நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியுமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கவுரை, நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர் இது.)

48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152&312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன்: 29:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தால் பாதம் தரையில் படாது!

அவர்களின் நிழல் தரையில் படாது!

இருளில் நடந்து சென்றால் வீதியெங்கும் வெளிச்சம் பரவும்!

என்றெல்லாம் கட்டுக்கதைகளைக் கூறி சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதைக் (?) காண்கிறோம். அன்பின் மேலீட்டால் இவர்கள் இப்படிச் செய்தாலும் இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. உண்மையான வரலாறுகளின் அடிப்படையில் தான் புகழவேண்டும்.

யார் என்னைப் பற்றி ஒரு செய்தியைப் பொய்யாகக் கூறுகிறாரோ அவர் சென்றடையும் இடம் நரகம் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்து விட்டனர்.

அறியாத மக்கள் இத்தகைய கட்டுக்கதைகளின்  மூலம் நபிகள் நாயகத்துக்குச் சிறப்புச் சேர்க்க முயல்வது போல் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியும்” என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர் என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள். இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவை தானா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.

படிப்பறிவின்மை பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் அவர்களின் படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும். அவர்கள் எழுதவோ படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் விரும்பி ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.

எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையில் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும் என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கிய காரணமாக இருந்தது.

இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். எழுதத் தெரிந்திருந்தால் “வீனர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்” என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.

எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது சிறப்பானது தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நபிகள் நாயகத்துக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பது தான் சிறப்பு. இதனால் இறைத்தூதர் என்ற சிறப்பு – உழைப்பால் எவரும் அடைய முடியாத சிறப்பு – அவர்களுக்குக் கிடைக்கிறது.

இதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று கூறுபவர்கள் வேறு சில வாதங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது பல இடங்களில் “கிதாப்’ என்றே கூறப்படுகிறது. பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் “இந்த கிதாபில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. இப்படி பல இடங்களில் கிதாப் என்றே குர்ஆன் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிதாப் என்பது கதப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. கதப என்றால் எழுதினான் என்று பொருள். கிதாப் என்றால் எழுதப்பட்டது – நூல் என்பது பொருள். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்பதை கிதாப் என்ற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து அறியலாம். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்றால் யாருக்கு அது வழங்கப்பட்டதோ அவருக்கு வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக வாசிக்கத் தெரியும் என்பது இவர்களது வாதம்.

இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கதப என்ற வார்த்தைக்கு எழுதினான் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் வேறு அர்த்தங்களிலும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திருக்குர்ஆனிலேயே ஆதாரங்கள் உள்ளன.

புத்தக வடிவமாகத் தயாரிக்கப்பட்டதை கிதாப் என்று கூறலாம் என்பது உண்மையே. அதை மட்டும் தான் கிதாப் என்று கூற வேண்டும் என்பது தவறாகும்.

நுôல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காக ஒருவர் மற்றவருக்கு (டிக்டேட்) கூறும் செய்திகளையும் கிதாப் எனக் கூறலாம். இனிமேல் அதற்கு எழுத்து வடிவம் கிடைக்கவுள்ளதே இதற்குக் காரணம்.

அது போல் எழுதப்பட்டதிலிருந்து மனனம் செய்து ஓதிக் காட்டினால் அதையும் கூட கிதாப் என்று கூறலாம்.

எதை நூலாக எழுத வேண்டும் என்று நாம் மனதில் தீர்மானித்திருக்கிறோமோ அதையும் கூட கிதாப் என்று கூறலாம். ஒரு நூலை எழுதுவதாக முடிவு செய்து கொண்டு எழுத ஆரம்பிப்போம். “இந்த நூல் இத்தகைய தன்மையில் அமைந்துள்ளது” என்று ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிடுவோம். நூல் முழுமையாக எழுதப்படுவதற்கு முன்பு முன்னுரையிலேயே இந்த நூல் என்ற குறிப்பிடுவது ஏன்? நூல் நமது மூளையில் வடிவம் பெற்று விட்டது. விரைவில் எழுத்து வடிவத்துக்கு வரவுள்ளது என்ற அடிப்படையில் இவ்வாறு கூறுவோம்.

அரபு மொழியில் மட்டும் இல்லாமல் எல்லா மொழிகளிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகம் சர்வ சாதனம்.

