குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய குர்ஆன் வசனத்தை வேறு சந்தர்ப்பத்தில் ஆதாரமாக எடுக்கலாமா?

சமீர் அஹ்மது

பதில்:

திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு அவை இறங்கிய பின்னணியும், வரலாறும் இருக்கின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கின. ஆனால் அந்த வசனத்தில் கூறப்படும் சட்டத்தை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

அப்படி கடைப்பிடிப்பதற்குத் தான் குர்ஆன் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் இது குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியது என்று கூறி அதன் பொதுவான கருத்தை மறுத்தால் குர்ஆன் முழுவதையும் இவ்வாறு கூறி மறுத்துவிட முடியும். இதனால் குர்ஆனையே புறக்கணித்து வாழ்கின்ற நிலையே ஏற்படும்.

அவதூறு சொன்னவர்களுக்கு கசையடி கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொன்னவர்கள் விஷயத்தில் தான் இறங்கியது. இதனால் இன்றைக்கு இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் ஒருவர் ஒரு பெண் மீது அபாண்டமாக அவதூறு சொன்னால் அவருக்கு இந்தத் தண்டனையை நிறைவேற்றுவது கூடாது என்று கூறுவது சரியாகுமா?

ஒருவர் மீது விபச்சாரக் குற்றத்தைச் சுமத்துவதாக இருந்தால் அதற்கு நான்கு சாட்சிகள் அவசியம். ஆனால் தம் மனைவி வேறு ஒருவனுடன் விபச்சாரம் செய்வதை கணவன் மட்டுமே காணுகிறான் என்றால் அவன் ஒருவன் மட்டுமே அவள் மீது குற்றம் சாட்ட முடியும். நான்கு சாட்சி இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டம் ஷரீக் பின் சஹ்மா என்ற நபித்தோழர் விஷயத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் இறங்கியது (புகாரி : 4747). எனவே தற்போது இந்தச் சட்டம் (லிஆன்) இல்லை என்று கூற முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணிக்கின்றார். அவருக்காக பாவமன்னிப்புத் தேடப் போவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இறைவன் இஸ்லாத்தை ஏற்காமல் மரணித்தவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடக் கூடாது என்ற தடை விதிக்கின்றான் (புகாரி : 4675).

எனவே இந்தச் சட்டம் குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கியதால் இஸ்லாத்தை ஏற்காமல் மரணிப்பவர்களுக்கு இன்றைக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்று கூறலாமா? இது போன்று ஏராளமான கேள்விகளைக் கேட்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய வசனத்தில் கூறப்படும் சட்டத்தை வேறு இடங்களில் பொறுத்தவே கூடாது என முழுவதுமாக மறுத்துவிடக் கூடாது.

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்ட வசனம் அந்தச் சூழ்நிலைக்கு மட்டுமே உரியது என்பது உறுதியானால் அதை பொதுவானதாக ஆக்கக் கூடாது.

அப்படி இல்லாமல் இருந்தால் அந்த வசனத்தின் கருத்து எங்கெல்லாம் பொருந்துமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாம்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

மேற்கண்ட வசனம் உஹதுப் போரில் நபியவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது இறங்கியது. முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தில் தான் இருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் மரணிப்பவர் தான் என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்கள் மரணிக்கவில்லை என உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் தவறாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மேற்கண்ட வசனத்தை எடுத்துக் காட்டி நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள் (புகாரி : 1242)

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு சூழ்நிலையில் இறங்கிய வசனத்தை அதற்குப் பொருத்தமான வேறு ஒரு இடம் வரும் போது அங்கே பயன்படுத்தியதால் மக்களைச் சரியான நம்பிக்கையின் பக்கம் கொண்டுவர முடிந்தது. இதைப் போன்று நாமும் நபியவர்கள் காலத்தில் இறங்கிய குர்ஆன் வசனங்களை இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சுட்டிக் காட்டினால் தான் மக்கள் சரியான பாதைக்கு வர முடியும்.