உயிரோடு உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேசுவார்கள் என்று 6:111 வசனம் சொல்கிறதா?

பதில்

6:111 வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அந்த வசனம் இதற்கு நேர் முரணான பொருளைத் தான் உள்ளடக்கியுள்ளது என்பதை அறியலாம்.

அந்த வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பையும், அரபு மூலத்தையும்  கீழே காண்க!

وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ ﴿111﴾

அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண்முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

திருக்குர்ஆன் 6:111

ஒரு காரியம் நடக்காது என்பதை உறுதிபட நாம் சொல்லும் போது நடக்க முடியாத மற்றொரு உதாரணத்தை மேற்கோளாகக் காட்டி பேசுவோம். அது போல் தான் இவ்வசனம் அமைந்துள்ளது.

ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் இவன் ஜெயிக்க மாட்டான் என்று நாம் கூறினால் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் என்றா நாம் புரிந்து கொள்வோம்?

ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைவது எப்படி சாத்தியமில்லையோ அது போல் இவன் ஜெயிப்பதும் சாத்தியமில்லை என்றே புரிந்து கொள்வோம்.

மனிதர்கள் காணும் வகையில் அல்லாஹ் வானவர்களை இறக்க மாட்டான். நடக்க முடியாத இந்த நிகழ்வு நடந்தாலும் இவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தில் தான் இவ்வசனம் சொல்லப்பட்டுள்ளது.

உயிருடன் உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேச மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு பேச வைத்தாலும் இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது.

உயிருடன் உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேச மாட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இது நடக்கவே நடக்காது. ஒரு பேச்சுக்கு நடக்க முடியாத இந்த நிகழ்வு நடந்தால் கூட இவர்கள் ஈமான் கொள்வது நடக்காது என்பது இதன் ஒட்டு மொத்த கருத்தாகும்

அரபு மொழியில் لَوْ லவ் எனும் சொல் நடக்க சாத்தியமில்லாதவைகளைச் சுட்டிக்காட்டுவதற்கே பயன்படுத்தப்படும்.

அந்தச் சொல் தான் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 4:82 வசனத்தைப் பாருங்கள்!

இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதிலும் லவ் لَوْ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து குர்ஆன் வந்துள்ளது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

அது போல் 21:22 வசனத்தைப் பாருங்கள்! இதிலும் லவ் لَوْ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வானத்திலும், பூமியிலும் அல்லாஹ் அல்லாத தெய்வங்கள் இருந்திருந்தால் வானமும் பூமியும் சீர் கெட்டிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இருக்கலாம் என்ற கருத்தை இது தராது. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்தையே தரும்.

லவ் لَوْ என்ற சொல்லைக் கொண்டு பேசும் இடங்களில் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்து அடங்கியிருக்கும்.

இறந்தவர்கள் பேசுவார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்தில் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனம் அமைந்துள்ளது