைத் தரவும்.

ஜினான்

பதில்

நேர்வழி என்பது ஒரே வழி தான். பல வழிகள் கிடையாது. இதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக அறிவிக்கின்றன. சில இடங்களில் வழிகள் என்று பன்மையாகக் கூறப்படுவதில் குழப்பம் அடையத் தேவை இல்லை.

எல்லா மொழிகளிலும் சொற்கள் பேரினம் சிற்றினம் என இரு வகைகளில் உள்ளன.

உதாரணமாக உயிரினம் என்பது பேரினம். ஆடு மாடு என்பன போன்றவை சிற்றினம்.

அதாவது உயிரினம் என்பது அதனுள் அடங்கியுள்ள ஆடு மாடு மனிதன் போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளதால் அது பேரினம் எனப்படுகிறது. ஆடு மாடு போன்ற சொற்கள் ஒரு இனத்தை மட்டும் குறிப்பதால் அவை சிற்றினம் எனப்படுகிறது.

பேரினமாக உள்ள சொற்களை ஒருமையாகவும் சொல்லலாம். பன்மையாகவும் சொல்லலாம். உயிரினம் என்றாலும் அனைத்து உயிரினங்களையும் எடுத்துக் கொள்ளும். உயிரினங்கள் என்றாலும் அனைத்து உயிரினத்தையும் எடுத்துக் கொள்ளும்.

சொல்லைக் கவனத்தில் கொண்டால் ஒருமையாகச் சொல்லலாம். அதனுள் பல இனங்கள் அடங்கியுள்ளதைக் கவனத்தில் கொண்டால் பன்மையாகச் சொல்லலாம். பன்மையாக சொல்லும் போது பல சிற்றினங்கள் அதனுள் உள்ளன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நகை என்றும் சொன்னாலும் நகைகள் என்று சொன்னாலும் ஒன்று தான்.

நகை என்பது சொல்லைக் கவனித்தும், நகைகள் என்பது அதனுள் அடங்கியுள்ள வளையல் செயின் மோதிரம் உள்ளிட்ட பலவகைகளைக் கவனித்தும் சொல்லப்பட்ட்டுள்ளது.

பரிசு வழங்கப்படும்; பரிசுகள் வழங்கப்படும் என்பது போல் ஏராளமான சொற்கள் இப்படி எல்லா மொழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சொர்க்கம் சொர்க்கங்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் பயனப்டுத்தப்பட்டுள்ளதையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

வஹீ மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையில் இஸ்லாம் என்பது ஒரு வழிதான்.

ஆனால் அதற்குள் தொழுகை, நோன்பு, கொள்கை, சட்டதிட்டங்கள் எனப் பல உட்பிரிவுகள் உள்ளதால் அதைக் கவனத்தில் கொள்ளும் போது நேர்வழிகள் என்றும் சொல்லலாம். இது எல்லா மொழிகளிலும் உள்ள சாதாரணமான நடைமுறை தான்.