“சட்டை தைக்க வேண்டும்’ என்று கூறுவோம். துணியைத் தான் சட்டையாகத் தைக்க வேண்டும். இனிமேல் அது சட்டையாக ஆகப் போவதால் துணியையே சட்டை எனக் கூறுவோம். சோறு ஆக்க வேண்டும், டீ போட வேண்டும் என்பது போல் ஏராளமாக இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளன.

இனி மேல் கிடைக்கவுள்ள வடிவத்தைக் கவனத்தில் கொண்டு அந்த வடிவம் கிடைப்பதற்கு முன்பே அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எல்லா மொழிகளிலும் சகஜமாகவுள்ளது.

எனவே கிதாப் என்ற வார்த்தைக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்கள் உள்ளன என்பதால் எந்த அர்த்தம் செய்வது பொருத்தமானது என்பதை ஆய்வு செய்து தான் முடிவுக்கு வரவேண்டும்.

இந்த நான்கு அர்த்தங்களில் நிச்சயமாக முதலாவது அர்த்தம் செய்யவே முடியாது. எழுதப்பட்ட வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்று திருக்குர்ஆன் பல இடங்களில் திட்டவட்டமாக அறிவிப்பதால் மற்ற மூன்று அர்த்தங்களில் ஒன்றைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர முதல் அர்த்தத்தை நிச்சயமாகக் கொள்ள முடியாது. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

ஏட்டில் எழுதப்பட்ட கிதாபை உம் மீது நாம் இறக்கியிருந்தால் அதையும் தமது கரங்களால் தீண்டியிருப்பார்கள். இது வெளிப்படையான சூனியம் தவிர வேறில்லை எனவும் கூறியிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 6:7

ஏட்டில் எழுதப்பட்ட நூலை நாம் இறக்கியிருந்தால் அதையும் இவர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள் என்ற சொற்றொடர் குர்ஆன் எழுதப்பட்டதாக அருளப்படவில்லை என்பதை சந்தே கத்திற்கு இடமின்றி அறிவிக்கிறது.

வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு நூலை நீர் இறக்கிவிட வேண்டும் என்று வேதமுடையவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் மூஸாவிடம் இதை விடப் பெரிய ஒன்றைக் கேட்டனர். அல்லாஹ்வை நேருக்கு நேராக எங்களுக்குக் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டனர்.

திருக்குர்ஆன் 4:153

எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும். அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம். இறைவனை நேருக்கு நேர் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டது போன்ற நடக்காத காரியம் எனவும் இவ்வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக அருளப்படவில்லை என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.

97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் அனுமதியின்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில்152 இறக்கினார்.492 “இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:97

இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டிருந்தால் இவ்வாறு கூறப்பட்டிருக்காது. ஜிப்ரீல் ஒதிக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் பதியவைத்துக் கொண்டார்களே தவிர எழுத்து வடிவில் பெற்று சேகரித்துக் கொள்ளவில்லை.

192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.

193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26&492

திருக்குர்ஆன் 26:192

இறைவனிடமிருந்து ஜிப்ரீல் எனும் வானவர் இச்செய்தியைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் போட்டார் என்று திட்டவட்டமாக இவ்வசனமும் கூறுகிறது.

ஏட்டில் எழுதிக் கொண்டு வந்து கையில் கொடுத்தார் எனக் கூறப்படவில்லை.

6. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152

17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.

18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152

19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர்ஆன் 75:16-19

ஜிப்ரீல் எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மளனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரில் போன பிறகு எழுத்தைப் பார்த்து மீண்டும் வாசித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும். எழுத்து வடிவில் இல்லாததால் தான் மறந்து விடுமோ என்று பயந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாவை வேகவேகமாக அசைக்கிறார்கள். அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. இதயத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை என்று இறைவன் பொறுப்பேற்கிறான்.

எழுத்து வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.

6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26

திருக்குர்ஆன் 87:6, 7

நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் தேவையில்லை என்பதும் உணரப்படுகிறது.

எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டாததால் அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும் என்பதும் அடிப்பட்டுப் போகிறது.

நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதை திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 7:157,158

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை “உம்மீ’ என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்ட சமுதாயத்தை உம்மீகள் என்று பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகத்தையும் “உம்மீ’  என்று கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் சரியான சான்றாக உள்ளது.

4. “இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.

5. “இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312 காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது” எனவும் கூறுகின்றனர்.142

திருக்குர்ஆன் 25:4, 5

இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) இட்டுக் கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவராக எழுதிக் கொண்டார் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால் தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பதற்கு இதுவும் பலமான சான்றாகவுள்ளது.

