தூண்களையுடைய வானமா? தூண்களில்லாத வானமா?
திருக்குர்ஆனின் 31:10 வசனத்துக்கு பீஜேயும் அன்ஸாருஸ்ஸுன்னாவும் முரண்பட்டவாறு மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.
இது அன்ஸாருஸ்ஸுன்னா ஆதரிக்கும் இக்பால் மதனியின் தமிழாக்கம்.
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.
இது பீஜேயின் தமிழாக்கம். இது தான் சரியான தமிழாக்கம்.
இஸ்மாயீல் ஸலஃபி கூட்டத்தினர் இக்பால் மதனியின் தமிழாக்கமே சரி என்று வாதிடுகின்றனர். பீஜேயின் தமிழாக்கம் தவறு என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவ்வசனம் குறித்து பேசும் போது இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் இருந்து கிடைக்கும் கருத்தைத் தான் பேச வேண்டும்.
அதாவது வானத்துக்கு தூண்கள் இல்லை. தூண்கள் இல்லாமல் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள் என்ற இக்பால் மதனியின் மொழிபெயர்ப்பின் படி இதில் எந்த அறிவியல் உண்மைகளும் இல்லை.
பீஜேயின் மொழி பெயரப்பின் படி நீங்கள் பார்க்காத தூண்கள் வானத்துக்கு உள்ளன அதாவது பூமிக்கும் வானத்துக்கும் இடையே அவ்விரண்டையும் இழுத்துப் பிடிக்கும் ஈர்ப்பாற்றல் உள்ளது. சூரியனின் கட்டுப்பாட்டிலிருந்து பூமி விலகி விடாமல் இருக்க உதவும் அந்த ஈர்ப்பாற்றல் தான் தூண் எனப்படுகிறது. இதை நாம் காண முடியாது என்ற கருத்து கிடைக்கும்.
இக்பால் மதனியின் தமிழாக்கத்தின் படி பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை உள்ளது என்று எப்படி நிறுவ முடியும்?
வானத்துக்கும், பூமிக்கும் தூண்கள் இல்லை என்று கூறும் போது சாதாரண பாமரன் பேசுவது போன்ற கருத்து தான் இதில் உள்ளது.
பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தின் விளக்க குறிப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
-
வானத்திற்கும் தூண்கள் உண்டு
இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் படைத்தான் எனக் கூறப்படுகிறது. “வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது” என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவி யிருப்பது தான் காரணம்.
உதாரணமாக நாம் வாழ்கின்ற பூமி, மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றுகிறது. அதே சமயம் சூரியனை, மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது.
இவ்வளவு வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் பூமி சுற்றும் பொழுது அதை ஈர்த்துப் பிடிக்கக் கூடிய ஒரு சக்தி இல்லாவிட்டால் தனது நீள்வட்டப் பாதையிலிருந்து இப்பூமி தூக்கி வீசப்பட்டு விடும்.
பூமியின் எடை (நிறை) 6,000,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.
இந்த வேகத்தில் சுற்றுகின்ற, இவ்வளவு பாரமான ஒரு பொருளை அதன் பாதையை விட்டு விலகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஐந்து மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு லட்சம் கோடி உருக்குக் கம்பிகளாலான தூண்களைக் கொண்டு பூமியிலிருந்து சூரியனை இணைக்க வேண்டும். அந்தத் தூண்கள் இல்லாமலேயே பூமி, தனது பாதையிலிருந்து விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம்.
இந்த அறிவியல் உண்மையைத் தான், “நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்கும் காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே 17வது நூற்றாண்டில் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை, ஆயிரத்து நூறு (1,100) ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் “பார்க்கின்ற தூண்களின்றி’ என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் “பார்க்கின்ற தூண்களின்றி’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.
இவ்வாறு பீஜே இவ்வசனத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தில் உள்ளது என்று இஸ்மாயீல் சலபி உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
தூண்கள் இல்லவே இல்லை என்பதும் கண்ணுக்குத் தெரியாத தூண்கள் உள்ளன என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அர்த்தங்கள்.
இக்பால் மதனியின் தமிழாக்கம் தான் சரி என்ற கருத்தில் உள்ள இஸ்மாயில் சலபி அந்தத் தமிழாக்கத்தில் இல்லாத கருத்தை அதில் இருப்பதாகக் காட்டுவது மோசடி இல்லையா?
எனது தமிழாக்கம் தான் சரி என்ற அடிப்படையில் இவ்வாறு எழுதி இருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் இக்பால் மதனி இந்த வசனத்துக்கு சம்மந்தமில்லாமல் தவறாக மொழிபெயர்த்து விட்டார் என்று அறிவிக்க வேண்டுமல்லவா? இது வரை அறிவிக்காவிட்டாலும் இனியாவது பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?
இந்த இரட்டை நிலை ஏன்?
உங்கள் தமிழாக்கத்தின் படி என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தானே நீங்கள் வாதிட வேண்டும்.
திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள் உள்ளன என்று கட்டுரை எழுதும் போது பீஜேயின் தமிழாக்கத்தை அடிப்படையாக வைத்து வாதிடுவதும், மற்ற நேரங்களில் பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று பிரச்சாரம் செய்வதும் அறிவு நாணயமான செயலா?
இந்தக் கேள்வி கேட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் பதில் வரவில்லை.