“கதப’ என்றால் எழுதினான் என்பது பொருள். இக்ததப என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் இக்ததப என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.

(தமிழாக்கம் செய்த சிலர் இதைக் கவனிக்காமல் எழுதினார், எழுதிக் கொண்டார் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது தவறான மொழி பெயர்ப்பாகும். பிறருக்குச் சொல்லி எழுதச் செய்கிறார் என்பது தான் இதன் சரியான மொழி பெயர்ப்பாகும்.)

இவை அனைத்துக்கும் மேலாக சென்ற இதழின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய 29:48 வசனம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னரும் எந்த நூலிலிருந்தும் நீர் வாசித்ததில்லை. இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.

உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். வலாதாஹுத்து என்பது வருங்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.

நபியாக ஆவதற்கு முன்பும் நீர் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் நபியாக ஆன பின்பு எழுதப் படிக்க அறிந்திருக்கக்கூடும் அல்லவா? என்று சிலர் வாதம் செய்வதும் தவறு என்பதை இவ்வாசக அமைப்பு நிரூபிக்கின்றது.

குர்ஆன் 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்பட்டு கொண்டே வந்தது. இதை அனைவரும் அறிவோம். நபிகள் நாயகத்திற்கு ஆரம்பத்தில் எழுதத் தெரியாமல் இருந்து, பிறகு எழுதக் கற்றுக் கொண்டார்கள் என்றும் கூற முடியாது. எழுத கற்றுக் கொண்ட பிறகு அருளப்பட்ட குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) சுயமாக கற்பனை செய்தார் என்ற சந்தேகத்திற்கு உள்ளாகும். அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டே வந்ததால் மரணிக்கும் வரை எழுதத் தெரியாமல் இருப்பது தான் இறைவேதம் என்று திருக்குர்ஆனை நிரூபித்துக் காட்டும். இதனால் தான் இனியும் எழுத மட்டீர் என்று கூறி கடைசி வரை அவர்களை உம்மியாக எழுதப் படிக்கத் தெரியாதவராகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான்.

நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

صحيح البخاري

2698 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الحُدَيْبِيَةِ، كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ بَيْنَهُمْ كِتَابًا، فَكَتَبَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالَ المُشْرِكُونَ: لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَوْ كُنْتَ رَسُولًا لَمْ نُقَاتِلْكَ، فَقَالَ لِعَلِيٍّ: «امْحُهُ»، فَقَالَ عَلِيٌّ: مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ، فَمَحَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، فَسَأَلُوهُ مَا جُلُبَّانُ السِّلاَحِ؟ فَقَالَ: القِرَابُ بِمَا فِيهِ

2698 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம் என்று கூறினர். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், நான் அதை (ஒரு போதும்) அழிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும், என் தோழர்களும் (மக்கா நகரில்) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ஜுலுப்பா னுஸ் ஸிலாஹ்’ என்றால் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 2698

நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்தால் தானே தமது பெயரைக் கண்டுபிடித்து அழித்திருக்க முடியும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

எழுதத் தெரியாது என்று தெளிவான சான்று இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்த சந்தேகத்தைக் கீழ்க்காணும் ஹதீஸ்கள் முற்றாக நீக்கி விடுகின்றன.

صحيح البخاري

3184 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي البَرَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلَّا ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ: فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ [ص:104] بَيْنهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ» قَالَ: وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَتِ الأَيَّامُ، أَتَوْا عَلِيًّا، فَقَالُوا: مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ، فَذَكَرَ ذَلِكَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ» ثُمَّ ارْتَحَلَ

3184 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடிய போது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள் அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்ட படி தான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும் என்று எழுதினார்கள். மக்காவாசிகள், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்க மாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக் கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன் என்று கூறினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம்,   அல்லாஹ்வின் தூதர்’ என்னும் சொல்லை அழித்து விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அதை ஒரு போதும் அழிக்க மாட்டேன் என்று மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உம்ரா விற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, உங்கள் தோழரை (மக்காவை விட்டுப்) புறப்படும் படி கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆமாம் (புறப்பட வேண்டியது தான்) என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி 3184

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  எழுதவும் வாசிக்கவும் தெரியாது தமது பெயர் எந்த இடத்தில் உள்ளது கேட்டு அழித்தார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது

எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.